குழந்தைகளை அதிமேதாவித்தனமாக சித்தரிக்கும் டெலி சீரியல்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில்...
பாரதி கண்ணம்மா சீரியலில்...

சீரியல், சினிமா போன்ற விஷயங்கள் நம் நிஜ வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பதை மறுப்பதற்கில்லை. நல்ல விஷயங்களை வரவேற்பது போலவே, சில தவறான விஷயங்களுக்கும் பார்வையாளர்கள் மத்தியில் எதிர்வினைகள் வருவதையும் சமீப காலங்களில் பார்க்க முடிகிறது.

குறிப்பாக ‘பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட சில சீரியல்களில் “தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம்” போன்ற வசனங்களை குழந்தைகளை பேச வைத்ததற்கு கடும் எதிர்வினைகள் சமூக வலைதளங்களில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களை பெற்றோர்களும் கலைத்துறையை சார்ந்தவர்களும் எப்படி கையாள வேண்டும், இதுபோன்ற விஷயங்களை குழந்தைகளை பேச வைப்பதால் வரும் சிக்கல்கள் என்னென்ன என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

இந்த விஷயம் தொடர்பாக சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அரசர் சீராளரிடம் பேசினோம். “சீரியல், சினிமாக்களில் அடல்ட் விஷயங்களை குழந்தைகளை வைத்து பேச வைக்கும் போக்கு சமீப காலங்களில் அதிகமாகி வருகிறது என்றே சொல்ல வேண்டும். இதன் மூலம் மிகப்பெரிய அநீதியையும் தவறையும் சமூகத்திற்கு இழைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும். பெரியவர்கள் பேசுவது, நடந்து கொள்வது போன்ற எண்ணங்கள் குழந்தைகளுக்கு வராது. அவர்கள் பெரும்பாலும் அப்படி பேசவும் மாட்டார்கள்.

அம்மா, அப்பாவுடன் இணைந்து சீரியலைப் பார்க்கிறோம் என்றுதான் குழந்தைகளும் சொல்கிறார்கள். அனைத்து பிரபலமான சீரியல்களின் பெயர்களையும் அவர்கள் தெரிந்தும் வைத்திருக்கிறார்கள். தற்கொலை, பழிவாங்குவது போன்ற எண்ணங்களும் சினிமா, சீரியல்களில் மட்டுமல்லாது சில விளம்பரங்களிலும் காட்சிப்படுத்துகிறார்கள். இதை எல்லாம் முறைப்படுத்த நிச்சயம் நாம் ஆணையம் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவர் அரசர் சீராளர்
மருத்துவர் அரசர் சீராளர்

ஏனெனில் பொதுவாக வீட்டில் இதுபோன்ற சூழ்நிலைகள் இல்லாவிட்டால்கூட குழந்தைகள் சீரியல், சினிமாவைப் பார்த்து மாறிவிடக் கூடிய அபாயம் அதிகம் இருக்கிறது. இதுதான் நிஜம் என்று நம்பி நடைமுறைப்படுத்தி விடவும் கூடும். இந்தப் பொறுப்பு பெற்றோருக்கும் இயக்குநருக்கும் நிச்சயம் வேண்டும். இதை குழந்தைகள் வன்கொடுமை சட்டத்தில் எடுத்து வரலாமா என்று சிந்திக்கும் அளவுக்கு இந்த காலத்தில் அளவு மீறி போய்க் கொண்டு இருக்கிறது” என்றவரிடம் சமூக வலைதளங்களில் குழந்தைகளை வைரலக்கும் பொருட்டு பெற்றோரே அவர்களை முன்னிறுத்தும் செயல் குறித்தும் கேட்டோம்.

“அதுவும் தவறான விஷயம்தான். குழந்தைகளை திருக்குறள் ஒப்புவிக்க வைப்பது, பட வசனங்களைப் பேச வைப்பது என பல விஷயங்களை இந்த டிஜிட்டல் யுகத்தில் செய்கிறார்கள். ஒன்றிரண்டு குழந்தைகள் செய்வதைப் பார்த்து தங்கள் குழந்தையும் இப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு பெற்றோரும் ஆளாகி குழந்தைகளையும் ஆளாக்குகிறார்கள். எல்லா விஷயங்களுக்குமே ஒரு கால நேரமும் தகுதியும் இருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்காமல் அவர்கள் இயல்பிலேயே விடுவதுதான் அவர்களுக்கு நல்லது” என்றார்.

சீரியல்களின் ஆபத்தான இந்தப் போக்கு குறித்து பெயர் வெளியிட விரும்பாத சீனியர் சின்னத்திரை நடிகை ஒருவர் நம்மிடம் வருத்தப்பட்டு பேசுகையில், “முன்பெல்லாம் டிவி சீரியல்கள் என்பது குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் தரமான பொழுதுபோக்கு விஷயமாக இருந்தது. குழந்தைகளுக்கு என்று சினிமாக்கள் வருவது போலவே, அப்போதெல்லாம் சீரியல்களும் வந்தது. மாயாஜாலம், ஃபேண்டசி உலகம் என்று அந்த சீரியல்கள் எல்லாம் இப்போது திரும்பிப் பார்த்தாலும் நல்லதொரு உணர்வு தரக்கூடிய வகையில் இருக்கும். ஆனால், இப்போது டிஆர்பி என்ற ஒரு விஷயம் சீரியல் தரப்பில் மிகப் பெரிய அளவில் அழுத்தம் தரக்கூடியதொரு விஷயமாக மாறி இருக்கிறது.

இதற்காக இயல்பிற்கும் மாறாக, திட்டினாலும் பரவாயில்லை என்று சில விஷயங்களைச் செய்தாக வேண்டிய கட்டாயத்துக்கு இயக்குநர்கள் தள்ளப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதற்கிடையிலும் முற்போக்கு விஷயங்கள் பேசும் சில சீரியல்களும் நல்ல டிஆர்பி பெற்று வருகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தற்கொலை, ஆணாதிக்கம், பழிவாங்குதல் போன்ற விஷயங்கள் நிஜத்திலும் பலரது குடும்பங்கள் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சீரியலிலும் பொறுப்பான விஷயங்களை இயக்குநர்கள் கொண்டு வர வேண்டும். தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் குழந்தைகளை இதுபோன்ற விஷயங்களுக்கு நடிக்க வைப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை” என்றார்.

குழந்தைகளை வைத்து சீரியல்களை இயக்கும் இயக்குநர்கள் இனியாவது இதையெல்லாம் கவனத்தில் கொள்வார்களா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in