
மறைந்த பிரபல விஜே ஆனந்த கண்ணனின் பிறந்தநாளான இன்று அவரது மனைவி எமோஷனலான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சன் டிவி, சன் மியூசிக் சேனல்களில் தொண்ணூறுகளில் பிரபல விஜேவாக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிந்துபாத் உள்ளிட்ட சில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து இருந்தார். தொண்ணூறுகளின் பிற்பகுதி காலக்கட்டத்தில் தனியார் சேனல்களும் அதன் நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் பிரபலமாக இருந்த காலக்கட்டம். குறிப்பாக சன் மியூசிக் சேனல் பல இளைஞர்களுக்கும் பிடித்த ஒன்றாக இருந்தது. அதில் விஜேவாக பணிபுரிந்த ஆனந்த கண்ணன், ஹேமா, பிரஜன் உள்ளிட்ட பலருக்கும் இன்றும் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பிறகு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் இருந்து ஆனந்த கண்ணன் விலகி தனது சொந்த ஊரான சிங்கப்பூரில் மனைவி, குழந்தைகளுடன் வசித்து வந்தார். சிங்கப்பூரில் தமிழ் பண்பாட்டு கலைகளான பொம்மலாட்டம், தெருக்கூத்து, கரகம், பறை போன்றவற்றை அங்குள்ள மாணவர்களுக்கு கற்று கொடுக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வந்தார். தமிழ் கலையையும் பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதே இந்த அமைப்பின் நோக்கம் என்றும் தன்னுடைய பேட்டிகளிலும் சொல்லி இருப்பார்.
அப்படி இருக்கும் போது 48 வயதான ஆனந்த கண்ணன் கடந்த ஆகஸ்ட் மாதம் புற்று நோயால் இறந்தது யாருமே எதிர்பாராதது. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள், இவருடன் பணிபுரிந்த சின்னத்திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் தங்களது வருத்தத்தை பதிவு செய்திருந்தனர். ஆனந்த கண்ணன் மறைந்து ஆறு மாதங்கள் கடந்திருக்கும் நிலையில், இன்று அவரது பிறந்தநாள். அவரது பிறந்தநாளுக்கு அவரது மனைவி ராணி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் என் காதலே! எங்கும் நிறைந்திருக்கும் என் அன்பனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்’ என பதிவிட்டு அவர் கேக் வெட்டுவது போன்ற ஒரு பழைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவின் கீழே பலரும் ஆனந்த கண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்லியும் அவரை மிஸ் செய்வதாகவும் கமெண்ட்டில் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல கடந்த மாதம் இவர்களது 24-வது திருமண நாள் வந்த போதும் இதனை கொண்டாடுவது போன்ற பழைய புகைப்படத்தை பகிர்ந்து, ‘நீ விட்டு சென்ற அன்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 24-வது திருமண நாள் வாழ்த்துகள்’ என்று பதிவிட்டுள்ளார்.