சின்னத்திரை கதாநாயகர்கள் சினிமாவில் ஜொலிக்கமுடியாமல் போவது ஏன்?

‘நினைத்தாலே இனிக்கும்’ ஆனந்த் செல்வன் பேட்டி
ஆனந்த் செல்வன்
ஆனந்த் செல்வன்

’ஆயுத எழுத்து’, ‘உயிரே’ சீரியல்கள் மூலம் பரிச்சயமான ஆனந்த் செல்வன் தற்போது ஜீ தமிழ் சேனலில், ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் பயங்கர பிஸி. “ஷூட்டிங் இப்போதான் முடிந்தது. பேசிடலாம், ரெடி” என்றவரிடம் மளமளவென கேள்விகளை அடுக்கினோம். அதற்கு அவர் தந்த பதில்களிலிருந்து...

நினைத்தாலே இனிக்கும்’ சித்தார்த்தாக இருப்பது கஷ்டமா அல்லது ஆனந்தாக இருப்பது கஷ்டமா?

எனக்கு சிதார்த்தாக இருப்பதுதான் கஷ்டம். ஆனந்தாக எல்லாரிடமும் ஜாலியாக சிரித்துப் பேசிக்கொண்டிருப்பது எளிது. ஆனால், சித்தார்த் எப்போதும் கோவமாக, மன அழுத்ததுடன் அமைதியாகவே இருப்பான். எப்போதாவதுதான் அவனிடம் மகிழ்ச்சியைப் பார்க்க முடியும். ஆனந்திற்கு அப்படியே நேர் எதிர்.

இந்தக் கதையும் கதாபாத்திரமும் கேட்கும்போது ஆர்வமாக இருந்தது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு மேல் சித்தார்த்தாக பயணித்து வருகிறேன். காலை 9 மணிக்கு ஆரம்பித்து இரவு 9 மணி வரை அவனாகவே இருந்ததால் வீட்டிலும் அப்படியே மாறி விட்டேன். “ஷூட்டிங் வேறு; வாழ்க்கை வேறு. படப்பிடிப்பு முடிந்ததும் ரியாலிட்டிக்கு வா” என அம்மா சொல்லுமளவுக்கு அந்த கதாபாத்திரமாகவே மாறிவிட்டேன்.

மீடியா துறைக்குள் வந்த இத்தனை வருடங்களில் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயமாக இருந்தது எது?

‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலுக்கு முன்பே நான் இரண்டு சீரியல்களில் கதாநாயகனாக நடித்து விட்டேன். அவை கிட்டத்தட்ட 200 எபிசோட்களில் முடிந்துவிட்டது. ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலை விட அவற்றின் வரவேற்பு கொஞ்சம் குறைவாகவே இருந்தது. இதனால், இந்த சீரியலில் என்னைக் கமிட் பண்ணும்போதே, ராசியில்லாத நடிகர் என்ற ரீதியிலான பேச்சும் என்னைச் சுற்றி இருந்தவர்களே சொன்னார்கள். அதைக் கேட்டுக் கேட்டு, ஒருவேளை நாம் அப்படித்தானோ என்ற எண்ணத்தை எனக்கே வர வைத்துவிட்டார்கள்.

இத்தனையும் தாண்டி தான் என்னை ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியலில் கமிட் செய்தார்கள். அதனால், எனக்கும் ஆரம்பத்தில் அந்த பயம் இருந்தது. பிறகு சீரியல் டி.ஆர்.பியில் நல்ல வரவேற்பைப் பெற்றதும் எனக்கு நம்பிக்கை வர ஆரம்பித்து விட்டது. இதையெல்லாம் ஆரம்பத்தில் எதிர்கொண்டது கடினமாக இருந்தது.

இதுபோன்ற விஷயங்களால் உங்களை நீங்களே ஏதேனும் ஒரு விஷயத்தில் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று நினைத்தது உண்டா?

வீட்டில் நான் கடைசிப் பையன் என்பதால் பயங்கர செல்லம். ஆனால், அதெல்லாம் சென்னைக்கு நடிக்க வருவதற்கு முன்புதான். சினிமாவுக்குள் முதலில் நான் உதவி இயக்குநராகத்தான் வந்தேன். அப்போது அங்கு என்னிடம் எல்லாரும் சொன்னது, “நீ திறமையானவனாக இருப்பதை விட நல்லவனாக இருப்பதுதான் முக்கியம். சினிமாவை நீ உண்மையாக விரும்பினால் அது உனக்கு திருப்பித் தரும்” என்பதுதான். அதுதான் உண்மை. அதனால், எதையும் மாற்றிக் கொள்ளாமல் என் திறமையை நம்பி உண்மையாக இருக்கிறேன். இயக்குநராக க்ரைம் த்ரில்லர் கதைகள் இயக்குவது பிடிக்கும்.

எனக்கு நடிப்பு பிடிக்கும் இயக்குவதிலும் ஆர்வம் உண்டு. இயக்குவது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், நடிப்பது இந்த வயதில் செய்வதுதான் சரியாக இருக்கும். என் சினிமா, சீரியல் அனுபவத்தில் சொல்கிறேன். சினிமாவில் நடிப்பதை விட சீரியலில் நடிப்பதுதான் கஷ்டம்.

நீங்கள் தீவிர ரஜினி ரசிகராமே... ‘பாபா’ மாதிரி ரஜினியின் வேறு எந்தப் படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்?

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ஆமாம்! ரசிகன் என்பதைத் தாண்டி அவருடைய எல்லாமுமே என்று சொல்வேன். சென்னை வந்த முதல் நாளில் இருந்து, நான் அடிக்கடி கேட்கும் பாடல் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’தான். நான் புது டிவி, மொபைல், ஸ்பீக்கர் என எது வாங்கினாலும் முதலில் அந்தப் பாடலைத்தான் ப்ளே செய்வேன். அதை ஒரு சென்டிமென்ட்டாகவே வைத்திருக்கிறேன். எப்போதெல்லாம் சோர்வாக உணர்ந்து, திரும்ப ஊருக்கே போய் விடலாம் என்று தோன்றுமோ அப்போதெல்லாம் ரஜினி சாரின் இந்தப் பாடலும், அவரது பேச்சும் எனக்கு உற்சாகம் கொடுக்கும்.

‘பாபா’ போல ‘முரட்டுக்காளை’, ‘தளபதி’ ஆகியப் படங்களை மீண்டும் வெளியிடலாம். இந்தப் படங்களை அதிகம் நான் டிவியில்தான் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, ‘தளபதி’ படம் ஒவ்வொரு முறையும் பார்க்கும்போதும் ஒவ்வொரு புரிதல் வரும். இந்தப் படங்களை திரையரங்குகளில் ரசிகர்களுடன் பார்க்க விரும்புகிறேன். ’ஜெயிலர்’ படப்பிடிப்பில் ரஜினி சாரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சீக்கிரம் அது நடக்கும் என நினைக்கிறேன். கமல் சாரை நேரில் சந்தித்த போது அந்த மகிழ்ச்சியில் என்னால் பேச முடியாமல் நின்றேன். அதுபோல தான், ரஜினி சாரை பார்க்கும்போதும் பேச்சு வராது என்று நினைக்கிறேன்.

70’, 80’-ஸ் கதாநாயகர்களைப் போல எந்த கதாநாயகியை இப்போதும் பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று விருப்பப்படுகிறீர்கள்?

நிச்சயமாக தேவயானி! அவர் கதாநாயகியாக இன்னும் கொஞ்ச நாள் நடித்திருத்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறேன். அவர் நடித்த படங்களில் பெரும்பாலும் சாஃப்ட்டான கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். எதிர்மறை கதாபாத்திரம் அவர் நடித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் போன ப்ரியாபவானி சங்கர், வாணி போஜன் போன்றவர்கள் வெற்றிப் பெறும்போது, சின்னத்திரை கதாநாயகர்கள் பெரும்பாலும் சினிமாவில் ஜொலிக்காமல் போக என்ன காரணம்?

எல்லாமே நேரம் என்றுதான் சொல்ல வேண்டும். சிவகார்த்திகேயன் சார் தேர்ந்தெடுத்தப் படங்கள் அனைத்துமே நல்ல புராஜெக்டாக இருந்தது. அதுபோல, எந்த ஒரு நடிகருக்குமே முதல் மூன்று படங்கள் முக்கியமானது. அதில் தவறவிட்டிருக்கலாம். நன்றாக நடிக்கத் தெரிந்திருந்தும், திறமை இருந்தும் முதல் படத்தில் சொதப்பி, அடுத்தடுத்து பார்வையாளர்களை பிடிக்க வைக்காமல் இருந்தால் அது வெற்றி பெறாமல் போய்விடும். இதுதான் காரணம் என நினைக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in