அப்படி நான் பார்த்து நெகிழ்ந்த படம் தனுஷின் ‘விஐபி’ !

‘உள்ளத்தை அள்ளித்தா’ ப்ரித்விராஜ் பேட்டி
ப்ரித்விராஜ்
ப்ரித்விராஜ்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் ‘உள்ளத்தை அள்ளித்தா’ சீரியல் மூலம் தமிழ் சீரியலுக்குள் அடியெடுத்து வைத்தவர் நடிகர் ப்ரித்விராஜ். பொறியியல் டூ நடிப்பு, கன்னட சினிமாவுக்கு சமீபத்தில் கிடைத்துள்ள உலக அங்கீகாரம், தனுஷின் மறக்க முடியாத அம்மா பாட்டு எனப் பல விஷயங்கள் குறித்து அவர் காமதேனுவிடம் பகிர்ந்துகொண்டதிலிருந்து...

‘உள்ளத்தை அள்ளித்தா’ சீரியல் மூலம் தமிழ் மீடியா உங்களுக்கு எப்படி வரவேற்புக் கொடுத்திருக்கிறது?

சீரியல் ஆரம்பித்து ஆறு மாதத்திற்கு மேல் ஆகிறது. ஆரம்பித்து இவ்வளவு நாட்கள் போனதே தெரியவில்லை. இந்த சீரியலுக்கு ரசிகர்களிடம் இருந்தும் என்னுடைய வட்டாரத்தில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்திருக்கும் எனக்கு எந்தவிதமான பாகுபாடும் காட்டாமல் படப்பிடிப்புத் தளத்தில் நிறைய உதவி செய்திருக்கிறார்கள். இது ஏற்கெனவே கன்னடத்தில் வெற்றி பெற்ற சீரியல். தமிழிலும் அதே வரவேற்பை மக்கள் கொடுத்து வருகிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

பொறியியல் படித்துவிட்டு மீடியாவுக்குள் வந்திருக்கிறீர்கள்... இது திட்டமிட்டதா இல்லை எதார்த்தமாக நடந்ததா?

வீட்டுக்கு நான் ஒரே பிள்ளை. எந்த அளவுக்கு அன்பு இருந்ததோ அதேபோல, கண்டிப்பும் இருந்தது. அப்பா, அம்மா இருவரும் அரசு வேலைகளில் இருப்பவர்கள். பொறியியல் படித்துவிட்டு, நான் அரசு வேலை பார்க்க வேண்டும் என்று தான் அவர்கள் விரும்பினார்கள். நான் தான் நடிக்க வேண்டும் என்ற ஆசை வந்து அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். வீட்டில் சொன்னபோது, “உனக்குப் பிடித்ததைச் செய்” என்று சம்மதம் சொன்னார்கள்.

ஆனால், துறைக்குள் வந்து வாய்ப்பு கிடைத்தது என்பது அத்தனை எளிதாக இல்லை. ஆரம்பத்தில் நிறைய சவால்கள் இருந்தது. உயரமாக இருக்கிறேன். இன்னும் நன்றாக நடிக்க வேண்டும் என்று ஏதேதோ காரணங்கள் சொல்லி நிராகரித்தார்கள். “ஏன் இந்த சிரமம்... நடிப்பே வேண்டாம் வந்துவிடு” என்றும் சொன்னார்கள். யாரையும் முழுமையாக திருப்திப்படுத்த முடியாது என்பதை புரிந்து கொண்டேன். வெள்ளைத்தாள் இருந்தாலும் அங்கு இருக்கும் கருப்பு புள்ளிதான் பலருக்கும் குறையாகத் தெரியும். அதனால், என்னுடைய சிறந்ததை அனுபவத்தில் இருந்தும் நான் கற்றுக் கொண்டவைகளில் இருந்தும் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

சினிமா, சீரியல் என இரண்டிலும் வரும் வாய்ப்புகளில் எனக்குச் சிறந்தது எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன். இதில்தான் நடிக்க வேண்டும் என்றில்லை. இப்போதைக்கு அதன் போக்கில் நடக்கட்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது.

கேஜிஎஃப்’, ‘காந்தாரா’ எனத் தற்போது கன்னட சினிமாக்கள் உலக அளவில் கவனம் குவிக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கன்னட சினிமா, இந்தி சினிமா என்றில்லை. சினிமா என்பது இப்போது பொதுவாகிவிட்டது என்றுதான் நினைக்கிறேன். கன்னட சினிமாக்கள் அதன் ஆரம்ப காலத்தில் இருந்தே சிறந்த படங்களைக் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. ராஜ்குமார் இருந்த காலத்தில் வந்த படங்கள் எல்லாம் கன்னட சினிமாவின் பொற்காலம் என்று சொல்வேன். இப்போது பான் இந்தியா, ஓடிடி எனத் தளங்கள் பெரிதாகி இருப்பதால் பல தரப்பிலான பார்வையாளர்களிடம் இது போய் சேர்ந்துள்ளது.

பொதுவாக, சீரியல் என்றாலே பெண்களுக்குதான் முக்கியத்துவம் இருக்கும். இந்த சீரியலிலும் ’ஆட்டோ ராணி’ என கதாநாயகிதான் எல்லாம். இதை எப்படிப் பார்க்கறீர்கள்?

நல்ல விஷயம்தானே! என்னுடைய சந்தோஷ் கதாபாத்திரம் முற்றிலும் எதிர்மறை என்று சொல்ல முடியாது. ஆனால், கொஞ்சம் அப்படிதான். பணம் மட்டுமே முக்கியம் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனாலும், வீட்டில் உள்ள அனைத்து உறவுகளும் தனக்கு வேண்டும் என்று நினைப்பவன். குறிப்பாக, அம்மா செல்லம்.

ராமாயணத்தில் ராமனுக்கு சீதை எப்படிக் கட்டுப்பட்டாரோ அப்படிதான் சந்தோஷூம். நிஜத்திலும் நான் அப்படித்தான். அதனால், என்னுடைய நிஜ கதாபாத்திரத்தைப் பொருத்திக் கொண்டு என்னால் இதில் நடிக்க முடிந்தது. இதனாலேயே, சீரியலில் எனக்கும் கதாநாயகிக்கும் விட அம்மாவுக்கும் எனக்குமான பிணைப்பு நன்றாகவே இருக்கும்.

அம்மா செல்லம் என்கிறீர்கள்... அம்மா சென்டிமென்ட் படம் என்றதும் உங்களுக்கு முதலில் நினைவுக்கு வருவது எது?

சமீபத்தில் அப்படி நான் பார்த்து நெகிழ்ந்த படம் தனுஷின் ‘விஐபி’ தான். எனக்கு மட்டுமல்ல... என்னைப் போல இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் பலருக்கும் இந்தப் படமும் பாட்டும் நிச்சயம் கனெக்ட் ஆகியிருக்கும் என நம்புகிறேன். நான் எமோஷனலான நபர் கிடையாது என்று சொல்பவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்க்கும் போது நிச்சயம் எமோஷனல் ஆவார்கள்.

புது வருடத்தில் என்ன திட்டம்?

முன்பே சொன்னது போலதான். வாழ்க்கையில் இப்போதைக்கு பெரிதாக எந்தவிதமான திட்டமும் இல்லை. அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாமல் மகிழ்ச்சியாக இருங்கள். நிச்சயம் எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in