
‘ராஜா ராணி2’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா அதில் இருந்து விலக இருக்கும் நிலையில் அவருக்கு பதிலாக ஒரு மாடல் நடிக்க இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘ராஜா ராணி’ சீரியலின் வெற்றிக்கு பிறகு அதன் இரண்டாவது சீசன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதில் ஆல்யா மானசா கதாநாயகியாக நடிக்க சித்தார்த் கதாநாயகனாக நடித்தார். தன்னுடைய முதல் குழந்தை பிரசவத்திற்கு பிறகு எடை கூடியிருந்த ஆல்யா ‘ராஜா ராணி’ சீரியல் வாய்ப்பு வந்ததும் அதற்காக எடை குறைத்து இதில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்போது ஆல்யா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார். அவருடைய இரண்டாவது குழந்தை இந்த மாத இறுதியில் எதிர்ப்பார்ப்பதாக ஆல்யா தனது சமூக வலைதள பக்கங்களில் சொல்லி இருந்தார். இன்று வரையுமே அவர் ‘ராஜா ராணி2’ ஷூட்டிங்கிற்கு சென்று வரும் நிலையில் பிரசவத்திற்கு பிறகு அவர் சிறிது காலம் சீரியலை விட்டு விலகி இருப்பார் என சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்பு ஆல்யா சீரியலை விட்டு விலகும் போது அவர் இல்லாதபடி கதையில் மாற்றங்கள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆல்யா போன பிறகு சிறிது காலம் வரைக்கும் வேறொருவர் கதாநாயகியாக நடிப்பார் என்கிறார்கள். மாடலான ரியா தான் அந்த கதாநாயகி. ஆல்யா வரும் வரை சந்தியா கதாப்பாத்திரத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.
சென்னையை சேர்ந்த மாடலான ரியா ‘ராஜா ராணி2’ சீரியல் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். இவர் இதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் எழில் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் விஷாலின் கேர்ள் ஃப்ரெண்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆல்யாவுக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் ரியா வரும் காட்சிகள் அடுத்த மாதத்தில் இருந்து ஒளிபரப்பாகும் என எதிர்ப்பார்க்கலாம். விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கலாம்.