
நடிப்பு, நடனம், நிகழ்ச்சி தொகுப்பு என பன்முகத் திறமை கொண்டவர் நடிகை ஸ்வேதா சுப்ரமணியன். பிஸியான மதிய வேளையில் காமதேனு டிஜிட்டலுக்காக அவரிடம் பேசினோம். நடிப்பு, மீடியா பயணம், சந்தித்த வெற்றி, தோல்விகள் என பலவற்றையும் குறித்து பகிர்ந்து கொண்டார்.
நடிகை, தொகுப்பாளினி என மீடியா துறையில் உங்கள் பயணம் எளிதானதாக இருந்ததா?
மீடியாத் துறைக்குள் நான் வருவதற்கு முக்கிய காரணம் நடனம்தான். மீடியாவுக்குள் வரவேண்டும் என்பதற்காக நான் நடனம் கற்கவில்லை. அந்த வாய்ப்பு எனக்கு தானாகவே அமைந்தது. கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நமக்கு கொடுத்த வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பேன். அப்படிதான் எனக்கு ‘தில்லானா தில்லானா’ சன் டிவி நடன வாய்ப்பு என்னுடைய நடன வகுப்பு மூலம் வந்தது. இதற்கடுத்து, ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நடன நிகழ்ச்சிதான் எனக்கு மிகப்பெரிய வெளிச்சத்தைக் கொடுத்தது. நான் கொஞ்சம் சென்சிடிவான நபர் என்பதால், சட்டென்று அழுதுவிடுவேன்.
எனது குரல், கொஞ்சி கொஞ்சி பேசுவது என இதெல்லாம் நான் வேண்டுமென்றே செய்கிறேன் என நிறைய நெகட்டிவான கமென்ட்ஸ் வந்து கொண்டே இருந்தது. இதற்காக என்னுடைய அம்மா, அப்பாவைக் கூட திட்டினார்கள். ஆனால், அவர்கள் எனக்கு முழு ஆதரவு கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். “உனக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய். ஆனால், படிப்பை எக்காரணத்தை முன்னிட்டும் விட்டு விடாதே” எனச் சொன்னார்கள்.
நடனத்தில் இருந்த கவனம் எப்போது நடிப்பு பக்கம் திரும்பியது?
முழு நேரமாக நடிப்புப் பக்கம் கவனம் திரும்பியது ‘கார்த்திகை பெண்கள்’ சீரியலின் போதுதான். திருமுருகன் சார்தான் அந்த வாய்ப்பை எனக்குக் கொடுத்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தது. மக்களும் நடிகையாக என்னை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சி.
நடிப்பு, நடனம் என உங்கள் குடும்பத்தின் ஆதரவு எப்படி இருக்கிறது?
நான் குடும்பத்தில் மூன்றாவது பெண் குழந்தை. மூன்றாவது பெண் குழந்தை என்றதும் அனைவரும் கவலையாகிவிட்டார்கள். ஆனால், என் அப்பாதான், “எந்த குழந்தையாக இருந்தால் என்ன” என்று என்னை மகிழ்ச்சியுடன் அரவணைத்தார். அவர் ஆர்மியில் வேலை பார்த்தவர். பெண்களை மதித்து, அவர்களின் ஆசைகளுக்கு மதிப்புக் கொடுக்கும் முற்போக்குவாதி அவர். இதுவேதான் என் எண்ணமும். ஆணோ பெண்ணோ அவரவர் எண்ணங்களை மதித்து அவர்களுக்குண்டான சுதந்திரம் கிடைக்க வேண்டும். அப்பா மட்டுமல்ல, அம்மாவும் மிக தைரியமான பெண்மணி. அவர் அழகாக இல்லை, மூன்று பெண் குழந்தைகள் என அம்மாவை எங்கள் குடும்பத்திலேயே யாரும் ஊக்குவிக்கவில்லை. ஆனால், அவர் அப்பாவின் மீது இருந்த நம்பிக்கை காரணமாக அவ்வளவு அழகாக எங்களை வளர்த்து நம்பிக்கை கொடுத்தார்.
அம்மா, அப்பா மீது வைத்திருக்கும் இந்த அன்பினால்தான் தற்கொலை எண்ணம் பலமுறை வந்தபோதும் அது வேண்டாம் என தவிர்த்திருக்கிறேன்.
இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ரிலேஷன்ஷிப் அட்வைஸ் என்னவாக இருக்கும்?
அட்வைஸ் என்று சொல்ல முடியாது. ஆனால், என் அனுபவத்தில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களைச் சொல்கிறேன். ஆண்-பெண் உறவில் நம்பிக்கையும் மரியாதையும் மிக முக்கியம். நான் உன்னை காதலிக்கிறேன் என்பதற்காகவே இந்த விஷயத்தை நீ செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்தக் கூடாது. தானாக விருப்பப்பட்டு செய்வது என்பது வேறு, ஒருவரைக் கட்டாயப்படுத்தி செய்ய வைப்பது என்பது வேறு. உறவில் இருப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல, உங்கள் கரியரும் மிக முக்கியமானது. அதனால், குடும்பத்தைப் போலவே, உங்களது வளர்ச்சியிலும் கவனம் செலுத்துங்கள்.