‘ஜெயிலர்’ படத்தில் வாய்ப்பை தவறவிட்டேன்!

நடிகை சங்கீதா பேட்டி
நடிகை சங்கீதா
நடிகை சங்கீதா

‘அரண்மனைக்கிளி’, ‘திருமகள்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தவர் நடிகை சங்கீதா. சீரியல்கள் மட்டுமல்லாது, ‘மாஸ்டர்’, ‘பாரீஸ் ஜெயராஜ்’ ஆகிய படங்களிலும் நடித்திருக்கும் அவர், தனது சீரியல், சினிமா பயணம் குறித்து காமதேனுவிடம் பேசியதிலிருந்து...

இன்ஸ்டாகிராமில் உங்களது போட்டோஷூட்டுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறதே..?

ஆமாம்! நிறையப் பேர் என்னுடைய போட்டோஷூட் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருக்கிறார்கள். இந்த போட்டோஷூட்களுக்காகவே நான் மெனக்கிட்டு உடைகள் தேடிப்பிடிப்பதாகவும் நினைத்துக் கொள்கிறார்கள். அப்படிக் கிடையாது! எனக்கு நன்றாக உடைகள் உடுத்தப் பிடிக்கும். அப்படி நல்ல உடைகள் உடுத்தி இருக்கும்போது எடுக்கும் புகைப்படங்கள் தானே அவை தவிர, போட்டோஷூட்க்காக என்று தனியாக உடைகள் எதுவும் எடுப்பதில்லை.

அதிலும் சில புகைப்படங்களைப் பார்த்துவிட்டு, அதிக கிளாமராக இருக்கிறது என்றும் சில கமென்ட்ஸ் பார்க்க முடிகிறது. எனக்கு எந்த உடை வசதியாக இருக்கிறதோ அதைத்தான் நான் உடுத்துகிறேன். இது எனக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும். அடுத்தவர் என்ன சொல்கிறார்கள் என்பதை விடுத்து உங்களுக்கு விருப்பமான, வசதியாக இருக்கும் உடைகளை அணியுங்கள்.

படங்களில் கிளாமர் கதாபாத்திரம் வந்தால் நடிப்பீர்களா?

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு அதிக அளவில் டாக்டர் கதாபாத்திரமே சினிமாவில் வந்து கொண்டிருந்தது. நான்தான், மாற்றத்திற்காக ஒரு படத்தில் கிளாமராக நடித்தேன். பிறகு, அதுவே எல்லாரும் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அது என் நோக்கமல்ல. ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்ட வேண்டும் என நினைக்கிறேன். சிலர், சினிமாவில் கிளாமர் அதிகம் கேட்கிறார்கள் என்றுதான் சீரியலுக்கு திரும்ப வந்து விட்டீர்களா என கேட்கிறார்கள். நிச்சயம் இல்லை!

அதிக அளவில் கிளாமர் கதாபாத்திரங்கள் வந்தது என்பது உண்மைதான். ஆனால், அதற்காக சீரியலுக்கு மீண்டும் வரவில்லை. சீரியல் எப்போதுமே எனக்குத் தாய்வீடு தான். சினிமாவில் எனக்கான நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது நிச்சயம் மறுக்க மாட்டேன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த நீங்கள் அடுத்து ‘லியோ’விலும் இருக்கிறீர்களா?

நடிகை சங்கீதா
நடிகை சங்கீதா

‘மாஸ்டர்’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு நல்ல கவனம் கிடைத்தது. அதன் பிறகு ‘LCU’-ல் இருக்க வேண்டும் என்று ‘லியோ’ படத்திலும் வாய்ப்புக் கேட்டு முயற்சி செய்தேன். ஆனால், அந்த கதையில் என் கதாபாத்திரத்திற்கான தேவை இல்லாததால், என்னால் நடிக்க முடியவில்லை. ‘லியோ’ திரைப்படம் நன்றாக வந்திருப்பதாக படக்குழுவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். உங்களைப் போலவே, நானும் ‘லியோ’ படத்திற்காக காத்திருக்கிறேன். ‘லியோ’ போலவே நான் தவறவிட்ட இன்னொரு படம் ‘ஜெயிலர்’. அந்தப் படத்தில் நான் நடிப்பது உறுதியாகி கிட்டத்தட்ட காஸ்ட்யூம் டிரையல் வரைக்கும் வந்தது. ஆனால், கடைசி நேரத்தில் சில காரணங்களால் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. அதில் எனக்கு வருத்தமே!

சீரியலில் நடிப்பதால், சினிமா வாய்ப்புகள் அதிகம் வருவதில்லை என்ற குற்றச்சாட்டு உண்மைதானா?

சீரியல் நடிகர்களுக்கு சினிமாத்துறையில் வாய்ப்பு தருவதற்கு ஒரு தயக்கம் சினிமாத்துறைக்குள் முன்பு இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது சினிமாவில் நடிப்பவர்களே, சீரியல்கள் பார்க்கிறோம் என்று பாராட்டிக் குறிப்பிடும் அளவுக்கு இந்த விஷயம் மாறி இருப்பதாகவே உணர்கிறேன். சீரியல், நம்மை தினமும் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும். படம் வெளியாகும் அந்த நேரத்தில் மட்டும் நம் கதாபாத்திரம் அதிகம் பேசப்படும். மற்றபடி இதைக் குற்றச்சாட்டு என்ற ரீதியில் பெரிது படுத்த விரும்பவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in