பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடக்கூடாது!

- ’வித்யா நம்பர் 1’ தேஜஸ்வினி கெளடா பேட்டி
தேஜஸ்வினி கௌடா
தேஜஸ்வினி கௌடா

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'வித்யா நம்பர்1’ சீரியல் ஷூட்டில் பரபரப்பாக இருந்தார் தேஜஸ்வினி கெளடா. தெலுங்கு, தமிழ் என மாறி மாறி பறந்து கொண்டிருப்பவருடன் சீரியல் ஷூட்டின் மதிய இடைவேளையில் சின்னதாய் ஒரு உரையாடல் நிகழ்த்தினோம்.

’வித்யா நம்பர்1’ சீரியல் ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. எப்படி போகுது இந்தப் பயணம்?

ஒருவருடம் போனதே தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் என்னுடைய முதல் சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல்தான். இந்த சீரியல் முடித்து கிட்டத்தட்ட ஒரு எட்டு மாதங்கள் கழித்து தான் இதில் நான் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

’வித்யா நம்பர் 1’ சீரியலில் கதாநாயகி என்று மட்டுமில்லாமல் இந்த கதாபாத்திரமும் எனக்கு பிடித்திருந்தது. என்னுடைய முந்தைய சீரியலை விடவும் இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கிறது. “நீங்கள் ‘வித்யா நம்பர் 1’-ல் தானே நடிக்கிறீர்கள்?” என நிறைய பேர் கேட்கிறார்கள். இப்படி எல்லாம் எனக்கு அமைய வேண்டும் என்றுதான் காத்திருந்தேன். அது அமையும் என்று தெரிந்ததால் இந்த சீரியலில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்தத் துறைக்குள் வந்த பிறகு உங்களுக்கு சவாலாக இருக்கக்கூடிய விஷயமாக எதை சொல்வீர்கள்?

நான் பயங்கரமாக வேலை செய்யக்கூடிய ஒரு நபர். தமிழில் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். ‘சூப்பர் குயின்’ ரியாலிட்டி ஷோவிலும் நான் பங்கேற்றேன். இதெல்லாம் சேர்த்து என்னுடைய ஷெட்யூல் அதிகமாக இருந்தது. ஆனாலும், ‘சூப்பர் குயின்’ ரியாலிட்டி நிகழ்ச்சியை விடாமல் அதிலும் பங்கேற்று வந்தேன்.

அதிலும் என்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். அதற்காக, சரியாக சாப்பிடாமல், தூங்காமல் கூட இருந்திருக்கிறேன். ஆனாலும், அந்த வேலையை நான் சிறப்பாக செய்தோம் என்ற திருப்தி எனக்கு உண்டு.

இப்படி வேலைகள் இருக்கும் போது எந்தக் கட்டத்திலாவது அழுத்தமாக இருந்திருக்கிறதா?

இல்லை! ஆனால் குடும்பம், நண்பர்கள், எனக்கான நேரம் என எதுவும் இல்லாமல் இருக்கிறோமோ என்ற எண்ணம் ஒரு கட்டத்தில் வந்திருக்கிறது. முன்பே சொன்னது போல அந்த மூன்று, நான்கு மாதத்தில் வீட்டுக்குக்கூட போக நேரமில்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் எல்லாம் என் அம்மாதான் வந்து என்னைப் பார்த்துவிட்டு போவார். என்னுடைய நிச்சயதார்த்தமும் அந்த சமயத்தில் நடந்திருந்ததால் பொறுப்புகள் இன்னும் கூடி இருந்தது.

காதல் வாழ்க்கை எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?

சூப்பராக போகிறது. முன்பே சொன்னது போல பொறுப்புகள் இன்னும் அதிகமாகி இருக்கிறது. வேலையும் பார்த்துக்கொண்டு குடும்பத்தையும் கவனிப்பது கொஞ்சம் கஷ்டமாகதான் இருக்கிறது. அவரும் தெலுங்கு மீடியாவில் இயங்கக்கூடிய நபர் என்பதால் இந்தத் துறை பற்றி நன்றாகவே தெரியும். என்னையும் புரிந்து கொண்டிருக்கிறார். இப்போது நடித்தால்தான் உண்டு என என்னை ஊக்குவிப்பார். அவர் மட்டுமல்ல, அவரது குடும்பமும் அப்படிதான். டிசம்பரில் எங்களின் திருமணம் நடக்க இருக்கிறது.

இந்த துறைக்குள் வந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான விஷயமாக எதைப் பார்க்கறீர்கள்?

எதுவுமே தெரியாமல்தான் இதன் உள்ளே வந்தேன். பிறகு எல்லா விஷயங்களையும் மெல்ல மெல்லக் கற்றுக்கொண்டேன். இதில் முக்கியமாக நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்றால், நாம் எவ்வளவு பிரபலமாகி இருந்தாலும் தலைக்கனம் இருக்கக்கூடாது. அதில் நான் தெளிவாக இருப்பேன். அப்போது தான் நாம் இன்னும் பல உயரங்கள் போகலாம். இந்த ஒரு விஷயத்தை இங்கு வந்து நான் கற்றுக்கொண்டதில் முக்கியமானதாகச் சொல்வேன்.

பிக் பாஸ் வீட்டுக்குள் போகும் வாய்ப்பு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பிக் பாஸ் குறித்து நான் பெரிதாக எதுவும் யோசிக்கவில்லை. ஆனால், பொழுதுபோக்கிற்கு நிச்சயம் அது ஒரு சிறந்த நிகழ்ச்சி என்பதை மறுக்க முடியாது. தமிழில் நான் பெரிதாக பார்ப்பதில்லை. கன்னடம், தெலுங்கில் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிகளை தவறாமல் பார்த்துவிடுவேன்.

சமீபத்தில் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஏற்படுத்திய ஒரு சினிமா கதாபாத்திரம் என்றால் எதைச் சொல்வீர்கள்?

சமீபத்தில் நான் பார்த்த படம் என்றால் ‘சீதா ராமம்’ தான். நிறைய படங்கள் பார்ப்பதற்கு பட்டியலில் இருக்கிறது. ஆனால், நேரம் இல்லாததால் எல்லாம் அப்படியே இருக்கிறது. இதில் எனக்கு சீதா கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. அதேபோல, தெலுங்கில் சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘ஷ்யாம் சிங்காராய்’ கதாபாத்திரமும் என்னை இன்ஸ்பையர் செய்த ஒன்று.

வழக்கமான கதாநாயகியாக இல்லாமல், இதுபோன்ற வித்தியாசமான கதாபாத்திரங்கள் என்றால் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பேன். அதுபோன்று நடிக்கவும் பிடிக்கும். ஓடிடி, சினிமா என்ற இதுபோன்று வரும் வாய்ப்புகளையும் பயன்படுத்த ஆர்வமாக இருக்கிறேன்.

பிரபலங்களிடம் கேட்கக்கூடாத கேள்வி என்று எதை சொல்வீர்கள்?

பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையே மாறி மாறி கவனக்குவிப்பிற்காகக் கேள்விகளாக கேட்கிறார்கள். என்னதான் பிரபலங்கள் என்றாலும் அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. அதனால், அதில் தலையிடக்கூடாது என்று நினைப்பேன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in