டிடியுடன் சேர்ந்து நடிக்காதது ஏன்? - பதில் சொல்கிறார் பிரியதர்ஷினி

டிடியுடன் சேர்ந்து நடிக்காதது ஏன்? - பதில் சொல்கிறார் பிரியதர்ஷினி

பாக்யராஜின் ’தாவணி கனவுகள்’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகானவர் நடிகை பிரியதர்ஷினி. தொகுப்பாளராக இருபது வருடங்கள் கடந்தும் வெற்றிகரமான தொகுப்பாளராக வலம் வருபவர் இப்பொழுது சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் நடிப்பிற்கு திரும்ப வந்திருக்கிறார். அவரிடம் காமதேனு இணையதளத்துக்காக பேசியதிலிருந்து...

நீண்ட நாட்களுக்குப் பிறகு நீங்கள் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் நடித்து வருகிறீர்கள். இந்த சீரியல் பற்றி சொல்லுங்கள்?

ரொம்பவே அழகாக எழுதப்பட்ட சீரியல் என்று தான் ‘எதிர்நீச்சல்’ பற்றி சொல்வேன். ’கோலங்கள்’ சீரியல் இயக்குநர் திருச்செல்வத்தின் எழுத்து பற்றி அனைவருக்குமே தெரியும். அவர் என்னை ‘எதிர்நீச்சல்’ சீரியலின் ரேணுகா கதாபாத்திரத்திற்காக அணுகிய போது மறுப்பதற்கு எனக்கு எந்த ஒரு காரணமும் இல்லை. “என்னால் இது செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?” எனக் கேட்டேன். அவர் என் மேல் நம்பிக்கை வைத்திருந்தார். இடையில் சில நாட்கள் சீரியல் நடிக்காமல் இருந்தேன். அப்படி இருக்கும் போது இப்படியான ஒரு நல்ல கதாபாத்திரம் வரும்போது வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை.

இதில் நீங்கள் பேசும் மதுரை பாஷை பழக கடினமாக இருந்ததா?

சின்ன வயதில் இருந்து கேட்டு, பேசிப் பழகிய பாஷை தான். என் அம்மா நன்றாகவே பேசுவார்கள். சென்னையில் இருப்பதால் மதுரை பாஷை பேச வேண்டும் என்ற அவசியம் எனக்கு ஏற்படவில்லை. இந்த சீரியலுக்காக பேச வேண்டும் என்று நினைத்த போது, அதை மீண்டும் கவனித்துக் கொண்டு வந்தேன். பெரிதாக எந்த கஷ்டமும் இல்லை. அதற்காக, எடுத்ததுமே நான் நன்றாகப் பேசிவிட்டேன் என்று சொல்ல மாட்டேன். போகப் போகக் கற்றுக்கொண்டது தான். அது ரசிகர்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. இந்த சீரியலில் ரேணுகா கதாபாத்திரத்தின் உடை, நகை என சின்னச் சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. இந்த கேரக்டருக்காக செட்டிநாட்டு நூல் சேலை, பதக்கம், அன்னம் டாலர் வைத்த செயின், இரட்டை வட செயின், கண்ணாடி வளையல் என அனைத்தையும் பார்த்துப் பார்த்து அணிவேன்.

கனிகா, ஹரிப்பிரியா, கமலேஷ் என உங்கள் அனைவரையும் மீண்டும் ஒன்றாக பார்ப்பது நாஸ்டாலஜியாவாக இருக்கிறதே..?

எனக்கும் ரொம்பவே சந்தோஷம். ஒருத்தருடைய கதாபாத்திரம் இன்னொருவரின் மனதில் பதியும் அளவுக்கு நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது. என்னுடைய ரேணுகா கதாபாத்திரம் பொறுத்தவரைக்கும் எல்லா விஷயங்களையும் தெளிவாகப் பேசக்கூடிய பெண். ஆனால், அதெல்லாம் சமையலறை வரைக்கும் தான். ஆனால், நந்தினியும் ஈஸ்வரியும் வேறு வேறு. இப்படி மூன்று விதமான கதாபாத்திரங்கள். இதை பல பெண்களும் தங்களுக்கும் பொருந்துவதாகச் சொல்கிறார்கள். வெவ்வேறு நிலையில் ஒடுக்கப்பட்ட பெண்கள் ஒரு குடும்பத்தில் இருக்கும் போது அதில் நான்காவதாக ஒருத்தி வரும்போது என்னவெல்லாம் நடக்கும் என்பது தான் கதை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஜாலியாக இன்னொரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மீடியா துறையில் இருபது வருடங்களுக்கு மேல் நிறைவு செய்திருக்கிறீகள். என்ன மாதிரியான விஷயங்கள் கற்று கொண்டிருக்கிறீர்கள்?

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக கத்துக்கிட்டே தான் இருக்கோம். ஒரு நாள் போல இன்னொரு நாள் இருக்காது. நாம் போய் சேரும் இடத்தை விட இந்தப் பயணம் தான் சுவாரஸ்யமானது. அது தான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். இது தான் என் கனவு, வேலை எனும் போது அதை மகிழ்ச்சியாகச் செய்துகொண்டிருக்கிறேன். நேற்று நான் வழக்கமாக செய்த வேலையை இன்று செய்தேனா என நினைவு படுத்திப் பார்க்க முடியாத அளவுக்கு கூட சில நாட்கள் அமையும்.

உங்களையும் உங்கள் சகோதரி டிடியையும் பலருக்கும் தெரிந்த அளவிற்கு உங்கள் தம்பியைப் பற்றி அதிகம் வெளியே தெரியவில்லையே?

எங்கள் இரண்டு பேருக்கும் இளையவர் தம்பி சுதர்ஷன். பைலட் ஆக வேண்டும் என்பது அவருடைய சிறு வயது கனவு. அது முடியுமா என பல பேர் கேட்டிருந்தாலும் அதை எல்லாம் யோசிக்காமல், அவனது கனவை அவனுடைய சொந்த முயற்சியால் ஜெயித்திருக்கிறான்.

நீங்களும் டிடியும் இதுவரை எடுத்த பேட்டிகளிலேயே மிகவும் பிடித்தது?

டிடி-யுடைய பேட்டிகள் எல்லாவற்றிற்குமே நான் ரசிகை. இப்போதுகூட பழைய பேட்டிகளை எடுத்துப் பார்த்தால் அதில் இருந்து எதாவது ஒரு விஷயம் கற்றுக்கொள்வதற்கு இருக்கும். டிடியின் ‘காஃபி வித் டிடி’ நிகழ்ச்சி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

என்னுடையது பற்றி கேட்டால், நடிகர் அஜித்தை நான் எடுத்த பேட்டி, பாடகர் எஸ்.பி.பி. அவர்களை எடுத்தது பற்றி குறிப்பிடுவேன். எஸ்.பி.பி. அவர்களின் வார்த்தைகளில் இருக்க கூடிய தெய்வீகத் தன்மை, எல்லோருக்கும் சொல்ல அவரிடம் இருக்கும் நல்ல வார்த்தை என அந்த நல்ல குணங்கள் நாம் எல்லோருமே பின்பற்ற வேண்டியது.

மீடியா துறைக்குள் புதிதாக தொகுப்பாளராக வர ஆசைப்படுபவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

தொகுப்பாளராக நீங்கள் விரும்புகிறீர்கள் என்றால் நிச்சயம் அது நடக்கும். நண்பர்கள் சொல்கிறார்கள், புகழ் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வந்தால் அது கஷ்டம் தான்.

டிடியும் நீங்களுக்கு சேர்ந்து நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறீர்கள். ஆனால், சேர்ந்து நடிக்கவில்லையே?

அது உண்மைதான். நாங்களும் அது போல எதிர்ப்பார்க்கவில்லை. எங்களுக்கும் அது போன்ற ஒரு வாய்ப்பு வரவில்லை. ஒருவேளை யாருக்கும் எங்களைச் சேர்த்துவைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று தோன்றவில்லையோ என்னவோ! அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் சேர்ந்து நடிக்கத் தயாராகவே உள்ளோம்.

சின்னத்திரையில அறிமுகம் ஆகும் முன்பே சினிமாவில் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானீர்கள். ஆனால், அதற்குப் பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தாதது ஏன்?

சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குது, சீரியல் என அதிலேயே முழு நேரமும் போய்விட்டது. மேலும், சினிமாவில் அதிகம் படங்கள் நடிக்க வேண்டும் என்று நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் அதில் எனக்கு வருத்தமும் இல்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in