அந்தமான் ஜெயிலும்... பிக் பாஸ் வீடும்!

‘பொன்னி C/o ராணி’ ப்ரீத்தி சஞ்சீவ் பேட்டி
ப்ரீத்தி சஞ்சீவ்
ப்ரீத்தி சஞ்சீவ்

வில்லி, அமைதியான கதாபாத்திரம், நகைச்சுவை பாத்திரம் என எதற்கும் பாந்தமாக பொருந்தி போவார் நடிகை ப்ரீத்தி. ஒரு பக்கம், சன் டிவியில் ‘கண்ணான கண்ணே’ சீரியலில் வில்லியாக மிரட்டிக்கொண்டே இன்னொரு பக்கம், கலைஞர் டிவியில் ‘பொன்னி C/o ராணி’ சீரியலில் அமைதியான பொன்னியாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார். குழந்தைகள், சீரியல், யூடியூப் என பிஸியாக இருக்கும் இந்த மல்டிடேலன்ட் லேடியிடம் படப்பிடிப்பு இடைவேளையில் காமதேனு மின்னிதழுக்காக பேசினேன்.

Q
  • 'பொன்னி C/oராணி' சீரியலில் நீங்க பொன்னி கதாபாத்திரத்தில் மீண்டும் ராதிகாவுடன் இணைந்து நடிக்கிறீர்கள். எப்படி வந்தது இந்த வாய்ப்பு?

A

ராதிகா மேம் கூட இருபது வருடங்களுக்கு முன்னால் நான் வேலை பார்த்திருக்கிறேன். மேலும், அவர்களது தயாரிப்பு நிறுவனமான ரேடானுடனும் நிறையவே நான் வேலை செய்திருக்கிறேன். அதனால், அங்கே அனைவரும் எனக்கு நல்ல பழக்கம். ஒரு நாள் இந்த புராஜெக்ட் குறித்து என்னிடம் சொல்லி, நடிக்க அழைப்பு வந்தது. கொஞ்ச நாள் கழித்து ராதிகா மேமிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. உடனே சீரியல் ஆரம்பித்து விட்டார்கள்.

பொன்னி ஒரு அப்பாவியான குடும்பத் தலைவி. அப்பாவியான கதாபாத்திரம் செய்வது எனக்கு ஒன்றும் புதிது கிடையாது. ஆனால், ராதிகா மேம்க்கு இணையாக டைட்டில் கார்ட் கதாபாத்திரம் எனும் போது அது எந்த அளவுக்கு முக்கியமானது என்பது தெரியும். திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு, ‘பொம்மலாட்டம்’ சீரியல் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலுக்குள் என்ட்ரி என எனது சீரியல் பயணத்தை மூன்றாக பிரிக்கலாம். அப்படி இருக்கும் போது டைட்டில் கார்ட் கதாபாத்திரம் கிடைத்ததை எனக்கு ஆசிர்வாதமான ஒரு விஷயமாக தான் பார்க்கிறேன்.

Q

இருபது வருடங்கள் கழித்து ராதிகாவுடன் மீண்டும் இணைந்திருக்கிறீர்கள்... என்ன சொன்னார் ராதிகா?

A

தொழில்ரீதியாக எனக்கு ராதிகா முன்மாதிரி என்று தான் சொல்வேன். நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் அவர்களுடன் ‘அண்ணாமலை’ சீரியலில் நடித்தேன். அப்போதிருந்தே என்னை அவருக்குத் தெரியும். இந்த பொன்னி சீரியலில் நடிக்க ஆரம்பித்த போது, முதல் காட்சியே அவர்களுடன் இணைந்து அண்ணாமலை என்று ஒரு பாடல் பாடும்படியான காட்சி தான் இருக்கும். அதை கவனித்த ராதிகா, “ஓ! அண்ணாமலை என்றே வருகிறதா?” என்று கேட்டார். இப்போது எனக்கு அவர் நல்ல நண்பர். நடிப்பு தொடர்பாக எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.

Q

90’ஸ் சீரியல்களில் பலவற்றை இப்போது மறுஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த வகையில் உங்களது நாஸ்டாலஜியா சீரியல் ஒன்று மறு ஒளிபரப்பு செய்யலாம் என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

A

என்னுடைய ‘வீட்டுக்கு வீடு லூட்டி’ சீரியலை இப்போது ஜெயா டிவியில் மீண்டும் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கிறார்கள். அதில் என்னுடைய கதாபாத்திரம் பற்றி பழைய நினைவுகளை மகிழ்ச்சியாக நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எனக்கும் மிக பிடித்த சீரியல் அது. கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அந்த சீரியல் படப்பிடிப்பு நடந்தது. எனக்கும் முதல் சீரியல் இது. முதிர்ச்சியான கதாபாத்திரம், வில்லி கதாபாத்திரம் என பலவற்றை செய்திருக்கிறேன். ஆனால், முதலில் நடித்த அந்த குழந்தைத்தனமான கதாபாத்திரம் எப்போதும் ஸ்பெஷல் எனக்கு. அதனால் எப்போதுமே எனக்கு மறக்க முடியாதது.

Q

வில்லி, அமைதியான கதாபாத்திரம் இதில் உங்களுக்கு சவாலானது எது என்றால் எதைச் சொல்வீர்கள்?

A

’வாசுகி’ மாதிரியான வில்லி கதாபாத்திரம் நடித்துவிட்டு இப்போது அமைதியான அப்பாவியான ‘பொன்னி’ கதாபாத்திரத்தில் நடிப்பது தான் சவாலான ஒன்றாக இருக்கிறது. நகைச்சுவை கதாபாத்திரம் எளிதாகச் செய்துவிட்டேன். உண்மையில் அமைதியான கதாபாத்திரங்களை விட அடாவடித்தனமான வில்லி கதாபாத்திரங்கள் தான் மக்கள் மனதில் எளிதாகப் பதியும். இதற்கு முன்பு ‘வைரநெஞ்சம்’ என்ற ஒரு சீரியலில் வில்லியாக நடித்திருந்தேன். அதற்கு, வெளியில் நிறைய திட்டு வாங்கி இருக்கிறேன். பூ வாங்க சென்ற போது ஒரு அம்மா நான் நல்லவள் இல்லை என்பதால் எனக்கு பூ தரமாட்டேன் என்று சொன்னதுடன் கல்யாணம் நடக்காது என்று சாபமும் விட்டது மறக்க முடியாத நிகழ்வு.

Q

கடைசி சீசனில் சஞ்சீவ்க்கு பிக் பாஸ் வீட்டுக்குள் செல்ல வாய்ப்பு வந்தது. ஆறாவது சீசன் ஆரம்பிக்க இருக்கும் நிலையில் உங்களுக்கு அழைப்பு ஏதும் வந்ததா?

A

நான் அமைதியான ஒரு நபர். அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் கோபப்படுத்தி விட முடியாது என்பது அங்கு அனைவருக்கும் தெரியும். அப்படி அமைதியாகக் கோபப்படாமல் இருப்பவர்களுக்கு பிக் பாஸில் வேலை இல்லையே? இதுவரை எனக்கு வாய்ப்பு வரவில்லை. ஒருவேளை, வாய்ப்பு வந்தால் மற்ற சீரியல் வேலைகளுக்கு ஏற்ப இந்த வாய்ப்பையும் மறுக்காமல் ஏற்றுக்கொள்வேன்.

சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவரை பார்க்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டுக்குள் செல்வதற்கு முன்னால் வெளியே அரைமணி நேரம் காத்திருந்தேன். அந்த இடமே அவ்வளவு அமைதியாக இருந்தது. அங்கே உள்ளே நுழைவது என்பது தீவுக்குள் போவது போல தான். நான் அந்தமான் ஜெயிலுக்கு இதற்கு முன்பு போயிருக்கிறேன். கிட்டத்தட்ட எனக்கு அதே மாதிரியான ஒரு உணர்வு தான் பிக் பாஸ் வீட்டிற்குள் கிடைத்தது. ஈ நுழையும் சத்தம் கூட அங்கே கேட்கக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அதனால், அந்த வீட்டுக்குள் இருக்கும் அனைவருமே ஒருவிதமான விரக்தியில் தான் இருப்பார்கள்.

Q

டீன் ஏஜ் பேரன்டிங்க் பற்றி..?

A

குழந்தைகள் எப்போதுமே நம்மை பார்த்து தான் வளர்வார்கள். அப்படி இருக்கும் போது நாம் பின்பற்றாத ஒன்றை அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும்போது அது நடக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கும் நல்ல பழக்க வழக்கங்களை எல்லாம் நாமும் பின்பற்ற வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in