சூர்யாவை எனக்குப் பிடிக்கக் காரணம் இதுதான்!

- ‘மீனாட்சி பொண்ணுங்க’ மோக்‌ஷிதா பாய் பேட்டி
மோக்‌ஷிதா பய்
மோக்‌ஷிதா பய்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ’மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் சக்தி கதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார் நடிகை மோக்‌ஷிதா பய்.

கன்னடத்தில் படங்கள், சீரியல் என பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் தமிழ் சீரியலுக்குள் வந்த கதை, ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் அனுபவம் உள்ளிட்டவை குறித்து காமதேனு இணையதளத்திடம் பகிர்ந்து கொண்டார்.

மோக்‌ஷிதா பய் என்ற உங்களது பெயரை கேட்கும்போதே வித்தியாசமாக இருக்கிறதே... உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் கர்நாடகத்துப் பொண்ணு. தமிழில் ஏற்கெனவே ஹிட் ஆன ‘செம்பருத்தி’ சீரியலை கன்னடத்தில் ரீமேக் செய்தார்கள். அதில் கதாநாயகி பாரு கதாபாத்திரத்தில் நடித்தேன். அங்கிருந்துதான் என் நடிப்புப் பயணம் ஆரம்பம். அந்த சீரியலில் என் நடிப்புப் பிடித்து போய் ‘செம்பருத்தி’ தயாரிப்பாளர் ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலுக்காக என்னை இங்கு அழைத்து வந்தார்.

கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்த போது என்ன நினைத்தீர்கள்... மொழி, இடம் எல்லாம் புதிதாக இருந்திருக்குமே, ஏதும் தயக்கம் இருந்ததா?

எனக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். அதுவும் இல்லாமல், நிறைய தமிழ் படங்கள் பார்ப்பேன். தமிழ் பேசுவது எல்லாம் எனக்கு நன்றாக புரியும். ஆனால், சரளமாக பேசுவது கொஞ்சம் சிரமம்தான். அதனால், சென்னை வந்த பிறகு எனக்கு பயம், தயக்கம் எதுவும் இல்லை. நான் இங்கு வந்ததும் பலரும் என்னிடம் தமிழில் பேச ஆரம்பித்து விட்டார்கள். புதிய மொழி என்பதால் அதில் சிரமங்கள் இருந்தாலும் சமாளிக்கிறேன்.

சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்திருக்கிறீர்கள். ‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் கதாநாயகிக்கு இணையான பல கதாபாத்திரங்கள் இருக்கிறது. அதில் நீங்களும் ஒருவர் எனும் போது அது எப்படி இருக்கிறது?

மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்...
மீனாட்சி பொண்ணுங்க சீரியலில்...

இந்த சீரியலும், நான் நடித்துக்கொண்டிருக்கும் கதாபாத்திரமும் கன்னடத்தில் ஹிட்டான ஒன்று. இந்த மாதிரியான ஒரு சீரியலில் இதுபோன்ற ஒரு கதாபாத்திரம் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய அம்மாவின் ஆசை; கனவு. அவர்கள் ஆசைப்பட்ட மாதிரியே எனக்கும் இந்த சீரியல் அமைந்திருப்பது அம்மாவின் ஆசீர்வாதம் என்றுதான் சொல்வேன்.

இங்கு வருவதற்கு முன்பு இதில் நடிப்பவர்கள் குறித்து எந்த அறிமுகமும் எனக்கு இல்லை. ஆனால், அர்ச்சனா அம்மாவை பற்றி எனக்குத் தெரியும். அவர் கன்னடத்தில் நடிகர் ராஜ்குமார் சாருடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். மற்றபடி காயத்ரி அக்கா, சுபத்ரா அக்கா என நிறைய சீனியர் ஆர்டிஸ்ட் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் நிறையச் சொல்லிக் கொடுத்தார்கள். வேறு மாநிலத்தில் இருந்து வந்திருக்கிறேன் என என்னை எந்த விதத்திலும் ஒதுக்கவில்லை. தங்கள் வீட்டுப் பெண் போல என்னை நடத்துவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அர்ச்சனா என்ன சொல்கிறார்?

முதல் நாள் அர்ச்சனா அம்மாவை பார்த்த போது எனக்கு நடுக்கமாக இருந்தது. ஆனால், அந்த நடுக்கத்தை எல்லாம் அர்ச்சனா எனக்கு போக்கினார். வசன உச்சரிப்பு, நடிப்பு என பல விஷயங்களில் உதவினார்.

மீனாட்சி பொண்ணுங்க’ சீரியல் கதை உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு தருணத்தில் ஒத்துப் போகிறதா?

பல தருணங்களில்! முக்கியமாக, சக்தி கதாபாத்திரமும் என்னுடையதும் கிட்டத்தட்ட ஒன்று தான். சக்தி போலவே நானும் தைரியமான பெண். எதாவது ஒரு விஷயம் எனக்கு பிடிக்கவில்லை என்றால் உடனே நேரிடையாகவே சொல்லி விடுவேன்.

உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்கள்?

‘மீனாட்சி பொண்ணுங்க’ சீரியலில் சக்தி எப்படி குடும்பம் பற்றி நிறைய யோசிப்பாளோ அதேபோல தான் நிஜத்தில் நானும். என் அம்மா, அப்பாவுக்கு நான் ஒரே பொண்ணு. எனக்கு ஒரு தம்பி இருக்கிறான். அவன் ஒரு மாற்றுத்திறனாளி. குடும்பம்தான் எனக்கு எல்லாமே. அவர்களுக்கு சப்போர்ட் செய்யத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன். அவர்களுடைய ஒத்துழைப்பு என்பதும் மிக முக்கியம்.

சென்னை என்பதும் உங்களுக்கு முதலில் ஞாபகம் வருவது எது?

நிச்சயம் இந்த கொளுத்தும் வெயில்தான். பெங்களூரு க்ளைமேட்டில் இருந்து பழகிவிட்டு, இங்கு வெயிலை சமாளிப்பதே பெரும் கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் ஷூட்டிங் இல்லாத சமயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து படங்கள் பார்ப்பது, வெளியில் செல்வது என நேரத்தைச் செலவழிப்பேன்.

சினிமா பார்ப்பது பிடிக்கும் என்றால் பிடித்த ஹீரோ யார்?

எனக்கு எப்போதுமே சூர்யாவை ரொம்பப் பிடிக்கும். க்ரஷ் என்பதையும் தாண்டி, அவருடைய நடிப்பைப் பார்த்து அவர் மீது எனக்கு தனிப்பட்ட மரியாதை இருக்கிறது. அவர் குடும்பம் மீது வைத்திருக்கும் மரியாதை, மனைவியை நடத்தும் விதம், அவர் வேலை மீது அவருக்கு இருக்கும் சின்சியாரிட்டி இதையெல்லாம் பார்த்து தான் அவர் மீது எனக்கு மதிப்பு வந்தது.

’அயன்’ படம்தான், நான் பார்த்த முதல் சூர்யா படம். பிறகு அடுத்தடுத்து அவருடைய படங்கள், பழைய படங்கள் என தேடிப் பார்க்க ஆரம்பித்துவிட்டேன். தமிழில் சீக்கிரம் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு வரும் என எதிர்ப்பார்த்து இருக்கிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in