இந்த சீரியலில் நடிப்பதே த்ரில்லான அனுபவம் தான்!

‘மந்திர புன்னகை’ மெர்ஷீனா நீனு பேட்டி
மெர்ஷீனா நீனு
மெர்ஷீனா நீனு

குடும்பம், சென்ட்டிமென்ட், அழுகை என வழக்கமான தொடர்களுக்கு மத்தியில் த்ரில்லர் வகை சீரியல்களை ரசித்து பார்ப்பதற்கும் தனித்துவமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படித்தான் ’மர்ம தேசம்’, ‘ராஜராஜேஸ்வரி’ என பல நாஸ்டாலஜியான 90’ஸ் சீரியல்கள் சக்சஸ் பிரேக் கொடுத்தன. அந்த வரிசையில் க்ரைம் த்ரில்லர் கதையாக கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது ‘மந்திர புன்னகை’ தொடர்.

இதில் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மெர்ஷீனா நீனு. மலையாள வருகையான இவருக்கு தமிழில் இது இரண்டாவது சீரியல். “இது போன்ற க்ரைம் த்ரில்லர் சீரியல்களுக்கு நான் மிகப் பெரிய ரசிகை” என்று சொல்லும் நீனுவிடம் ஷூட் இடைவேளையில் காமதேனு மின்னிதழுக்காகப் பேசினோம்.

’மந்திர புன்னகை’ சீரியல் தலைப்பு கேட்கும்போதே வித்தியாசமா இருக்கிறது. க்ரைம் த்ரில்லர் கதைக்குள் இது எப்படி ட்ராவல் ஆகும் என்பது பற்றி கொஞ்சம் சொல்லுங்க?

இது ஒரு ரொமாண்டிக் - த்ரில்லர் கதை. இதற்குள் நீங்கள் எதிர்பார்க்காத நிறையப் புதிர்கள் இருக்கும். முக்கிய கதாபாத்திரங்கள் என்றால் குரு, கதிர், காயத்ரி இவர்கள் மூவரும் தான். இவர்களுக்கென ஒரு தனி கதை இருக்கும்; ரகசியங்கள் இருக்கும். இவர்களைச் சுற்றி தான் இந்த மர்மமான கதையே நடக்கும். கதையின் நாயகியான நான், காணாமல் போன என் தங்கையைத் தேடுவேன். இன்னொரு பக்கம், மாஃபியா கும்பல் ஒன்றின் தலைவன் குருவை கைது செய்யக் காத்திருக்கும் காவல் துறை அதிகாரியான கதிரையும் காதலிப்பேன். எங்கள் இருவருக்குள்ளும் ஒரு தனித்தனி கதை இருக்கும். அது எப்படி ஒன்றாகி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் என்பதை இயக்குநர் சுவாரஸ்யமாகச் சொல்லி இருக்கிறார்.

சுமார் நான்கு மாதங்களுக்கு இந்தத் தொடரை ஒளிபரப்புவதாகப் பிளான். அதனால், கதை எந்த ஒரு தொய்வும் இல்லாமல் விறுவிறுப்பாகச் செல்லும். அதனால் பார்வையாளர்களுக்கும் பிடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு, விக்ரம் கதாபாத்திரங்களில் வரும் நியாஸ் கான், ஹூசைன் அகமது கான் இருவரும் எனக்கு நண்பர்கள் என்பதால் அவர்களுடன் இணைந்து நடிப்பது எனக்கு இன்னும் எளிதாக இருந்தது.

இந்த மாதிரியான ஒரு த்ரில்லர் கதைக்குள் நீங்கள் கதாநாயகியாக வாய்ப்பு வந்தது எப்படி?

தயாரிப்பு தரப்பில் என்னுடைய போட்டோவைப் பார்த்துத்தான் என்னை இந்த சீரியலுக்குள் கூப்பிட்டார்கள். சீரியல் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் எனக்கு அழைப்பே வந்தது. எல்லாமே அடுத்தடுத்து நடந்தது போல இருக்கிறது.

வழக்கமான சீரியல்களில் குடும்பம், சென்டிமென்ட் போன்ற விஷயங்கள் தான் பெரும்பாலும் இருக்கும். ஆனால், இந்தக் கதை அதிலிருந்து மாறுபட்ட ஒன்றாக இருப்பதாக எனக்கு தோன்றியது. இதுபோன்ற த்ரில்லர் கதைகள் எப்போதாவது தான் சீரியலுக்குள் வரும். நமக்கும் நடிப்பதற்கு ஒரு பெரிய களம் கிடைக்கும். பார்வையாளர்களுக்கும் ரொமான்ஸ்- த்ரில்லர் என வித்தியாசமான அனுபவம் சின்னத்திரையில் கிடைக்கும்.

த்ரில்லர் கதைகளைப் பார்ப்பது என்பது பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் அனுபவம். நடிக்கும் போது உங்களுக்கு எப்படி இருந்தது?

கதைக்களத்திற்கு ஏற்றது போலவே படப்பிடிப்பு தளமும் பரபரப்பாக இருக்கும். பெரும்பாலான படப்பிடிப்பு ஈசிஆர் பகுதியில் உள்ள வீட்டில் எடுத்தோம். கதிரையும் குருவையும் எனக்கு முன்பே தெரியும். நாங்கள் நல்ல நண்பர்கள் என்பதால் அவர்களுடன் இணைந்து நடிப்பதும் எனக்கு எளிதாகவே இருந்தது.

மெர்ஷீனா நீனு என உங்கள் பெயர் கேட்பதற்கே வித்தியாசமாக இருக்கிறது. உங்களைப் பற்றி சொல்லுங்க?

ஆமாம்! என்னுடைய பெயரைக் கேட்கும் பலரும், “என்ன..!” என்று ஆச்சரியமாகத்தான் பார்ப்பார்கள். என்னுடைய பெயர் ஒரு அரபி பெயர். ’மந்திர புன்னகை’ என்னுடைய எட்டாவது சீரியல். அதிகம் மலையாளத்தில் தான் நடித்திருக்கிறேன். இதற்கு முன்பு தமிழில் ‘அக்னி நட்சத்திரம்’ சீரியலில் நடித்தேன். கேரளா தான் எனக்கு சொந்த ஊர். குழந்தை நட்சத்திரமாகவும் நிறைய சீரியல்களில் நடித்திருக்கிறேன். பின்பு, சமூக வலைதளங்களில் எனது புகைப்படங்களைப் பார்த்துத்தான் சீரியல்கள் வாய்ப்பு அடுத்தடுத்து வர ஆரம்பித்தது.

சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்குள் போகவும் ஆசைதான். ஆனால், இப்போதைக்கு எங்கு நம் திறமையை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறதோ அதில் இயங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

எந்த மாதிரியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம்?

இதற்கு முன்பு நான் சைக்கோ கேரக்டரில் நடித்திருக்கிறேன். அது எனக்கு பிடித்தமான ஒன்று. எப்போதும் ஒரு கதாபாத்திரத்திற்கும் மற்றொரு கதாபாத்திரத்திற்கும் இடையில் வித்தியாசம் வேண்டும், புதிதாக ஒன்றை முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் கதையையும் என்னுடைய கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுப்பேன்.

உங்கள் வாழ்க்கையில் சந்தித்த த்ரில்லிங்கான விஷயம் என்றால் எதைக் குறிப்பிடுவீர்கள்?

நிறைய விஷயங்கள் அது போல உண்டு. இப்போதைக்குச் சொல்லவேண்டும் என்றால் ‘மந்திர புன்னகை’ சீரியலில் நடிப்பதைச் சொல்வேன். அந்த சீரியல் போல ஒரு த்ரில்லிங்கான அனுபவம் எனக்குப் புதிது. சீரியல் என்றாலே குடும்பம், அழுகை என்பது போன்ற எண்ணம் தான் பலருக்கும் இருக்கும். அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட சீரியல் இது. சீரியலில் நடிக்கும் எங்களுக்கே இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் போது பார்வையாளர்களுக்கும் நிச்சயம் ‘மந்திர புன்னகை’ புது அனுபவமாகவே இருக்கும் என நம்புகிறேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in