ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நிலைமை எல்லாம் பாவம் என்று தான் சொல்வேன்!

’கார்த்திகை தீபம்’ ஹர்த்திகா பேட்டி
ஹர்த்திகா
ஹர்த்திகா

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் மூலம் தமிழ் சீரியலுக்குள் அறிமுகமாகி இருக்கிறார் ஹர்த்திகா. கார்த்திக் ராஜா ரீ-்என்ட்ரி, சினிமா டூ சீரியல், மீடியாத் துறையில் எதிர்கொண்ட சவால்கள் எனப் பல விஷயங்களைக் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

கார்திகை தீபம்’ சீரியல் தலைப்பே மங்கலகரமாக இருக்கிறதே?

நிறையப் பேர் இதுதான் சொன்னார்கள். எனக்கும் தலைப்பு கேட்டதும் பிடித்திருந்தது. பெங்களூரு, கும்பகோணம் என மாறி மாறி படப்பிடிப்பு போய்க் கொண்டிருக்கிறது. இதில் என்னுடையக் கதாபாத்திரத்தின் பெயர் தீபா. கதைப்படி, நான் நன்றாகப் பாடுவேன். ஏழ்மையானக் குடும்பத்தைச் சேர்ந்தப் பெண் அவளுடைய தம்பிக்கு உடம்பு சரி இருக்காது.

இவள் தான் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற சூழல் இருக்கும். பிரபலமான பாடகி ஆக வேண்டும் என்ற தன்னுடைய கனவு, தம்பியின் மருத்துவச் செலவு, குடும்பச்சூழல் என அத்தனையையும் இவள்தான் சமாளிக்க வேண்டும். இப்படி இருக்கும்போதுதான் ஒரு பெரிய குடும்பத்தில் குரல் கொடுப்பதற்கான வாய்ப்பு இவளுக்குக் கிடைக்கிறது. அதன் பிறகு நடப்பதுதான் கதை.

இந்தக் கதாபாத்திரத்திற்குத் தயாராவதில் எதுவும் சிக்கல் இருந்ததா?

கதைப்படி தீபா கறுப்பான பெண். அவளது உழைப்பை, உதவியை குடும்ப உறுப்பினர்களும் சுற்றி இருக்கும் நண்பர்களும் உபயோகப்படுத்திக் கொள்வார்களே தவிர அவளை யாரும் புரிந்துகொள்ள மாட்டார்கள். தான் கறுப்பாக இருப்பதால்தான் நிராகரிக்கப்படுகிறோம் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். சின்ன வயதில் இருந்தே கேட்டுக் கேட்டு இந்த அவமானங்களுக்குப் பழகி தைரியமாக இதை எதிர்கொள்ளும் அளவுக்குப் பக்குவமாகி விடுவாள்.

இந்த மாதிரியான மேக்கப் போடும்போது படப்பிடிப்புத் தளத்தில் பலபேர் என்னைப் பார்த்து பரிதாபப்பட்டார்கள். கதையைக் கேட்கும்போது கூட நிஜத்தில் இப்படி எல்லாம் நடக்குமா என்று நினைத்தேன். ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் என் கதாபாத்திரம் பார்த்து பலரும் நடந்து கொண்ட விதம் இந்த விஷயத்தை உறுதிப்படுத்தியது.

மீடியாவில் நுழைந்த புதிதில் நீங்கள் இதுபோல் ஏதும் புறக்கணிப்புகளை எதிர்கொண்டீர்களா?

நான் நிஜத்தில் அந்த அளவிற்கு சிவப்பான பெண் கிடையாது. மாநிறம்தான். இதனாலேயே, பல புறக்கணிப்புகளையும் பேச்சுகளையும் நேரடியாகவே சந்தித்து இருக்கிறேன். பல புராஜெக்ட்களில் என்னைத் தேர்ந்தெடுத்த பின்பு, எதற்காக இந்தப் பெண்ணைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்றெல்லாம்கூட பேசி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட இந்த சீரியலில் தீபாவுக்கு நேர்ந்தது போல பல சம்பவங்கள் எனக்கும் நடந்திருக்கிறது.

எதற்காக இப்படி நடந்து கொள்கிறார்கள். எல்லாரையும் சமமாக நடத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, சினிமாவில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் நிலைமை எல்லாம் பாவம் என்றுதான் சொல்வேன். திரையில் முகம் காட்ட வேண்டும் நினைத்துதான் வருகிறார்கள். அவர்களை இப்படி நடத்தும் போது கஷ்டமாக இருக்கும்.

சீரியலில் உங்களுடைய ஜோடியான கார்த்திக் ராஜ் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். என்ன சொன்னார்?

படப்பிடிப்புத் தளத்தில் கார்த்திக் ரொம்பவே அமைதியாக இருப்பார். அவர் சீரியல், சினிமா என என்னை விட சீனியர். நான் இப்போதுதான் சீரியலுக்கு வருகிறேன். சினிமாவில் தரும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் கூட அழகாக இருக்கும். ஆனால், சீரியலில் கொஞ்சம் மிகைப்படுத்தினாலும் அது நன்றாக இருக்காது என பல விஷயங்களை சொல்லிக் கொடுத்தார் கார்த்திக். சினிமவில் ஒரு நாளைக்கு மூன்று நான்கு காட்சிகள் தான் இருக்கும். ஆனால், சீரியலில் ஒரு நாள் முழுக்க ஐந்தாறு காட்சிகளோ அதற்கும் மேலாகவோகூட இருக்கும்.

சின்னத்திரையில் இயங்கும் பெரும்பாலானவர்கள் சினிமாவுக்குள் போக நினைப்பார்கள். ஆனால் நீங்கள், சினிமா டூ சீரியல் ஏன்?

கரோனா காலத்தில் இரண்டு வருடம் இடைவெளி இருந்தது. அதில் சில கான்டாக்ட்ஸும் மிஸ் ஆனது. மேலும், நான் நடித்த படங்களும் அந்த சமயத்தில் வெளியிட முடியாமல் இருந்தது. நாம் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்து அதனால், வரும் மற்ற வாய்ப்புகளை இழக்கக் கூடாது இல்லையா? அதுவுமில்லாமல் வந்த படக்கதைகளில் பெரும்பாலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இல்லாதது போலவே வந்தது. அதுபோல நடிக்கவும் எனக்கு விருப்பம் இல்லை.

அதுபோன்ற சமயத்தில்தான் எனக்கு ‘கார்த்திகை தீபம்’ சீரியல் வாய்ப்பு வந்தது. சீரியல்களில் கதாநாயகிகளுக்குத்தான் முக்கியத்துவம் இருக்கும். படங்களில் கதாநாயகர்களுக்கு இருக்கும். அப்படி இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹீரோ, ஹீரோயின் இருவருக்குமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். எவ்வளவோ பெரிய படங்களில் கதாநாயகர்களுடன் நடித்தாலும் பல கதாநாயகிகளின் கதாபாத்திரம் பேசப்படுவதில்லை. அதேபோலதான் கதாநாயகர்களது கதாபாத்திரம் சீரியலிலும்.

அதுபோல கதைகளுக்கும் தன் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய கதாநாயகி என்றால் யாரைச் சொல்வீர்கள்?

நிச்சயமாக, சாய்பல்லவிதான்! எந்தவொரு பெரிய ஹீரோ படத்தில் நடித்தாலும் அவரது கதாபாத்திரம் மட்டும் தனியாகத் தெரியும். அவருடைய ‘பிரேமம்’ மலர் கதாபாத்திரம் என்றென்றைக்கும் என்னக்குப் பிடித்தமான ஒன்று.

தமிழ்ப் படங்கள் எல்லாம் பார்ப்பீர்களா?

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ‘கார்த்திகை தீபம்’ சீரியல் ஆரம்பித்த பிறகு நேரம் கிடைக்காமல் ஓடிக் கொண்டிருக்கிறேன். தமிழில் கடைசியாக ‘ஜெய் பீம்’ படம் பார்த்தேன். ஒரு படத்தில் கதை, நடிகர்கள் என அனைத்தும் பிடித்துப் போனது ‘ஜெய் பீம்’ படத்தில்தான். மலையாளத்தில் கடைசியாக ‘கடுவா’ பார்த்தேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in