
விஜய் டிவியில் ’வேலைக்காரன்’ சீரியல் முடித்து விட்டு ஒரு சின்ன பிரேக் எடுத்த கோமதிப்பிரியா இப்போது அதே விஜய் டிவியின் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் பட்டாஸ் கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஷூட்டிங் பிசியில் இருந்த அவரிடம் பேசினோம்,
’ஓவியா’, ‘வள்ளி’, ‘மீனா’ என உங்களது சீரியல் கதாபாத்திரப் பெயர்கள் எல்லாம் அழகாக இருக்கிறதே?
இந்தப் பெயர்கள் எல்லாம் உங்களுக்கும் பிடிச்சிருக்கா? சீரியல் கதை வரும்போதே என் கதாபாத்திரப் பெயரைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பேன். என்னைப் போலவே உங்களுக்கும் பிடித்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. ஒவ்வொரு சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதும், அந்தந்த கதாபாத்திரத்தின் பெயர் சொல்லித்தான் என்னை வெளியில் கூப்பிடுவார்கள். அந்த வகையில், ‘சிறகடிக்க ஆசை’ மீனாவும் எல்லாருக்கும் பிடித்திருக்கிறது. இப்போது நான் எல்லாருக்கும் மீனா தான்.
சீரியலில் நடிக்க உங்கள் வீட்டில் முழு சம்மதம் சொன்னார்களா?
இந்த விஷயத்தில் நான் லக்கி என்றுதான் சொல்ல வேண்டும். என் விஷயத்தில் என் வீட்டில் எதற்கும் வேண்டாம் என்று சொன்னது இல்லை. சரியான முடிவெடுத்து அதை தைரியமாக செயல்படுத்துவேன் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு. அதனால், என்னை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தார்கள். அதை நானும் சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டேன் என்றுதான் நினைக்கிறேன். ஒரு உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், என் முதல் சீரியல் ‘ஓவியா’வில் நடிக்க ஒப்பந்தமானதைக்கூட என் வீட்டில் நான் முதலில் சொல்லவில்லை. சீரியல் ஒளிபரப்பான பிறகுதான் சொன்னேன். என் நடிப்பைப் பார்த்து பாராட்டினார்கள். அந்த அளவுக்கு புரிதல் உள்ள குடும்பம்தான் என்னுடையது.
நன்றாக தமிழில் பேசி நடிக்கிறீர்கள்... சினிமாவில் முயற்சி செய்யவில்லையா?
நிறைய சினிமா வாய்ப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. உங்களுக்கு ஒன்று சொல்லவா... 'அசுரன்' படத்தில் அம்மு அபிராமி நடித்த கதாபாத்திரம் எனக்குத்தான் முதலில் வந்தது. அப்போது சீரியல்களுக்கென தேதி ஒதுக்கி இருந்ததால் என்னால் அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. இன்று வரை அதில் எனக்கு பெரிய வருத்தம் உண்டு. இனி வரும் காலங்களில் முறையாகத் திட்டமிட்டு, சினிமாவில் சரியான வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
சீரியலிலேயே பிஸியாக இருப்பீர்களே... ஷாப்பிங்கிற்கு எல்லாம் நேரம்?
இப்படி பிசியாக இருப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது! நான் பெரிதாக ஷாப்பிங் எல்லாம் செய்யக் கூடிய ஆள் இல்லை. சீரியல், நிகழ்ச்சிகளுக்குத் தேவையான உடை, மேக்கப் மட்டும்தான் என் முன்னுரிமை. மற்ற நேரங்களில் மிக எளிமையாக இருப்பதைதான் விரும்புவேன். அது நம் ஸ்கினுக்கு செய்யும் நல்லதும் கூட. எப்போதுமே மேக்கப்பில் இல்லாமல் தேவைப்படும் போது மட்டும் மேக்கப் போட்டுக் கொள்ளலாம். மேக்கப் போடும்போது எந்த அளவுக்கு சிரத்தை எடுக்கிறோமோ, அதே அளவுக்கு அதை நீக்கும் போதும் சிரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது முக்கியமானது.