‘பாரதி கண்ணம்மா’வுக்கு என்னாச்சு?: அடுத்தடுத்து விலகும் நடிகர்கள்!

ரோஷினி
ரோஷினி

ரோஷினி விலகியதைத் தொடர்ந்து 3-வது நடிகரின் விலகலுக்கு ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் ஆளாகியுள்ளது. இது தொலைக்காட்சித் தொடர் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’வும் ஒன்று. ரோஷினி, அருண், அகில், கண்மணி உள்ளிட்ட பலர் இதில் நடிக்கின்றனர். இந்த சீரியலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பும் இருக்கிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கதைப்படி கர்ப்பமாக இருக்கும் கண்ணம்மா வீட்டைவிட்டு வெளியேறிய காட்சிகள், சமூக வலைதளங்களில் பகடிக்கு ஆளான வகையிலும் சீரியலின் பிரபலம் மேலும் அதிகரித்தது.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்துவந்த ரோஷினி, திடீரென விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவருக்கு சினிமா வாய்ப்புகள் வருவதாகவும், இதனால் சீரியல், சினிமா இரண்டையும் சமாளிப்பது கடினம் என்பதால், சீரியலில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் இந்த சீரியலில் அவர் 2 குழந்தைகளுக்கு அம்மாவாக நடிப்பதும், அவரது சினிமா வாய்ப்புகளுக்கு தடையாகலாம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், ரோஷினி இதுகுறித்து வெளிப்படையாக எதுவும் தனது சமூக வலைதள பக்கங்களிலோ அல்லது பேட்டிகளிலோ தெரிவிக்கவில்லை.

ஆனால் சீரியலை விட்டு விலகியதும், அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அது குறித்து கருத்து தெரிவிக்கும்போது, “இவ்வளவு நாட்கள் மக்கள் என்னை கண்ணம்மாவாக பார்த்திருப்பார்கள். ரோஷினியாக என்னை அவர்கள் அறிந்துகொள்ள இந்த நிகழ்ச்சி நல்ல வாய்ப்பாக இருக்கும்” என தெரிவித்து இருந்தார்.

வினுஷா (இடது)
வினுஷா (இடது)

ரோஷினி சீரியலை விட்டு விலகியதை அடுத்து, கண்ணம்மா கதாப்பாத்திரத்தில் தற்போது வினுஷா நடித்து வருகிறார்.

ரோஷினி சீரியலை விட்டு விலகுவதற்கு முன்பே அந்த சீரியலில், அகில் கதாபாத்திரத்தில் நடித்து வந்த அகிலும் திரைப்பட வாய்ப்புகள் காரணமாக சீரியலை விட்டு விலகினார். அவர் தற்போது 'வீரமே வாகை சூடும்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

கண்மணி
கண்மணி

ரோஷினி மற்றும் அகில் விலகியதைத் தொடர்ந்து அடுத்து விலகலும் அரங்கேறியது. இந்த சீரியலில் இருந்து அஞ்சலி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த கண்மணியும் விலகியுள்ளார். அவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'சூப்பர் குயின்' எனும் ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். மேலும் ஜீ தமிழின் புதிய சீரியல் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதும், இவர் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகக் காரணம் என கூறப்படுகிறது.

இயக்குநர் பிரவீன் புலம்பல்
இயக்குநர் பிரவீன் புலம்பல்

இப்படி, அடுத்தடுத்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த 3 பேர் பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகியதை அடுத்து, இந்த சீரியலின் இயக்குநர் பிரவீன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ‘ரீப்ளேஸ்மெண்ட், அய்யோ.. அய்யோ என்னத்த சொல்லுறது.. எத்தன ஷப்பா.. #பாரதிகண்ணம்மா’ என பதிவிட்டு இருந்தார். இந்தப் பதிவின் பின்னணியில் ‘பைத்தியம் பிடிக்குது’ பாடலையும் சேர்த்துள்ளார்.

தொலைக்காட்சி தொடரின் இயக்குநருக்கு இப்போதுதான் இந்த பாடல் பொருளின் அனுபவம் வாய்த்திருக்கிறது. இவர்கள் இயக்கும் சீரியல்களை ஒரு எபிசோட் விடாது பார்த்தாகும் ரசிகர்களின் நிலைமையை எங்கே போய் சொல்ல..?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in