ஆன்ஸ்க்ரீன்ல எனக்கு பெஸ்ட் ஜோடி ஆயிஷா தான்!

’இது சொல்ல மறந்த கதை’ விஷ்ணு பேட்டி
ஆன்ஸ்க்ரீன்ல எனக்கு பெஸ்ட் ஜோடி ஆயிஷா தான்!

’கனா காணும் காலங்கள்’ சீரியல் மூலமாக நடிப்பு துறைக்குள் வந்தவர் விஷ்ணு. அதன் பிறகு ‘ஆபிஸ்’, ‘சத்யா’ என ஹிட் சீரியல்களைக் கொடுத்தார். இப்போது கலர்ஸ் தமிழில் ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியலில் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் அவரை மதிய இடைவேளையில் காமதேனு இணையதளத்திற்காக பிடித்துப் பேசினோம்.

இதற்கு முன்பு நிறைய சீரியல்கள் நடித்திருந்தாலும், ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியல் எந்த வகையில் உங்களுக்கு ஸ்பெஷல் என்பதைச் சொல்லுங்கள்?

இதற்கு முந்தைய சீரியல்களை எல்லாம் விட ‘இது சொல்ல மறந்த கதை’ சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் கொஞ்சம் முதிர்ச்சியானது. நடிப்பு என்று பார்த்தால் எல்லாம் ஒன்று தான். ஆனால், இதற்கு முன்பு சாக்லேட் பாய் கதாபாத்திரம், பப்பி லவ் என இப்படி ஜாலியாக நடித்திருக்கிறேன்.

இதில் ஒரு ஜர்னலிஸ்ட்டாக முதிர்ச்சியான பாத்திரம். கதாநாயகி கணவனை இழந்து குழந்தையுடன் இருக்கக்கூடியவர். அவர் மீது கதாநாயகனுக்கு ஒரு அக்கறை, காதல் பின்பு திருமணம் என கதை நகரும். எனக்கு இதுபோன்ற கதை புதிது. அதனால், முயற்சி செய்து பார்க்கலாமே என்று சம்மதித்தேன்.

இப்படி ஒரு கதாபாத்திரம் நடிப்பது இதுவே முதல் முறை என்கிறீர்கள்... நடிக்க எளிதாக இருந்ததா?

ஒரு வித்தியாசமான முயற்சியில் இறங்க வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருந்த போது தான், இந்த புராஜெக்ட் வந்தது. இந்த சீரியல் ஏற்கெனவே இந்தியில் ஹிட்டான ஒன்று. அதனால், இந்த கதாபாத்திரத்தை என்னால் சரியாக செய்ய முடியும் என்று நினைத்தேன். அதைத் தாண்டி மக்களுக்கு எந்த அளவுக்கு என்னை இதில் பிடித்திருக்கிறது என்ற ஒன்றும் இருக்கிறது.

இதில் இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நான் படித்தது எல்லாம் மீடியா ஸ்டடிஸ் தொடர்பானது. அப்படி இருக்கும் போது படித்ததையே திரையிலும் நடிக்கும் போது ஜர்னலிஸ்ட் கதாபாத்திரமும் எனக்குப் பிடித்திருக்கிறது.

ரக்‌ஷிதாவுடன் இது முதல் சீரியல் உங்களுக்கு. திரையில் இரண்டு பேரும் டாம் அண்ட் ஜெர்ரி போல இருப்பீர்கள். நிஜத்தில் எப்படி?

நிஜத்திலும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது. செட்டிலும் இருவரும் எதாவது சண்டை போட்டுக்கொண்டு தான் இருப்போம்.

எப்படி இந்த சீரியல் வாய்ப்பு உங்களுக்கு வந்தது?

ஏற்கெனவே, ‘சத்யா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போது இந்த வாய்ப்பு வந்தது. அந்த சீரியலும் எங்களுடைய ஜோடியும் ரசிகர்கள் மத்தியில் ஹிட். சீரியலில் எங்களுக்குள் லவ், கெமிஸ்ட்ரியும் இருக்கிறது எனும் போது மக்கள் அதைத்தான் முதலில் விரும்புவார்கள். அதைத் தாண்டி இன்னொரு புராஜெக்ட் நீங்கள் எடுத்து ஹிட் கொடுப்பது கஷ்டம். அதிலிருந்து மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் இது.

அதனால், தான் இதைத் தேர்ந்தெடுத்தேன். இரண்டையும் ரசிகர்கள் ஏற்றுக்கொண்டதில் சந்தோஷம். ஏனென்றால், சிலர் சத்யா ரசிகர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த சீரியலில் என்னை இப்படி ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது போன்ற விஷயங்களும் இருக்கிறது. இந்த சவால்கள் எல்லாம் தெரிந்து தான் இதை தேர்ந்தெடுத்தேன்.

‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் இருந்து நீங்கள் நடிப்பு துறைக்குள் வந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. என்ன கற்றுக்கொண்டீர்கள்?

கல்லூரியில் இருக்கும் போது பள்ளி நாட்களை நினைத்து ஏங்கி இருப்போம். அது போலத்தான். ஆனால், கல்லூரி முடித்ததுமே என் வாழ்க்கை அழகாகவே தொடங்கியது. இதற்கெல்லாம் நான் விஜய் டிவியின் பிரதீப் அண்ணாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் முதலில் எனக்கு ஒரு சேனலில் வாய்ப்பு கொடுத்து, பின்பு நடிப்பு என கூட்டி வந்தார்.

எந்த ஒரு விமர்சனம் என்றாலும் உண்மையை மறைக்காமல் என்னிடம் சொல்லி விடுவார். அப்படி இருக்கும் போது நான் நல்ல இடத்திற்கு போவது தான் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன்.

மீடியா துறைக்குள் வந்தபோது என்ன எண்ணம் இருந்தது?

முயற்சி செய்து பார்க்கலாமே என்று தான் நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தபோது அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். நடிப்பு சரிவரவில்லை என்றால், இயக்குநராக ஆசைப்பட்டேன்.

நடிப்பே சரியாக போய்க்கொண்டிருப்பதால் அதிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறேன். நடிப்புக்கு முன்பு ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றதால் ஒருவேளை எனக்கு ரியாலிட்டி நிகழ்ச்சி இயக்க வாய்ப்புக் கிடைத்திருக்கலாம். ஆனால், நான் எதிர்காலத்தில் படங்கள் இயக்கவே ஆசைப்பட்டேன்.

‘கனா காணும் காலங்கள்’, ‘ஆபிஸ்’, ‘சத்யா’ என அனைத்து சீரியல்களிலுமே உங்கள் கதாபாத்திரம் ஹிட். உங்களுக்கு பிடித்தது இதில் எது?

எனக்கு ‘சத்யா’ கேரக்டர் ரொம்பப் பிடிக்கும். அதை பர்ஃபெக்ட்டாக செய்தேன். சீரியல் கதாநாயகனாக நான் தொடர்வதற்கு என்னை தயார்படுத்திய ஒன்று இது. ஆனால், என்னுடைய வாழ்க்கையை மாற்றிய ஒரு கதாபாத்திரம் என்றால் ‘ஆபிஸ்’ தான்.

‘கனா காணும் காலங்கள்’ சீரியலில் ஒரு அப்பாவியான பையன். ஆனால், ‘ஆபிஸ்’ சீரியலில் பயங்கர ஜாலியான ப்ளேபாய். அந்த ஜோடியும் அப்போது ஹிட். ‘சத்யா’வில் கொஞ்சம் முதிர்ச்சியான, அமுல் பேபி போல.

உங்களுடன் நடித்த எல்லா நடிகைகளுமே ஹிட் ஆகிறார்களே?

ஆமாம்! என்னுடன் நடித்தாலே அவர்களும் பாப்புலர் ஆகி விடுவார்கள். விஷ்ணு என பெயர் வைத்தாலே அப்படித்தான். இதில் ஆன்ஸ்க்ரீனில் எனக்குச் சரியான ஜோடி என ஆயிஷாவை சொல்வேன்.

சினிமா, சீரியல் என இரண்டிலும் நடித்தாலும் இதில் உங்களுக்கு எது முதல் தேர்வு?

நடிப்பு தான் என் முதல் சாய்ஸ். அதனால், எதுவாக இருந்தாலும் எனக்கு ஓகே தான். எவ்வளவுக்கு எவ்வளவு வாய்ப்புகள் எனக்கு வருகிறதோ அவை அனைத்தையும் பயன்படுத்திக்கொள்வேன். சின்னத்திரை, பெரியதிரை என்றில்லாமல் எதில் வாய்ப்பு வந்தாலும் சரி தான்.

விஷ்ணுவின் ப்ளஸ், மைனஸ் என்ன?

என்னால் முடியாது என்று யாராவது சொன்னால், அதை முடிக்க வேண்டும் என என்னுடைய முழு முயற்சியைக் கொடுப்பேன். மைனஸ் என்றால், சில சமயங்களில் தேவையில்லாத விஷயங்களை மனதில் ஏற்றிக்கொள்வேன். எமோஷனல் டைப் போன்ற விஷயங்களைச் சொல்லலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in