விஜய் படங்கள் என்றாலே பிரச்சினை தான்!

‘பேரன்பு’ விஜய் பேட்டி
விஜய்
விஜய்

சன் டிவியில் ‘கங்கா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகர் விஜய். ஜீ தமிழின் ‘பிரியாத வரம் வேண்டும்’ சீரியல் மூலமாக பிரபலமானவர் தற்போது ‘பேரன்பு’ கார்த்திக்காக தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். சீரியல் என்ட்ரி, மாடலிங் துறையின் சவால்கள், ‘வாரிசு’ படப்பிரச்சினை என பலவும் குறித்து ‘காமதேனு’ இணையதள செய்திகளுக்கு விஜய் அளித்த பேட்டியிலிருந்து...

பேரன்பு’ சீரியல் ஒரு வருடத்தைக் கடக்கிறது. எந்த அளவுக்கு உங்களுக்கு ஸ்பெஷல்?

‘பேரன்பு’ சீரியல் என் வாழ்க்கையில் சிறந்த புராஜெக்ட் என்றுதான் சொல்வேன். இதற்கு முன்பு நான் நடித்த கதாபாத்திரங்கள் வெற்றி அடைந்திருக்கிறது. ஆனால், சீரியலாகவே வெற்றிப் பெற்றது என்றால் இதைத்தான் சொல்வேன். இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரம் எப்படிப்பட்டது என்று எல்லாருக்குமே தெரியும். நிஜத்திலும் கிட்டத்தட்ட நான் அப்படித்தான். ஆனால், பழகிவிட்டேன் என்றால் சகஜமாகி விடுவேன்.

சீரியலில் எனக்கும் வைஷ்ணவிக்கும் புரிதல் வர காலம் எடுக்கும். ஆனால், நிஜத்தில் யாராக இருந்தாலும் நன்றாக பேசிப் புரிந்து கொண்ட பின்னரே, தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வேன்.

பொறியியல் படித்துவிட்டு நடிப்பு நோக்கி நகர்ந்தது ஏன்?

பொறியியல் படித்துவிட்டு ஒரு கம்பெனியில் வேலை பார்த்து விட்டு மீடியாவுக்குள் நுழைந்தவர்களில் நானும் ஒருவன். வேலை பார்த்துக் கொண்டே மாடலிங்கும் செய்தேன். ஒரு நிகழ்ச்சியில் ‘பேச்சுலர்’ கதாநாயகி திவ்யபாரதியும் நானும் வெற்றி பெற்றோம். பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. பொறியியல் வேலை மற்றும் சீரியல் என இரண்டையும் செய்து வந்தேன். ஆனால், எதாவது ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்தபோது, நடிப்பிற்கு வந்துவிட்டேன்.

நடிகை திவ்யபாரதி சமீபத்தில் தனக்கு வரும் உடல்கேலிகள் குறித்து பதிவிட்டிருந்தார். நீங்கள் மாடலிங் துறையில் அதுபோன்ற சவால்களை எதிர்கொண்டீர்களா?

எல்லாத் துறைகளிலுமே பிரச்சினைகள் இருக்கும்தான். மாடலிங் துறையில் குறிப்பாக, பெண்களுக்கு ‘காஸ்டிங்’ பிரச்சினை இருக்கும். வாய்ப்பு வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கும் தள்ளப்படுவார்கள். சிலர் ஒத்துப் போவார்கள்; சிலர் விலகிப் போவார்கள். பெண்களைப் போலவே, ஆண்களுக்கும் இந்த நிலை உண்டு.

பணம் கிடைத்தால் வாய்ப்பு என்ற நிலையும் உண்டு. நான் சொல்வது எல்லாம் சிறிய அளவில்தான் நடக்கும். தொடர்ந்து நீங்கள் முயற்சி செய்துகொண்டே இருந்தால், உங்களுக்கு நியாயமாக வாய்ப்புக் கொடுப்பார்கள் இல்லையா, அவர்களிடம் நிச்சயம் காலம் கொண்டு போய் சேர்க்கும். நான் உட்பட பலரும் அப்படிதான் நல்லவிதமாக வந்து சேர்ந்தோம். நாம் எப்படி அதை எதிர்கொள்கிறோம் என்ற ஒரு விஷயமும் இருக்கிறது.

நீங்கள் நடிகர் விஜய்யுடைய தீவிரமான ரசிகர். இப்போது ‘வாரிசு’ Vs ‘துணிவு’ என்ற விஷயம் போய்க் கொண்டிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

என்னுடன் யாரும் வரவில்லை என்றாலும்கூட தனியாகச் சென்று விஜய் படம் பார்க்கும் அளவுக்கு அவரின் தீவிரமான ரசிகன் நான். அதனால், என்னுடைய தேர்வு நிச்சயம் ‘வாரிசு’தான். ‘துணிவு’ படம் செகண்ட் ஷோ அல்லது அடுத்த நாள் போவேன். இரண்டு பேருமே ஜாம்பவான்கள். ‘பில்லா’ படம் எல்லாம் தனியே சென்று பார்த்திருக்கிறேன். இரண்டு படங்களும் வெற்றிப் பெற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

சமூக வலைதளங்களில் எப்போதுமே விஜய் Vs அஜித் என்ற போட்டி ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கிறதே? இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாம் எந்தவொரு வேலை செய்தாலும் அதில் போட்டி என்பது இருக்க வேண்டும். அது நம் வேலை சிறப்பாக வரவும் உதவும். அதன் பிறகுதான் வெற்றி, தோல்வி எல்லாம். இந்தப் புரிதலும் மதிப்பும் ரசிகர்களுக்குள்ளும் இருக்க வேண்டும். இதை விட்டுவிட்டு ஒருவர் குடும்பத்தை ஒருவர் திட்டுதல் தேவையில்லாதது. உண்மையில், படம் பார்த்துவிட்டு அதைப் பற்றி அலச வேண்டுமே தவிர, இப்படிப் பேசி நம் மனநலனை பாதிக்க விடக்கூடாது. படம் நன்றாக இருந்தால் பாராட்ட வேண்டும், இல்லை என்றால் அடுத்தப் படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று விலகுவதுதான் முதிர்ச்சியான ஒருவர் செய்யக்கூடிய வேலை. அதுதான் எல்லாருக்கும் நல்லது.

இந்த மாதிரியான சண்டைகள் வேண்டாம் என சம்பந்தப்பட்ட நடிகர்களே முன்வந்து சொல்லலாமே?

ரசிகர்களுக்குள்தான் இந்த சண்டை எல்லாம். விஜய், அஜித் இருவரும் அவ்வப்போது குடும்பமாக சந்தித்துக் கொள்வதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதைத்தாண்டி அவர்களே பொது வெளியில் சொன்னால் கூட, அதை தடுத்து நிறுத்த முடியாதபடிதான் இருக்கிறது. ‘திருடனாய் பார்த்து திருந்தா விட்டால்...’ என்று சொல்வது போல, அவர்களாய் பார்த்துத்தான் திருந்த வேண்டும்.

வாரிசு’ பட இசைவெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்க்கிறீர்கள்?

விஜய் படம் வெளியாவதைப் போலவே, அவர் பட இசைவெளியீட்டு விழாக்களும் எனக்கு கொண்டாட்டம்தான். என்ன ட்ரெஸ், என்ன ஹேர்ஸ்டைல், என்ன குட்டி ஸ்டோரி என எல்லாவற்றையும் எதிர்பார்த்து இருக்கிறேன். ‘மாஸ்டர்’ பட சமயத்தில் ரெய்டு, இப்போது தியேட்டர் பிரச்சினை என பல விஷயங்கள் ஒவ்வொரு படத்திற்கும் இருக்கிறது. விஜய் சார் படங்கள் என்றாலே பிரச்சினை இல்லாமல் இல்லை என்பது ரசிகர்களுக்கும் பழகிவிட்டது. இதைத்தாண்டி படம் எப்படி இருக்கப் போகிறது என்ற ஆர்வமே ரசிகர்களுக்கு அதிகம் இருக்கிறது.

எந்த இயக்குநர் இயக்கத்தில் நடிக்க உங்களுக்கு ஆசை இருக்கிறது?

சில படங்களில் சின்னச் சின்னக் கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறேன். அதைத்தாண்டி, மணி ரத்னம், கெளதம் வாசுதேவ் மேனன், ஷங்கர், பாலா இவர்களது இயக்கத்தில் நடிக்க ஆசை உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் உண்டு. இவர்கள் படத்தில் நடித்தாலே நாம் நடிகர் என்பதை நிரூபித்து விடலாம்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in