நேற்று, நாளை குறித்து அதிகம் யோசிக்கமாட்டேன்!

உதவி இயக்குநர் ஜெனிஃபர் உற்சாகப் பேட்டி
ஜெனிஃபர்
ஜெனிஃபர்

”படங்கள், இடையில் கொஞ்சம் சீரியல், அடுத்து பிசினஸ் என வாழ்க்கை பிஸியாகவும் ஜாலியாகவும் போய்க் கொண்டிருப்பதில் சந்தோஷம். நான் பெரும்பாலும் நேற்று, நாளை குறித்து அதிகம் யோசிக்காத நபர். இன்று எப்படி என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்பதைக் குறித்து மட்டும் யோசித்து சிறப்பாகச் செயல்படுவேன். அதை மட்டும் யோசித்து செய்வதால் நானும் மகிழ்ச்சியாக இருப்பேன், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன்” எனர்ஜியாகவும் செம ஜாலியாகவும் பேட்டியை ஆரம்பித்தார் ஜெனிஃபர்.

படங்கள், சீரியல், ஒப்பனைக் கலைஞர் என்றெல்லாம் வலம்வந்தவர் அடுத்த அவதாரமாக கெளதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் உதவி இயக்குநராகவும் வேலை பார்த்திருக்கிறார் ஜெனிஃபர். அவரிடம் காமதேனு இணையதள செய்திகளுக்காகப் பேசியதிலிருந்து...

ஒரு வயதில் இருந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துக் கொண்டு வருகிறீர்கள். இந்தப் பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது என்ன தோன்றும்?

திரும்பிப் பார்ப்பதால்தான் நான் நானாக இருக்கிறேன். நான் மறந்தாலும்கூட நிறைய பேர் என்னிடம் வந்து, “நீங்கள் ஜெனிஃபர்தானே... ‘கில்லி’ புவி தானே” என்று இப்போது வரை அன்பைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், என்னுடைய மீடியா பயணம் என்பது அவ்வப்போது நினைத்து மகிழக்கூடிய ஒன்றாகதான் இருந்திருக்கிறது. சினிமா பிடிக்குமா இல்லையா என்றுத் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அதாவது நான் ஒரு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்போது சினிமா பிடித்து, அதைச் சுற்றியே இயங்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த சோஷியல் மீடியா யுகத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை புகழ் வெளிச்சத்திற்கு கொண்டு வர நினைக்கிறார்கள் என்று சொல்லப்படுவதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

உண்மைதான்! போட்டோ, ரீல்ஸ்க்கு வரும் லைக்ஸ், கமெண்ட்ஸ் போன்றவற்றை வைத்துத்தான் பிறர் நம்மை விரும்புகிறார்கள், அதுதான் வெற்றி என்ற மனநிலைக்குக் குழந்தைகளை கொண்டு வந்துவிடக்கூடாது. அதைப் பெற்றோர்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த மாதிரி தொழில்நுட்பம் இருக்கக்கூடிய காலகட்டத்தில் இல்லாமல் நான் ஒரு 90’ஸ் கிட் என்பதில் எனக்கு பெரிய ஆறுதல். சிலர் இந்த சோஷியல் மீடியா புகழ் என்பதை பாசிட்டிவாகவும் கையாள்கிறார்கள். ஆனால், எல்லாக் குழந்தைகளுக்கும் அப்படி இருக்கும் என்று சொல்லிவிட முடியாதில்லையா?

இப்போதெல்லாம் எல்லாப் படங்களுக்கும் இரண்டாம் பாகம் என்ற ட்ரெண்ட் உள்ளது. அதுபோல ‘கில்லி2’ வருவது பற்றி என்றாவது யோசித்திருக்கிறீர்களா?

‘கில்லி’ படத்துக்குப் பிறகு இயக்குநர் தரணி சாரையும் எப்போதாவதுதான் சந்தித்திருப்பேன். ஆனால், தாமு சார் மட்டும் அடிக்கடி ‘கில்லி2’ பத்தி பேசுவார். அதில் ஓட்டேரி நரியும், புவியும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். படப்பிடிப்புத் தளத்தில் விஜய் சார் செம ஜாலியாக பேசுவார். இதற்கு முன்பு அவருடன் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்திருக்கிறேன். அந்த கெமிஸ்ட்ரிதான் கில்லியிலும் ஜாலியாகத் தொடர்ந்தது.

நான் ‘கில்லி’ படத்தில் ‘வாடா போடா’ என்று சொல்லத் தயங்கியபோது கூட, “நீ என் தங்கச்சிதான். தயங்காம சொல்லு” என விஜய் சார் சொன்னார். படத்தில் நான் சொன்ன, “பதில சொல்றா” மாடுலேஷன் பிடித்துப்போய் என்னிடம் அடிக்கடி அதைச் சொல்லச் சொல்லிக் கேட்பார்.

சீரியல்களிலும் நடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது அங்கு உங்களைப் பார்க்க முடியவில்லையே?

சீரியல் என்னுடைய நேரத்தை அதிகம் எடுத்துக்கொண்டது. இரண்டு பிசினஸ்களைப் பார்த்துக் கொண்டிருப்பதால் அதற்கான நேரம் செலவிட முடியாமல் இருந்தது. அதனால், சீரியல்களில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்திருக்கிறேன். படங்களும் நடித்துக் கொண்டிருக்கிறேன். சோப் செய்து தருவது, நலங்கு மாவு என இயற்கைப் பொருட்களைத் தயாரித்து விற்பது, கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்களுக்கு க்ளாஸ் எடுப்பது என பிஸியாகவே இருக்கிறேன்.

எனது அனுபவத்தில், ஒரே ஒரு வருமானத்தை வைத்திருப்பதைவிட உங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலோ அல்லது உங்கள் திறமையைப் பயன்படுத்தி இன்னொரு வருமானத்தையோ தேடிக்கொள்ள வேண்டும் என்று அனைவருக்கும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

விஜே சித்ரா உங்களுடைய தோழி. அவருடைய மரணம் இன்னும் மர்மமாகவே நீடிப்பது பற்றி..?

சித்ரா எனக்கு நெருங்கிய தோழிதான். ஆனால், அவருடைய மரணத்தைப் பொறுத்தவரை என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. கொலையா தற்கொலையா என்ற குழப்பம் எனக்கும் இருக்கிறது. ஒருவேளை கொலை என்றால், இதற்குப் பின்னால் இருப்பவர்கள் நிச்சயம் வெளியே வரவேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் என்று வேண்டிக்கொள்வேன்.

பிக் பாஸ் இந்த சீசன் பார்க்கிறீர்களா?

தொடர்ச்சியாக இல்லை என்றாலும் அவ்வப்போது பார்த்து வருகிறேன். இந்த சீசன் ஆரம்பித்ததில் இருந்தே பரபரப்பாக போய்க் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மற்றபடி உள்ளே உள்ள சச்சரவுகள் குறித்து முழுதாக பார்க்காமல் என்னால் பதில் சொல்ல முடியாது. என்னுடைய நண்பர்கள் கதிரவன், மகேஸ்வரி இருவருமே உள்ளே இருக்கிறார்கள். இவர்கள் தவிர்த்து ஜிபி முத்துவும் எனக்குப் பிடித்த போட்டியாளர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in