‘நம்பி ஏமாறாதீர்கள்... நானே சொல்வேன்’ - புகார்களுக்கு விளக்கமளித்த புகழ்!

‘நம்பி ஏமாறாதீர்கள்... நானே சொல்வேன்’ - புகார்களுக்கு விளக்கமளித்த புகழ்!

விஜய் தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு?' உள்ளிட்ட நகைச்சுவை நிகழ்சிகள் மூலம் பிரபலமானவர் புகழ். மேலும் அதே விஜய் தொலைக்காட்சியில் 'குக் வித் கோமாளி' சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியில் அவர் கோமாளியாக மேலும் பிரபலமடைந்தார். ‘வலிமை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருக்கிறார். முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துவருகிறார். ‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் அவ்வப்போது கோமாளியாகவும் வருகிறார்.

பல சின்னத்திரை பிரபலங்கள் நகைக் கடைகள், உணவகங்கள் போன்றவற்றின் திறப்பு விழாக்களுக்குச் சிறப்பு விருந்தினர்களாகச் செல்வது வழக்கம். அந்த வகையில் நடிகர் புகழும் பல திறப்புவிழா நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவருகிறார். இந்நிலையில் இது போன்ற நிகழ்ச்சிகளைச் சிலர் தவறாகப் பயன்படுத்தி புகழின் பெயரைச் சொல்லி ஏமாற்றிப் பணம் பறிப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் விளக்கமளித்திருக்கிறார் புகழ்.

அதில், ‘நான் ஏதாவது ஒரு நிகழ்வுக்கு ஊருக்கு வருகிறேன் என்று சொல்லி என் பெயரைப் பயன்படுத்தி பலரும் பணம் ஏமாற்றி வருவதாகச் செய்திகளைக் கேள்விப்படுகிறேன். இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதாக இருந்தால் நானே அது குறித்த அறிவிப்பை எனது சமூகவலைதளப் பக்கங்களில் வீடியோவாகவும் புகைப்படங்களாகவும் பகிர்ந்துவிடுவேன். தற்போது நான் பிலிப்பைன்ஸில் உள்ளேன். அதையும் நான் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளேன். ஆனால் நான் ஈரோடு பக்கத்தில் ஒரு நிகழ்வுக்கு வருகிறேன் என்று சொல்லி சிலர் என் பெயரைப் பயன்படுத்தி பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்கள். தயவுசெய்து அதுபோன்று யாரேனும் வந்தால் நம்ப வேண்டாம்’ என்று புகழ் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in