இதனால் தான் டிவி சீரியலை மக்கள் வெறுக்கிறார்கள்!

‘ஜமீலா’ அஜய் பேட்டி
அஜய்
அஜய்

கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘ஜமீலா’ சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் வந்திருக்கிறார் நடிகர் அஜய். சீரியல், சினிமா, வெப் சீரிஸ் என பிஸியாக இருந்தவரிடம் ‘காமதேனு’ இணையதளத்திற்காகப் பேசினோம். ‘ஜமீலா’வில் தனது பங்களிப்பு, ஆர்வம், சீரியல் குறித்தான தனது பார்வை என பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

சென்னையில் ஒரு மழைக்காலத்தில் பேசிக் கொண்டிருக்கிறோம். எப்படி போய்க் கொண்டிருக்கிறது எல்லாம்?

அஜய்
அஜய்

எனக்கு இப்போது எல்லாமே ‘ஜமீலா’ என்று போய்க் கொண்டிருக்கிறது. தூக்கத்தில் கூட ‘ரெடி, கேமரா, ஆக்‌ஷன்’ என்றுதான் நினைப்பே இருக்கிறது. மூன்று நாட்கள் ஆகிறது பிரேக் விட்டு. இருந்தும்கூட மனம் முழுக்க, நாம் எப்போது அடுத்த ஷூட் போவோம் என்றுதான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

பொதுவாக, சீரியலில் இருப்பவர்கள் எப்போது பிரேக் கிடைக்கும் என்றுதான் நினைப்பார்கள். நீங்கள் நடிப்பதற்கு இவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்களே..?

இதற்கு முன்பு நான் சில படங்கள், விளம்பரம், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் நடித்திருந்தேன். அதெல்லாம் கரோனா சமயத்தில் வெளிவர தாமதமானது. அப்போதுதான் என் நண்பர் மூலமாக கலர்ஸ் தமிழில் இந்த சீரியல் வாய்ப்பு வந்தது. சினிமா, வெப் சீரிஸ் எதுவாக இருந்தாலும் நான் நடிகன் என்பதால் வந்த வாய்ப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். இந்த சீரியலுக்குப் பிறகு ரசிகர்களும் அதை ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி.

ஜமீலா’ கதையில் எந்த அம்சத்தால் கவரப்பட்டு நடிக்க ஒத்துக் கொண்டீர்கள்?

இந்தக் கதை தனித்துவமானது என்பதுதான். இந்த சீரியலை நான் ஒத்துக்கொண்ட பிறகு ரசிகர்களும், என் நண்பர்களும் வந்து என்னிடம் கேட்பது ஒரே விஷயம்தான். மாமியார்- மருமகள் சண்டையை மட்டுமே பார்த்து பழகிவிட்ட எங்களுக்கு நல்ல கதையம்சத்தோடு இணையத் தொடர் போல ஒரு சீரியல் வராதா என்றுதான் அவர்கள் கேட்டார்கள். அப்படி எதிர்ப்பார்ப்பவர் களுக்கு ‘ஜமீலா’ ஒரு புது முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த புது முயற்சியை முன்னெடுத்ததற்காக தயாரிப்பு நிறுவனத்தையும் பாராட்ட வேண்டும்.

ஏனெனில், முஸ்லிம்களின் வாழ்வியலை இந்த அளவிற்கு இதற்கு முன்பு தமிழில் எந்தவொரு சீரியலிலோ அல்லது படங்களிலோ காண்பிக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் முன்பு சொன்னதுபோல, அந்த மாற்றத்தை நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

புதுவிதமான சீரியல் என்று நீங்கள் சொல்லும் போது என்னமாதிரியான விஷயங்கள் எல்லாம் இதில் கற்றுக் கொண்டீர்கள்?

இந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் ஏ.கே. இந்தக் கதாபாத்திரமும் எனக்கு புதிதுதான். சில நாட்களுக்கு முன்புகூட படப்பிடிப்புத் தளத்தில் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பள்ளிச் சிறுவர்கள், எனது சீரியல் கதாபாத்திரத்தை அடையாளம் கண்டுகொண்டார்கள். அதுவே இதன் வெற்றி என நினைக்கிறேன். வீட்டில் உள்ள பெண்களைத் தாண்டியும் சிறுவர்கள் வரைக்கும் இந்த சீரியல் சென்று சேர்ந்திருக்கிறது எனும்போது அந்தப் பொறுப்பை உணர்ந்தே என் கதாபாத்திரத்தை நான் புரிந்துகொண்டு நடிக்கிறேன்.

சீரியல்களில் வழக்கமாக காண்பிக்கும் எந்தவொரு விஷயத்தைத் தவிர்க்கலாம் என்று ஒரு பார்வையாளராகச் சொல்வீர்கள்?

நான் ஆரம்பத்திலேயே சொன்னதுபோல, பார்வையாளர்களை எந்த அளவிற்கு கதையைப் பிடிக்க வைக்கிறோம் ஆர்வத்தைத் தூண்டுகிறோம் என்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. சீரியலை சின்னத்திரை என்ற வட்டத்திற்குள் மட்டும் நான் சுருக்க விரும்பவில்லை. அது படமோ, சீரியலோ, வெப்சீரிஸோ... கலை என்பது மிகப் பெரியது. அதை நாம் எப்படிக் கொண்டுப் போய் சேர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது. அதற்கான பொறுப்பும் நமக்கு அதிகம். அந்தப் பொறுப்பை உணர்ந்தே அனைவரும் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்.

இன்றைய தேதியில் அனைவரும் ஏன் சீரியல்களை பெரும்பாலும் வெறுக்கிறார்கள் என்றால் அந்த கதையில் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்தாமல் சொன்ன விஷயத்தையே திரும்பத் திரும்பச் சொல்வதுதான்.

கதையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைக் கணிக்கக் கூடிய அளவிற்கு பார்வையாளர்கள் அட்வான்ஸாக இருக்கிறார்கள். அதில் அவர்களுக்கான களமும் கிடைக்கிறது. அவர்களிடம் போய், நாம் இன்னும் சொன்ன கதையையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தால் அது நன்றாக இருக்காது.

ஜமீலா’ பற்றி பார்வையாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மதம் என்பதையும் தாண்டி, ‘ஜமீலா’வில் நிறைய விஷயங்கள் புதிதாக காட்டி இருக்கிறோம். பலரும் சோர்ந்து போன நேரத்தில் எதாவது ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று கடவுளிடம் கேட்டிருப்போம். அப்படியான ஒரு சமயத்தில்தான் ஜமீலா வாழ்க்கையில் ஏகே நுழைவான். இது மாதிரியான பல விஷயங்களை நிஜத்திலும் நிறையப் பேர் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். பிரியாணி சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த அனுபவமும் கிடைக்கும். ஃபுல் மீல்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அந்த அனுபவமும் கிடைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in