
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை இன்று காலை 7.30 மணிக்கு ஏவப்படும் என்று கூறப்பட்ட நிலையில் அதற்கான கவுண்டவுன் நேற்று துவங்கியது. ஆனால், எதிர்பாராத வானிலை காரணமாக ககன்யான் ஷெட்யூல் காலை 8 மணிக்கு மாற்றப்பட்டது. இதைனிடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக ககன்யான் விண்ணில் ஏவப்படுவது மேலும் தாமதமானது. உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு காலை 10.16-க்கு ககன்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் தனது தடத்தைப் பதிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதற்காக, கடந்த 2007-ம் ஆண்டு ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் முழு வீச்சில் நடத்தப்பட்டன.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் விண்வெளி வீரர்களை அனுப்பி, 2 அல்லது 3 நாட்கள் ஆய்வுப் பணி மேற்கொண்டு பிறகு அவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின் நோக்கமாகும். வரும் 2025-ம் ஆண்டு இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை இஸ்ரோ அண்மையில் வெளியிட்டது. ஆந்திர பிரதேசம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி மையத்திலிருந்து இன்று காலை 8 மணிக்கு ககன்யான் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ககன்யான் சோதனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதன்பின் அப்பணிகள் முடிந்த பின் ககன்யான் விண்ணுக்கு ஏவப்பட்டது. இத்திட்டத்தின் வெற்றிக்கு பிறகு, 2040-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.