
நிலவில் மண் மிக இறுக்கமாக இருப்பதால்தான் ரோவரில் பதிக்கப்பட்டுள்ள அசோகச் சக்கரம் உள்ளிட்ட தடங்கள் அங்கு பதியவில்லை என்று இஸ்ரோ விளக்கம் தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான் 3லிருந்து ஆகஸ்ட் 17-ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. நிலவின் மேற்பரப்பில் இஸ்ரோ மற்றும் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் அடையாளத்தை அது நிலவில் தடமாக பதிக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது.
ஆனால் ரோவர் கருவியானது நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், அயர்ன் உள்பட 8 வகையான தனிமங்கள் இருப்பதை தனது ஆய்வில் உறுதி செய்தது. அதோடு நிலவின் தென்துருவம் தொடர்பான படங்களையும் இஸ்ரோவுக்கு அனுப்பியது. அந்த வகையில் தனக்கு இடப்பட்ட வேலையை மிக சிறப்பாக ரோவர் செய்து முடித்தது. ஆனால் அதனால் நிலவில் தடம்பதிக்க முடியவில்லை.
லேண்டர் ரோவரால் நிலவில் ஏன் தடம் பதிக்க முடியவில்லை என்ற கேள்விக்கு இஸ்ரோ இன்று பதில் அளித்துள்ளது. 'நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக உள்ளது. எனினும் அங்குள்ள மண் புதிய கனிம வடிவில் உள்ளது. அதன் காரணமாக தடம் பதிவாகவில்லை இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.