சாட்ஜிபிடி சரிதம் – 32; மடத்தனம் மிக்க இயந்திரமா சாட்ஜிபிடி?

புல்ஷிட் ஜெனரேட்டரா சாட்ஜிபிடி?
புல்ஷிட் ஜெனரேட்டரா சாட்ஜிபிடி?

சாட்ஜிபிடி அதன் ஆற்றலுக்காக பலவிதமாக வர்ணிக்கப்படுகிறது. அதைவிட முக்கியமாக அதன் குறைகளுக்காக பலவிதமாக விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில், அர்த்தமில்லா உள்ளடக்கத்தை உருவாக்கித்தரும் மட இயந்திரம் என்பது, சாட்ஜிபிடி மீதான முக்கிய விமர்சனங்களில் ஒன்றாக அமைகிறது. ஆங்கிலத்தில் இது புல்ஷிட் ஜெனரேட்டர் (Bullshit Generator ) என குறிப்பிடப்படுகிறது.

சாட்ஜிபிடி ஏஐ சாட்பாட் என்ற முறையில் பெரும்பாலும் புத்திசாலித்தனத்துடன் தொடர்புபடுத்தி பேசப்படும் நிலையில், உண்மையில் சாட்ஜிபிடி மடத்தனத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் என்று சொல்லப்படுவது, அதன் மீதான வலுவான குற்றச்சாட்டாகவும் அமைகிறது.

சாட்ஜிபிடியின் ஆக்கத்திறம் வியக்க வைப்பதாக அமைந்தாலும், அதன் பின்னே இருக்கும் செயல்பாட்டின் அடிப்படையை நோக்கினால், தான் உருவாக்கும் வாசகங்கள் பற்றி எந்த புரிதலும் இல்லாமல் வெறும் புள்ளியியல் விதிகளையும், மொழிக்கான நிகழ்தகவு வாய்ப்புகளையும் கொண்டு வார்த்தைகளை வரிசையாக அடுக்கும் ’வாய்ப்பியல் கிளி’ (stochastic parrot) என்று சாட்ஜிபிடி விமர்சிக்கப்படுவதை ஏற்கனவே பார்த்தோம். இதே அடிப்படையில் தான், சாட்ஜிபிடி அர்த்தமில்லா குப்பைகளை உருவாக்குவதாக விமர்சிக்கப்படுகிறது.

மட இயந்திரம்
மட இயந்திரம்

சாட்ஜிபிடியிடம் இலக்கிய மேதை காப்கா பாணியில் கதை எழுதித்தருமாறு கேட்டால், அச்சு அசல் காப்காவின் வாசகங்கள் போலவே தோன்றக்கூடிய கதையை எழுதி தரலாம். இதே போல, சாமுவேல் கூல்ரிட்ஜ் போலவே கவிதை எழுதித்தரலாம். காப்கா கதைகள், கூல்ட்ரிஜ் கவிதைகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் சாட்ஜிபிடி இத்தகைய நகல்களை எளிதாக உருவாக்கித்தரலாம்.

ஆனால், காப்கா கதைகளில் அவரது பாத்திரங்கள் எதிர்கொண்ட நிச்சயமற்றத் தன்மையையும், உலகையும் அதிகாரத்தையும் எதிர்கொள்வதில் உள்ள வலியையும் சாட்ஜிபிடி புரிந்து கொள்வதும் இல்லை, வாசகர்களுக்கு அதை கடத்துவதும் இல்லை. அதே போல், கூல்ட்ரிஜ் வரிகளை பிரதியெடுக்க முடியுமேத் தவிர, அவர் கனவு நிலையில் எழுதிய நீள் கவிதை கூப்ளை கான் போன்ற ஒரு படைப்பு மேதைமையின் விளிம்பைக் கூட அதனால் தொட முடியாது.

இந்த விமர்சனம் சாட்ஜிபிடி போன்ற ஆக்கத்திறன் கொண்ட எல்லா ஏஐ சாட்பாட்களுக்கும் பொருந்தும்.

ஆக்கத்திறன் சாட்பாட்கள், ஒரு வார்த்தை தொடர்பான புரிதலும் இல்லாமல் மனிதர்கள் ஆக்கம் போன்றவற்றை உருவாக்கும் போது, அதை குப்பையாக இல்லாமல் பொருள் கொள்ளத்தக்கதாக இருப்பது, உள்ளடக்கத்தின் தன்மையில் இருந்து அர்த்தத்தை பயனாளிகள் உருவாக்கி கொள்வதனால் மட்டுமே சாத்தியமாகிறது. ஆக, மனிதர்கள் தான் சாட்பாட்கள் ஆக்கங்களுக்கு பொருள் உருவாக்கிக் கொள்கிறார்களே அன்றி, அவை அர்த்தமற்ற வார்த்தைகளின் தொடர்ச்சியாகவே காணப்படும்.

சாட்ஜிபிடி உருவாக்கித்தரும் அர்த்தமில்லா வார்த்தை குவியல்களின் சரியான தன்மையை புரிந்து கொள்ள, அவற்றை மடத்தன உருவாக்கங்கள் எனக் கொள்வதே சரி.

சாட்ஜிபிடியின் பின்னே உள்ள பெரும் மொழி மாதிரிகள், மனித ஆக்கங்களின் பெருந்தொகுப்பில் இருந்து கோடிக்கணக்கான காரணிகள் மூலம் பொதுத்தன்மையை இனங்கண்டு அர்த்தமுள்ளதாக தோன்றும் வாசகங்களை உருவாக்கினாலும், இது அடிப்படையில் கணிப்பு இயந்திரம் மட்டுமே என்கிறார் டான் மெக்குவில்லான் (Dan McQuillan ) எனும் ஏஐ ஆய்வாளர். தொழில்நுட்ப நோக்கில் இது வெறும் மடத்தன இயந்திரம் என அவர் அழுத்தந்திருத்தமாக கூறுகிறார்.

சாட்ஜிபிடி
சாட்ஜிபிடி

இந்த விமர்சனத்தை இன்னும் எளிதாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சாட்ஜிபிடி உளறிக் கொட்டுகிறது அல்லது அடித்து விடுகிறது என்று சொல்லலாம். ”இந்த மொழி மாதிரிக்கு அது பேசுவது குறிக்கும் பொருள் பற்றி எந்த புரிதலும் இல்லை; ஏனெனில் அதற்கு எது பற்றியுமே புரிதல் கிடையாது” என்கிறார் மெல்குவில்லான். ஆனால், இதை சாட்ஜிபிடி மிகுந்த நம்பிக்கையோடு செய்ய தயார் செய்யப்பட்டுள்ளது என்றும் சாடுகிறார்.

சாட்ஜிபிடி தனது பயிற்சி தரவுகளில் உள்ள சார்புகளை வெளிப்படுத்துவதோடு, தப்பும் தவறுமான தகவல்களை மிகவும் உறுதியாக அளிப்பதையும் பெருங்குறையாக அவர் கட்டுரை ஒன்றில் சுட்டிக்காட்டியிருக்கிறார். சாட்ஜிபிடியின் சார்பு அம்சத்தை மீறி அதன் உண்மையான அபாயம், அது தொழிலாளர் விரோத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது தான் என்கிறார்.

சாட்ஜிபிடி போன்ற ஆக்கத்திறன் கொண்ட ஏஐ மென்பொருள்களுடன் வாழ வேண்டியது தான் எதிர்கால யதார்த்தம் என்று சொல்லப்படுவதையும் அவர் கேள்விக்குள்ளாக்குகிறார். சாட்ஜிபிடி மட்டும் அல்ல, நாமெல்லாம் வாய்ப்பியல் கிளிகளே என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மென் கூறியதை சுட்டிக்காட்டி, இந்த கருத்து தங்களுக்கு அல்ல மற்றவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனும் மேட்டிமையோடு சொல்லப்படுவதாகவும் விமர்சித்துள்ளார்.

சாட்ஜிபிடி பரபரப்புக்கு மத்தியில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய குரல்களில் ஒன்றாக இது அமைகிறது.

சாட்ஜிபிடியின் மடத்தன ஆக்க பாதிப்பை புரிந்து கொள்ள, ஹாரி பிராங்க்பர்ட் (Harry Frankfurt) எனும் நவீன தத்துவ வல்லுனரை அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் மடத்தனம் பற்றி இவர் ஆன் புல்ஷிட் (On Bullshit) எனும் புத்தகம் எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில் புல்ஷிட் எனப்படும் அர்த்தமற்ற வாசகங்களை அர்த்தம் உள்ளது போலவே பேசும் மடத்தன வெளிப்பாடு பற்றி விரிவாக பேசுபவர், பொய்மையில் இருந்து இது வேறுபட்டது என்கிறார்.

மடத்தன வெளிப்பாட்டின் முக்கிய அம்சம், பொய் சொல்லும் நோக்கம் அல்ல, மாறாக உண்மை பற்றிய எந்த அக்கறையும் இல்லாத தன்மை என்கிறார். மடத்தன வெளிப்பாட்டின் நோக்கம், தகவல்களின் ஆதாரம் அல்லது உண்மை தன்மை எல்லாம் அல்ல, பேசும் விஷயம் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பது மட்டுமே என்றும் குறிப்பிடுகிறார்.

சாட்ஜிபிடிக்கும் உண்மை பற்றிய எந்த புரிதலும் கிடையாது. ஐயோ பாவம் அது, தான் சொல்வதில் உள்ள பிழைத்தகவல்கள் பற்றிய கவலையும் இல்லாமல் எந்த உள்நோக்கமும் இல்லாமல் மனிதர்கள் பொருள் கொள்ள வேண்டிய வாசகங்களை உருவாக்கித் தள்ளுகிறது. அதை சரியாகவும் செய்கிறது என்பது வேறு விஷயம். இந்த ஏஐ உருவாக்கத்தின் அபத்தத்தையும், ஆபத்தையும் உணர வேண்டும் எனில், பிராங்க்பர்ட் விளக்கும் மடத்தன வெளிப்பாட்டை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மடத்தன உருவாக்கம் என்பது மனிதகுல வரலாறு முழுவதும் காணப்படுவது தான் என்றாலும், சாட்ஜிபிடி போன்ற ஏஐ சேவைகள் இதை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன. இதனால், மனிதர்கள் உருவாக்கிய ஆக்கத்தை கண்டறிவது என்பது பெரும் சிக்கலாகி இருக்கிறது. உண்மையின் மீதான பெரும் தாக்குதலாக இது அமையலாம்.

மட இயந்திரமா சாட்ஜிபிடி?
மட இயந்திரமா சாட்ஜிபிடி?

சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களின் உருவாக்கத்திறனால், இனி வருங்காலத்தில் உள்ளடக்கத்தின் பெரும்பகுதி இயந்திர உருவாக்கமாக இருக்கலாம் என எச்சரிக்கப்படுகிறது. இவற்றின் நடுவே உண்மை தகவல்களை தேடுவது என்பது புதிய யதார்த்தமாக மாறலாம்.

சாட்ஜிபிடியின் பின்னே உள்ள ஆக்கத்திறனின் போலித்தன்மை பற்றி, ஜிபிடி-3 மொழி மாதிரியை விமர்சிக்கும் வகையில் சாட்ஜிபிடி அறிமுகத்திற்கு முன் எழுதப்பட்ட நவ்டில் (https://nautil.us/) கட்டுரை, ஆக்கத்திறன் ஏஐ சேவைகள் இணையத்தையும், சமூக ஊடகத்தையும் இரைச்சல் மிக்கதாக மாற்றிவிடும் என எச்சரிக்கிறது.

’சில நேரங்களில் இது தீங்காகலாம் என்றாலும், மடத்தன உருவாக்கம் என்பது இனியும் பிழையல்ல. ஆனால் தீங்காக இல்லாத போதும் இது பாதிப்பு மிக்கதாக அமையும். ஏனெனில் உண்மை எது பொய் எது என கண்டறிய முடியாமல் போகும்” என முடியும் இந்த கட்டுரையின் இறுதி பத்தி, மடத்தன வெளிப்பாடு பற்றிய கோரிக்கைக்கு சாட்ஜிபிடி உருவாக்கித் தந்தது என்பது நம் சிந்தனைக்கு உரியது.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in