சாட்ஜிபிடி சரிதம் –30; ஏஐ உண்டாக்குவது உண்மையான கலையா?... மனித குலத்தை பதற வைக்கும் கேள்வி!

ஏஐ காலத்தில் கலையில் இடம் என்ன?
ஏஐ ஆக்கம் - அவெஞ்சர் நாயகியாக கீர்த்தி சுரேஷ்
ஏஐ ஆக்கம் - அவெஞ்சர் நாயகியாக கீர்த்தி சுரேஷ்

ஏஇ தொடர்பாக எத்தனையோ முக்கிய கேள்விகள் இருக்கின்றன. ஏஐ நுட்பத்தின் வளர்ச்சியையையும், ஆற்றலையும் சீர் தூக்கிப்பார்க்க இந்த கேள்விகள் உதவுகின்றன. அதோடு முக்கியமாக மனித குலத்தின் மீது ஏஐ செலுத்தக்கூடிய தாக்கத்தை புரிந்து கொள்ளவும் இந்த கேள்விகள் கைகொடுக்கின்றன. இந்த கேள்விகளில் பலவற்றுக்கான பதில் இன்னமும் ஆய்வுக்குறியதாக இருக்கும் நிலையில், ஒரு குறிப்பிட்ட கேள்வியை மாற்றிக் கேட்க வேண்டியிருக்கிறது.

இந்த கேள்வி மனித குலத்தை பதற்றத்திற்கு உள்ளாக்குவதாகவும் இருக்கிறது.

ஏஐ உண்டாக்குவது உண்மையான கலையா?... என்பது தான் அந்த கேள்வி!

இதுவரை, ஏஐ நுட்பத்தால் படைப்பூக்கத்தில் ஈடுபட முடியுமா? எனும் கேள்வியே கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், ஆக்கத்திறன் கொண்ட ஏஐ சேவைகளின் அலையால், இந்த கேள்வியையே மாற்றி கேட்க வேண்டியிருக்கிறது. சாட்ஜிபிடியும், அதன் சகாக்களான டேல்- இ மற்றும் மிட்ஜர்னி போன்ற ஏஐ சேவைகளும், எழுத்து வடிவிலான கட்டளைக்கு ஏற்ப நொடிப்பொழுதில் கதைகளியும், ஓவியங்களையும் இன்னும் பிற கலைப்படைப்புகளையும் உண்டாக்கித் தருகின்றன.

இந்த ஆக்கத்திறன் ஏஐ வளர்ச்சியில் பெரும் பாய்ச்சல் என்று தான் சொல்ல வேண்டும். அதாவது, ஏஐ அதற்கான முதன்மை வரம்புகளில் ஒன்றை உடைத்து முன்னேறியிருக்கிறது. இந்த இடத்தில், ஏஐ விளைவு என்று சொல்லப்படும் கருத்தாக்கத்தையும் அறிமுகம் செய்து கொள்வது நல்லது.

ஒரு காலத்தில் ஏஐ-யால் முடியாததாக கருதப்படும் விஷயம் சாத்தியமாகும் போது, அது இனியும் ஏஐ ஆக கருதப்படாமல் போகும் தன்மையே ஏஐ விளைவு என குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, எழுத்து வடிவங்களை கம்ப்யூட்டர் இனம் கண்டு கொள்வது ஒரு கட்டம் வரை மிகப்பெரிய தொழில்நுட்ப சாதனமாக கருதப்பட்டது. ஆனால், இந்த தொழில்நுட்பம் மேம்பட்டு கிறுக்கலாக தோன்றும் மனித எழுத்துகளை கூட அடையாளம் காணும் திறனை, ஒளியியல் உணர் மென்பொருள்கள் பெற்றுவிட்ட நிலையில், இது ஏஐ எனும் அடைமொழியை இழந்து வழக்கமான மென்பொருளாகி விட்டது.

அதாவது ஏஐ தனக்கான சவாலை வென்றுவிட்டால், அதன் திறன் தானியங்கிமயமாக கொள்ளப்படுகிறது. சாட்ஜிபிடியின் பரபரப்புக்கு மத்தியில், இந்த மென்பொருளையும், ஆட்டோகம்பிளிட்டின் மிக மிக மேம்பட்ட வடிவம் என்று சொல்லப்படுவதையும் இங்கே பொருத்திப் பார்க்கலாம். அடுத்து வரக்கூடிய எழுத்தை கணித்து, பயனாளிகள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை முன்கூட்டியே பரிந்துரைக்கும் மென்பொருள்கள் இன்று சர்வசகஜமாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. இதையே சாட்ஜிபிடி சாதனைக்கும் பொருத்திப் பார்க்கின்றனர். செஸ் விளையாடும் மென்பொருளை இனியும் யாரும் வியப்பாக பார்ப்பதில்லை; அதை இயல்பாக எடுத்துக்க்கொள்கின்றனர்.

இது போலவே, பல ஏஐ நுட்பங்கள் இப்போது தானியங்கி பட்டியதில் சேர்ந்து ஏஐ அந்தஸ்தையும் இழந்துவிட்டன.

ஏஐ உலகில் இது சுவாரசியமான விவாதமாகவும் அமைகிறது. ஏஐ நுட்பத்தால் முடியாது என கருதப்படும் விஷயம், சாத்தியமாகி பயன்பாட்டிற்கு வரும் போது, அது இனியும் ஏஐ ஆக கருதப்படுவதில்லை என்பது அறிவார்ந்த கேள்விகளை எழுப்பக்கூடியது. இந்த அளவுகோளின் படி பார்த்தால், இப்போது நாம் ஏஐ நுட்பத்தின் எல்லையில்லா பாய்ச்சல் என வியக்கும் தொழில்நுட்பங்கள் நாளை வெகுசாதாரணமாக ஏற்கப்படலாம்.

ஏஐ விளைவு தொடர்பான விவாதத்தில், இதற்கு முன் ஏஐ-யால் முடியாது என கருதப்பட்ட விஷயங்கள் இப்போது அந்த பட்டியலில் இருந்து விலக்கப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த வரிசையில் தான் ஏஐ-யால் கதை எழுத முடியாது என கருதப்பட்டது. ஓவியம் வரைய முடியாது என திடமான நம்பிக்கை நிலவியது. படைப்பூக்கம் என்பது மனித குலத்தின் தனிப்பெரும் சொத்தாக கருதப்பட்டு வந்தது. ஏஐ-யால் படைப்பூக்கத்தின் சாயலை கூட தொடர முடியாது என்றும் கருதப்பட்டது.

ஆனால், சாட்ஜிபிடி போன்ற ஆக்கத்திறன் ஏஐ சேவைகள் இந்த நம்பிக்கையை தகர்த்திருப்பதோடு, ஏஐ படைப்பூக்கத்தில் ஈடுபடும் நிலையில், கலையின் தன்மை என்ன எனும் கேள்வியையும் எழுப்பியிருக்கிறது.

ஏஐ ஆக்கத்தில் சிம்ரன்
ஏஐ ஆக்கத்தில் சிம்ரன்

லியோ டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் போன்ற நாவலும், ஜான் மில்டனின் கவித்துவமும் படைப்பூக்கத்தின் மேன்மையாக கருதப்பட்டதோடு, மனிதர்களாலேயே இத்தகைய கலைப்படைப்புகளை உருவாக்க முடியும் என்றும் அசைக்க முடியாத நம்பிக்கை இன்று தலைகீழாக மாறி, ஏஐ கலையை எப்படி வகைப்படுத்துவது என்றும், எவ்வாறு எதிர்கொள்வது என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

இதனிடையே, ஏஐ கலைப்படைப்பு போட்டியில் பங்கேற்று விருதை வென்றது, முன்னணி பத்திரிகை ஒன்று ஏஐ ஆக்கத்தை முகப்பு பக்கமாக பயன்படுத்தியது போன்ற செய்திகள் இன்னும் திகைப்பை ஏற்படுத்தின. இனி ஏஐ துணையோடு யார் வேண்டுமானாலும், ஓவியம் வரையலாம் லோகோ உருவாக்கி கொள்ளலாம் என்றெல்லாம் சொல்லப்படுவது ஒரு பக்கம், கலை உருவாக்கம் ஜனநாயகமயமாகி இருக்கிறது என்று பேச வைத்தாலும், இன்னொரு பக்கம் கலை படைப்பூக்கத்தின் எதிர்காலம் பற்றி கவலை கொள்ளவும் வைக்கின்றன.

மிட்ஜர்னி போன்ற ஏஐ சேவைகள் மனிதர்கள் போலவே, ஓவியங்களையும், அனிமேஷன் படங்களையும் உருவாக்கித்தருவது நம்ப முடியாத சாதனையாக நினைக்கப்படுவதற்கு பின்னணியில், இவை எல்லாம் மனித ஆக்கங்களை அடிப்படையாக கொண்டு பிரதியெடுக்கப்படும் நகல்களே தவிர, மூல ஆக்கங்கள் அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

சாட்ஜிபிடி கதை எழுதுகிறது அல்லது கட்டுரை எழுதித்தருகிறது என்றால், கோடிக்கணக்கான மனித ஆக்கங்கள் கொண்டு அதற்காக பயிற்சி அளிக்கப்படுள்ளது என்பதோடு, அந்த ஆக்கங்களின் பொது தன்மையை நூலாக கொண்டு, அதே போன்ற ஆக்கங்களை பயனாளிகள் கோரிக்கைக்கு ஏற்ப உருவாக்கித் தருகிறது. இதை ஒருவித மறுசுழற்சி அல்லது ஏஐ நகலெடுத்தல் என கொள்ளலாம்.

ஆக, ஏஐ நுட்பத்தால் மனிதர்கள் போன்ற மூல படைப்பை உருவாக்க முடியாது என்பதே நமக்கான செய்தியாக இருக்கிறது. என்றென்றும் இதே நிலை தொடருமா? என்பது நம் காலத்து கேள்வியாகவும் அமைகிறது. இதை புரிந்து கொள்ள ஏஐ சிந்திக்கும் விதம் தொடர்பான ஆழமான கேள்விகளையும் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஏஐ ஆக்கத்தில் நிவேதா பெத்துராஜ்
ஏஐ ஆக்கத்தில் நிவேதா பெத்துராஜ்

ஆனால் ஏஐ கலை அப்படி ஒன்றும் புதிதல்ல எனும் வரலாற்று தகவலும் இந்த விவாதங்களுக்கு இடையே ஆறுதல் அளிக்கலாம். சாட்ஜிபிடி 21ம் நூற்றாண்டின் சாதனை என்றாலும், கம்ப்யூட்டர் கொண்டு கலையை உருவாக்கும் முயற்சி 20-ம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஹெரால்டு கோஹன் (Harold Cohen) எனும் கம்ப்யூட்டர் விஞ்ஞானி உண்டாக்கிய ஆரான் ஓவிய மென்பொருளை இதற்கான உதாரணமாக கருதலாம். தேர்ச்சி பெற்ற ஓவியரான கோஹன், பிரிட்டனில் இருந்து தொழில் நிமித்தமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த போது, 1970 களில் கம்ப்யூட்டர்களை அறிமுகம் செய்து கொண்டார். மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் திறனால் ஈர்க்கப்பட்டவர் போர்ட்டான் கம்ப்யூட்டர் மொழி கற்றுக்கொண்டு, புரோகிராமிங் எழுதும் திறனும் பெற்றார்.

ஆனால், அடிப்படையில் ஓவியர் என்பதால், கம்ப்யூட்டரை ஓவியம் வரைய வைக்க முடியுமா எனும் ஆய்வில் ஈடுபட்டு இதற்காக ஒரு மென்பொருளையும் உருவாக்கினார். இந்த மென்பொருள் அடிப்படையிலான டர்டில் எனும் சிறிய இயந்திரம் ஓவியம் வரையக்கூடியதாக இருந்தது. அதன் பிறகு, மேம்பட்ட திறன் கொண்ட ஓவியம் வரையும் மென்பொருளையும் உருவாக்கினார். ஒரு கட்டத்தில் இந்த மென்பொருள் வண்ணங்களை பூசும் திறனையும் பெற்றது. இந்த கலைப்படைப்புகள் கொண்டு கண்காட்சிகள் எல்லாம் நடத்தப்பட்டுள்ளன.

புகைப்பட கலை போன்றவை மனித திறனின் நீட்சியாகவே அமையும் நிலையில், கம்ப்யூட்டரின் திறன் மாறுபட்டது என கருதிய கோஹன் மென்பொருள்களை கொண்டு ஓவியம் வரைய வைப்பதன் மூலம் ஏஐ கலை தொடர்பான முக்கிய சிந்தனைகளை முன்னெடுத்தார்.

சாட்ஜிபிடி மற்றும் மிட்ஜர்னி மென்பொருள்கள் காலத்தில், கோஹன் போன்ற கம்ப்யூட்டர் மேதைகள் ஆக்கங்களை நாம் கவனத்தில் கொண்டாக வேண்டும்.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in