சாட்ஜிபிடி சரிதம் -24; பொய் சொல்லும் சாட்பாட்கள்!

சாட்பாட் பயன்பாடு
சாட்பாட் பயன்பாடு

'கண்ணை நம்பாதே’ என்று சொல்வதை போல சாட்பாட்டை நம்பாதே என சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஏனெனில், ஏஐ திறன் கொண்ட சாட்பாட்கள் பயனாளிகளுடன் உரையாடும் போது சரியான பதில்களை தருவதாக நம்பிக்கொண்டிருப்பதற்கு மாறாக, அவை பல நேரங்களில் பொய்களையும், கட்டுக்கதைகளையும் சொல்லி ஏமாற்றிக்கொண்டிருக்கின்றன.

இப்படி ஏஐ சாட்பாட்கள் எதிர்பார்த்ததற்கு மாறான தகவல்களை அளிப்பது ஏதோ எப்போதோ நிகழும் தவறாக அல்லாமல், அவற்றின் உள்ளார்ந்த பலவீனமாக கருதப்படும் அளவுக்கு தொடர்ச்சியாக, இல்லாத தகவல்களை இருப்பதாக சாட்பாட்கள் அளித்துக்கொண்டிருக்கின்றன. கவலை தரும் இந்த போக்கை ஏஐ உலகில், ஏஐ மருட்சி (A.I Hallucination) என குறிப்பிடுகின்றனர்.

ஏஐ மருட்சி
ஏஐ மருட்சி

மருட்சி அல்லது மாயத்தோற்றத்தை உணரும் தன்மை மனிதர்களுக்கு இருப்பது தான். இல்லாததை இருப்பதாக உணர்வதாக இது பொருள் கொள்ளப்படுகிறது. பகல் கனவு காண்பது போல், நிஜத்தில் இல்லாத்தை காட்சியாக அல்லது ஒலியாக, அனுபவமாக உணரும் தன்மை இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. மாயக்காட்சியை உணர்வது மருத்துவ நோக்கிலான பிரச்சனையாகவும் அமையலாம்.

மனிதர்களின் மாயத்தோற்ற உணர்வை புரிந்து கொள்வதிலேயே பலவித சிக்கல்கள் இருக்கும் நிலையில், இப்போது சாட்ஜிபிடி போன்ற சாட்பாட்களின் எழுச்சியால், பாட்களின் காட்சி பிழையையும் மனிதகுலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இனி வருங்காலத்தில் இது பெரும் சவாலாக அமையும் என ஏஐ வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

எதற்கும் சாட்ஜிபிடி இருக்கிறது எனும் நம்பிக்கை கொண்டவர்கள், ஏஐ சாட்பாட்களின் மாயத்தோற்றம் பிரச்சினையை மனதில் கொள்வது நல்லது.

இல்லாததை இருப்பதாக சாட்பாட்கள் உணரும் பிரச்சினையை இன்னும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் எனில், சாட்பாட்கள் பொய் சொல்லும் தருணங்கள் அல்லது பிதற்றும் தருணங்கள் என வைத்துக்கொள்ளலாம். இன்னும் எளிதாக சொல்வது என்றால், ஏஐ சாட்பாட்கள் தப்பும் தவறுமாக பதில் அளிக்கும் தன்மையும் கொண்டுள்ளன என குறிப்பிடலாம்.

’பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப் பாக்கிற்கு வழி சொல்வது’ எனும் நம்மூர் சொல்வழக்கு போல, கேட்கப்படும் கேள்விகளுக்கு பொருத்தம் இல்லாத பதில் அளிப்பது சாட்பாட்களின் ஆதி பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய இயந்திர கற்றல் அடிப்படையில் பயனாளிகள் உரையாடலில் இருந்து கற்றுக்கொளும் திறனோடு உருவாக்கப்பட்ட மைக்ரோசாப்டின் ’டே சாட்பாட்’, பயனாளிகளின் வில்லங்க பதில்களால் தப்புத்தப்பாக கற்றுக்கொண்டு, ஹிட்லர் தொடர்பாக விபரீதமான கருத்துகளை கூறியதில் பெரும் சர்ச்சையாகி ஒரே நாளில் விலக்கி கொள்ளப்பட்டது. இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன.

சாட்பாட்
சாட்பாட்

மேம்பட்ட ஏஐ நுட்பத்தை கொண்ட சாட்ஜிபிடி சாட்பாட்களின் இத்தகைய பலவீனங்கள் இல்லாமல், மனிதர்களோடு உரையாடி கேட்கும் கேள்விகளுக்கு பொருத்தமான பதில்களை அளிக்கும் திறன் கொண்டதாக கருதப்படுகிறது. முந்தைய எல்லா சாட்பாட்களையும் விட சாட்ஜிபிடி மனிதர்களுடனான உரையாடலில் தன்னை தக்கவைத்து வியக்கவும் செய்திருக்கிறது.

அதே நேரத்தில் சாட்ஜிபிடி தவறாகவும் பதில் அளித்து வருவது தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு வருகிறது.

சாட்ஜிபிடி பிதற்றல் தொடர்பான முதல் பதிவுகளில் ஒன்று, இந்த ஆண்டு ஏப்ரல் மாத அளவில் வெளியானது. அமெரிக்க சட்ட பேராசிரியர் ஒருவர், ஆய்வுக்காக சாட்ஜிபிடியிடம் பாலியல் புகார்களுக்கு உள்ளான சட்ட அறிஞர்கள் தொடர்பான விவரங்களை கேட்டிருக்கிறார். சாட்ஜிபிடி அளித்த பதிலில், ஜோனாத்தன் டர்லி எனும் பேராசிரியர் அலெஸ்கா பயணத்தின் போது மாணவியிடம் தவறாக நடந்து கொண்டு சிக்கியதாக தெரிவித்தது. அதோடு, இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தியையும் ஆதாரமாக சுட்டிக்காட்டியது.

சாட்பாட்
சாட்பாட்

இந்த தகவல் தெரியவந்த போது, பேராசிரியர் டர்லி திகைத்துப்போனார். இது சாட்ஜிபிடி சொன்ன பொய்யான தகவல் என்பது மட்டும் அல்ல, அதனால் சுட்டிக்காட்டப்பட்ட வாஷிங்டன் போஸ்ட் செய்தியும் பொய். இல்லாத தகவலை, இல்லாத செய்தியை கொண்டு சாட்ஜிபிடி இட்டுக்கட்டி சொல்லியிருக்கிறது. இது போன்ற பொய்யுரைகளை தான் ஏஐ பிதற்றல் என்கின்றனர்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் ஏஐ பதற்றல் தொடர்பாக விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. ’ஏஐ சாட்பாட்கள் ஏன் மாயத்தோற்றத்தை கொள்கின்றன?’ என வினவும் அந்த கட்டுரை துவக்கத்தில் ’நியூயார்க் டைம்ஸ் முதலில் எப்போது செயற்கை நுண்ணறிவு தொடர்பாக செய்தி வெளியிட்டது?’ எனும் கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 1956, ஜூலை 10 எனும் சாட்ஜிபிடி பதிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டார்ட்மவுத்தில் நடைபெற்ற முன்னோடி மாநாட்டில், இயந்திரங்கள், சிந்திக்கும் திறன் பெற்று, பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறன் பெறும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர் எனும் தலைப்பிலான செய்தியையும் சாட்ஜிபிடி சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால், 1956ல் மாநாடு நடைபெற்றுது நிஜம் என்றாலும், அந்த செய்தி உண்மை அல்ல. அப்படி ஒரு செய்தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்ஜிபிடி சும்மா அடித்து விட்டிருக்கிறது என்கிறது அந்த கட்டுரை.

இது தான் பிரச்சினை. பல நேரங்களில் சாட்ஜிபிடி, தவறாக பதில் அளிப்பது மட்டும் அல்ல, இல்லாத தகவல்களை கற்பனை செய்தும் சொல்கிறது. நடக்காத சரித்திர நிகழ்வுகளை நடந்ததாக சொல்லியிருக்கிறது. இதற்கு உதாரணமாக, புகழ்பெற்ற நாவலாசிரியர் ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் ரஷ்ய தலைவர் விளாதிமிர் லெனின் சந்திப்பு பற்றி கேட்கப்பட்ட போது, 1916-ல் ஜுரிச்சில் ஜாய்ஸ் மற்றும் லெனின் சந்திப்பு நிகழ்ந்ததாக தெரிவித்துள்ளது. இத்தகைய சந்திப்பும் வரலாற்றில் நிகழவில்லை.

சாட்ஜிபிடியின் இந்த கற்பனை பதில்களை, ஏஐ பிதற்றலாக இந்த கட்டுரை விரிவாக விவாதிக்கிறது. இதனிடையே அமெரிக்காவில் வழக்கறிஞர் ஒருவர் சாட்ஜிபிடி ஆய்வு செய்து அளித்த தகவலின் படி பொய்யான வழக்கை மேற்கோள் காட்டியதாக பிரச்சனையில் சிக்கிய சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது.

ஆனால் இல்லாத தகவல்களை, பொய்யான விவரங்களை பதிலாக சொல்வது சாட்ஜிபிடி மட்டும் அல்ல, மற்ற சாட்பாட்களிடமும் இந்த பிரச்சனை இருக்கிறது. கூகுள் நிறுவனத்தின் பார்ட் சாட்பாட், அறிமுகமான நிலையிலேயே ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியை முதலில் படம் எடுத்ததாக தவறான பதிலை அளித்து சர்ச்சைக்குள்ளானது. செயற்கை நுண்ணறிவு வரலாறு தொடர்பான கேள்விக்கும் தவறான பதில் அளித்துள்ளது.

மைக்ரோசாப்ட் டே சாட்பாட்
மைக்ரோசாப்ட் டே சாட்பாட்

ஏஐ சாட்பாட்கள் இல்லாத பதிலை இருப்பதாக அளிப்பதோடு, இதை மிகுந்த உறுதியோடு அளிப்பது தான் உண்மையில் பிரச்சினை என்கின்றனர் வல்லுனர்கள். சாட்பாட்கள் பயிற்சி அளிக்கப்பட்ட தரவுகளில் இருந்து விலகி, இல்லாத பதில்களை அளிக்கும் போது ஏஐ பிதற்றல் ஏற்படுவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஏஐ சாட்பாட்களை விமர்சிப்பவர்களோ, இந்த பிதற்றலில் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை என்கின்றனர். மொழி மாதிரி அடிப்படையில் பயிற்சி அளிக்கப்பட்ட சாட்பாட்கள், கோடிக்கணக்கான எழுத்து வடிவங்களில் இருந்து கற்றுக்கொண்டு அடுத்த வார்த்தையை யூகிக்கும் வகையில் பதில் அளிப்பதால், அவை அளிக்கும் பதில்களை மெய் எனக் கொள்வது நம் தவறு என்கின்றனர்.

மேலும் இந்த சாட்பாட்கள் இணையத்தில் உள்ள தரவுகள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இணையத்தில் பொய்யான, தவறான தகவல்களும் ஏராளம் என்பதால், சாட்பாட்கள் பதிலிலும் அவை பிரதிபலிக்கின்றன என்கின்றனர். இந்த சாட்பாட்கள் மீது பெரும்பாலானோர் நம்பிக்கை கொள்ளும் நிலையில் இவற்றின் பிதற்றல் மேலும் ஆபத்தாக அமையலாம் என்கின்றனர்.

இந்த பிரச்சனை தொடர்பாக சாட்பாட்கள் மீது மொழியியல் அறிஞர் ’எமிலி பெண்டர்’ முன்வைக்கும் விமர்சனம் இன்னும் வலுவானதாக இருக்கிறது. அவற்றை தொடர்ந்து பார்க்கலாம்.

(சாட்ஜிபிடி சரிதம் தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in