கோகுல்ராஜ் கொலை வழக்கு: பாதிக்கப்பட்டவர் சிறப்பு வழக்கறிஞர் கேட்க உரிமை இருக்கு'

வழக்கறிஞர் ப.பா.மோகன் பேட்டி
திருச்செங்கோட்டில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோருக்கு நடந்த பாராட்டு
திருச்செங்கோட்டில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் வழக்கறிஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோருக்கு நடந்த பாராட்டு

"கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கின் மேல்முறையீட்டில் சிறப்பு வழக்கறிஞர் கேட்க பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது" என வழக்கறிஞர் ப.பா.மோகன் கூறினார்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடந்த கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் வாதாடி வெற்றி பெற்ற ப.பா மோகன் வழக்கறிஞர் குழுவுக்கு ஆதித்தமிழர் கட்சி சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திருச்செங்கோட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற வழக்கறிஞர் ப.பா.மோகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "1995-ம் ஆண்டு விதி நான்கு உப பிரிவு 5 பிரகாரம் பாதிக்கப்பட்டவருடைய தாயார் சித்ரா விசாரணைக்கு முன்பாகவே தான் விரும்பும் வழக்கறிஞர்களை வைத்துக் கொள்கிற உரிமை சட்டப்படி இருக்கிறது. அதை பாதிக்கப்பட்டவர்கள் கேட்டார்கள். முன்பிருந்த ஆட்சி திட்டமிட்டே நியமிக்கவில்லை. கோகுல்ராஜ் கொலை வழக்கில் 40 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட பின்னால் எல்லா சாட்சிகளும் பிறழ் சாட்சிகள். அதற்குப் பின்னால் பார்த்திபன் துணையோடு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க கோரிக்கை வைக்கப்பட்டது. சிறப்பு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டார்.

அதைப்போலவே மேல்முறையீட்டில் சிறப்பு வழக்கறிஞர் கேட்க முழு உரிமை இருக்கிறது. தான் விரும்பியவரை நியமிக்க வேண்டும் என கேட்கலாம் என்ற சமூகநீதி உள்ளது. யாரை வேண்டுமானாலும் சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கலாம். பாதிக்கப்பட்டவர்கள் தனிப்பட்ட முறையில் வழக்கறிஞர் வைத்துக் கொள்ளலாம். எனக்கு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என கோர பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிமை உள்ளது" என்றார்.

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறுகையில், "தமிழ்நாட்டில் நடந்த ஆணவக் கொலைகளில் இரண்டு கொலைகள் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது ஒன்று திவ்யா-இளவரசன் இன்னொன்று கோகுல்ராஜ் வழக்கு. இரண்டிலும் குடும்ப உறுப்பினர்கள் தலையீடு இல்லாமல் சாதி கட்சியினர் சாதி அமைப்பினர் முன்னெடுத்து ஆணவக்கொலை செய்திருக்கிறார்கள் என்பதுதான் இந்த வழக்கின் சிறப்பு.

சாதி ஆணவத்தை வெளிப்படுத்துகிற முறையில் சாதிக் கட்சிகள் சமூக நலத்திற்காக அல்ல தங்கள் சுயநலத்திற்காக இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். இந்த வழக்கை எடுத்து நடத்துகிற காவல்துறையினரும் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள் என நான் நம்புகிறேன். அப்போது இருந்த அரசும் அக்கறை இல்லாமல் இருந்திருக்கிறது என்றுதான் கருதுகிறோம். இப்போது வழக்காடி இருப்பவர்கள் வழக்கறிஞர்கள் என்பதையும் தாண்டி கொள்கை உணர்வோடு அதை வெற்றி பெற்றாக வேண்டும் என்ற அக்கறையோடு போராடியவர்கள். இந்த வழக்கில் அப்படிப்பட்ட வழக்கறிஞர்களை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போகிறபோது நியமிக்க வேண்டும் என்பது வேண்டுகோள். அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். ஏனோ தானோ என்று விட்டுவிடக்கூடாது. தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்வது உயர்நீதிமன்றத்தில் வழக்கு போகிறபோது சிறந்த வழக்கறிஞர் நியமிப்பதற்கு இப்போது இருந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வழக்கு பதியப்பட்டு விட்டது. நடவடிக்கையைத் தொடங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in