தவறு செய்ய துணைபுரிந்தால் யூடியூபும் குற்றவாளியே!

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளைதி இந்து

“ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூபும் குற்றவாளிதான்” என கூறிய உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, இதுகுறித்து சைபர் க்ரைம் டிஜிபி விரிவான விவரங்களைச் சேகரித்து, ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

யூடியூப் சேனல் குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் இதனால் இந்தச் சேனலை தடை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி, “யூடியூபில் வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்” என கேள்வி எழுப்பியதோடு, “யூடியூபைப் பார்த்து துப்பாக்கி செய்வது, கள்ளச்சாராயம் காய்ச்சுவது என பலர் வாக்குமூலம் தருகின்றனர் யூடியூபில் தேவையற்ற பதிவுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என வினா எழுப்பினார்.

தேவையற்ற பதிவுகளை தடுக்க சாத்தியக்கூறு உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, “வெளிமாநிலங்களில் இருந்து தேவையற்ற வீடியோ பதிவு செய்யப்படுகிறது என்றால், அதைத் தடுங்கள். யூடியூபில் எதை வேண்டுமானாலும் ஒளிபரப்பலாமா? யூடியூபுக்கு மொத்தமாக தடை விதிக்கலாமே” என கூறினார்.

மேலும், “யூடியூபில் சில நல்ல விசயங்கள் உள்ளன. இருப்பினும் தேவையற்ற பதிவுகள் செய்யப்பட்டால் தடை செய்யலாமே. தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூபுக்கு ஏன் தடை விதிக்க கூடாது. அறிவியல் வளர்ச்சியை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. சைபர் க்ரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்” என நீதிபதி ஆணை பிறப்பித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in