
சூளகிரி அருகே ஒருவருக்குத் தெரியாமல் மற்றவர் என்று அடுதடுத்து மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா உத்தனப்பள்ளி ஊராட்சி சின்ன லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஞ்சப்பா மகன் கார்த்திக் (23). வேன் டிரைவரான இவருக்கும், உத்தனப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 6 மாதத்தில் குழந்தை உள்ளது.
இந்நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து பல பெண்களிடம் கார்த்திக் பழகி வந்திருக்கிறார். அப்படி பழகிய அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கார்த்திக் திருமணம் செய்து கொண்டார். அவரை வேறு ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடி வைத்துள்ளார். ஒருவருக்கு தெரியாமல் மற்றொருவர் வீட்டுக்கு சென்று வருவதை வாடிக்கையாக வைத்திருந்திருக்கிறார். இதனால் தனக்கு போட்டியாக இன்னொருவர் இருப்பதை இரண்டு பேருமே அறியவில்லை.
இதையடுத்து ரெண்டு பேரை சமாளித்த நம்மால் மூன்றாவதாக ஒரு பெண்ணை சமாளிக்க முடியாதா என நினைத்த கார்த்திக், விவசாய வேலைக்கு செல்லும் பெண் ஒருவரை ஏமாற்றி கோயிலில் வைத்து தாலி கட்டியுள்ளார். அவரையும் தனியே வேறொரு பகுதியில் ஒரு வீட்டில் குடி வைத்து அங்கும் சென்று வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கார்த்திக்கின் இந்த பித்தலாட்டம் குறித்து எதிர்பாராத விதமாக உறவினர் ஒருவருக்கு தெரிய வந்திருக்கிறது. அவர் அதை அவரது மனைவிகளிடம் கூறியுள்ளார். அதைக் கேட்டு அதிர்ந்து போன அவர்கள் மூவரும் கார்த்திக்கின் இந்த அடாத செயலுக்கு முடிவு கட்ட முன்வந்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மூவரும் தங்களது பெற்றோர்களுடன் உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், எஸ்ஐ குமுதா வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நேற்று கார்த்திக்கை கைது செய்தார். பின்னர், அவரை ஓசூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர். இளைஞர் ஒருவர் ஒரே பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.