தமிழகத்தில் எக்ஸ்.இ வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை!

மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழகத்தில் எக்ஸ்.இ வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை!

"தமிழகத்தில் எக்ஸ்.இ வகை கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்" என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் மாணவர்கள் உருவாக்கிய மணல் சிற்ப ஓவியங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 3.2 லட்சத்தில் இருந்து 3.8 லட்சம் வரை கரோனா பரிசோதனை செய்யக்கூடிய திறன் உள்ளது. கரோனா இன்னும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இதை புரிந்து கொண்டு கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

முறையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம். ஏதாவது அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டவர்கள்தான் பொது இடங்களில் வர வேண்டும் என டிபிஎச் ஆணையிட்டு இருந்தது. அந்த ஆணையை கடைபிடித்ததன் வாயிலாக தற்போது 92 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதனால்தான் கரோனா பரவல் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். கரோனா குறைந்துவிட்டதாக நினைத்து மாஸ்க் அணிய தேவை இல்லை, கைகளை கழுவ தேவை இல்லை என்ற எண்ணம் மக்களிடம் வந்துவிட்டது. இது தவறான கருத்து. தமிழ்நாட்டை பொறுத்த வரை எக்ஸ்.இ வகை கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. உருமாறுவது என்பது ஆர்.என்.ஏ வைரசின் பழக்கம். நாம் பதற்றப்படாமல் இருக்க வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.