20 வயசு தான்... பிரசவித்த இளம்பெண் திடீர் மரணம்! அரசு மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டம்!

கல்பனா
கல்பனா

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் திடீரென மரணமடைந்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.  இதனால் ஆத்திரமடைந்த அவரது  உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

உறவினர்கள் போராட்டம்
உறவினர்கள் போராட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி கல்பனா ( 20). கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் கல்பனா கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்துக்காக  கடந்த 5-ந் தேதியன்று விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்குள்ள மருத்துவர்கள் நேற்று காலை 11 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து  ஆண் குழந்தையை எடுத்தனர்.  மயக்க நிலையிலேயே இருந்த கல்பனா, நேற்று மாலை திடீரென உயிரிழந்தார்.  இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது கல்பனாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும், முறையான சிகிச்சை அளித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறி உறவினர்கள் முறையிட்டனர். மேலும் கல்பனாவின் சாவில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது பிரேதத்தை வாங்க அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

இது பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை  சமாதானப்படுத்தினர். பின்னர், கல்பனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டது. உறவினர்கள் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in