சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன்?- தமிழக அரசு விளக்கம்

சொத்து வரி உயர்த்தப்பட்டது ஏன்?- தமிழக அரசு விளக்கம்

சொத்து வரி உயர்த்தப்பட்டது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023-ம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021-2022-ம் ஆண்டில், சொத்து வரி தள வீதங்களை அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும் மற்றும் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்து வரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சீராய்வு அடித்தட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்படாத வகையில் குடியிருப்புகளின் பரப்பளவை 4 வகைகளாக பிரித்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள கட்டிடங்கள், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான பகுதியில் 62.40 சதவீதமும் ஆகவும், பெருநகர சென்னை மாநகராட்சியின் பிற பகுதிகள், மாநிலத்தின் பிற 20 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் 88 சதவீதமும் அமைந்துள்ளது. ஆகவே, பெரும்பாலான மக்கள் 1,200 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவுள்ள வீடுகளில் வசிப்பாதல் இந்த வரி உயர்வு பெருமளவு பாதிப்பினை ஏற்படுத்தாது.

தற்போது, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் நடைமுறையில் உள்ள சொத்து வரியானது, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநகரங்கள் மற்றும் நகரங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாக உள்ளது. எனவே, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளைப் பொறுத்தவரை சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அரசு, ஆணை வழங்கியுள்ளது. மாநகராட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநகர மாமன்றங்களின் தீர்மானம் பெற்று சொத்து வரி சீராய்வு மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.