
விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களைத் திரும்பப்பெறும் திட்டம் நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுவரும் நிலையில், தமிழகம் முழுவதும் ஏன் அதை அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மது பாட்டில்களை, கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்றுவிட்டு, பின்னர் பாட்டில்களைத் திரும்ப ஒப்படைக்கும்போது அத்தொகையைத் திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது.
பாட்டில்களை வனப் பகுதியில் வீசுவதால் விலங்குகள் பாதிக்கப்படுவதைத் தடுக்க இது சம்பந்தமாகத் திட்டம் வகுக்க வேண்டும் எனவும் தவறினால் மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் பாட்டில்கள் திரும்பப் பெறப்படுவதாகவும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ‘அப்படியானால் இந்தத் திட்டத்தை ஏன் தமிழகம் முழுவதும் அமல்படுத்தக் கூடாது?’ என்ற கேள்வியை நீதிபதிகள் முன்வைத்தனர்.
மாவட்ட ஆட்சியரும் டாஸ்மாக் மேலாளரும் அதிரடி சோதனை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் அறிவித்தனர். இது தற்போதுதான் அமல்படுத்தப்பட்டு உள்ளதாகவும் படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து அந்நிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும், ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசுக்கு உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.