படுத்தி எடுக்கும் மழை வெள்ளம்: பாடம் படித்ததா சென்னை?

படுத்தி எடுக்கும் மழை வெள்ளம்:
பாடம் படித்ததா சென்னை?

சென்னை வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது, 2015 வெள்ளம். 6 ஆண்டுகள் கழித்து, மீண்டும் ஒரு இயற்கை இடர்ப்பாட்டைத் தமிழகத்தின் தலைநகரம் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், முந்தைய அனுபவங்களிலிருந்து அரசு ஏன் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனும் கேள்வி மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

2021 வெள்ளத்தைப் பற்றிப் பேசும் முன்பு, 2015-க்கு சென்றுவிட்டு வருவோம். இப்போது போலவே 2015-ம் ஆண்டிலும் நவம்பர் மாதம் முதலே, சென்னையைப் பதம் பார்த்துக்கொண்டிருந்தது பெருமழை. நவம்பர் 15, 16 தேதிகளில் ‘மினி வெள்ளம்’ ஒரு டீசராக வந்துபோனது. ‘மெயின் பிக்சர்’ வந்தது 2015 டிசம்பர் 1-ல். அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பே, பிரிட்டன் வானிலை மையம் தெற்காசிய வானிலை அறிக்கையை வெளியிட்டபோது, சென்னையில் 50 செ.மீ (500 மி.மீ) மழை பெய்யும் என்று பீதியைக் கிளப்பியிருந்தது.

ஒவ்வோர் ஆண்டும் தூர் வாரவும் பராமரிக்கவும் கோடிக்கணக்கான தொகை செலவிடப்படுகிறது. மழையோ வெள்ளமோ வராதபோது பாதிப்பு தெரிவதில்லை. ஆனால், பாதிப்பு வரும்போதுதான் அரசின் பணிகள் குறித்து கேள்விகள் எழுகின்றன.

ஆனால், அன்றைய தமிழக அரசு இதை ‘வதந்தி’ என்ற கணக்கில் சேர்த்துக்கொண்டது. ஆனால், டிசம்பர் 1 அன்று ‘கிளவுட் பஸ்ர்ட்’ என்று சொல்லும் அளவுக்கு, மேகத்தைக் கிழித்துக்கொண்டு சென்னையில் மழை கொட்டத் தொடங்கியது. ஏற்கெனவே, நவம்பர் மாதத்திலும் சென்னையில் மழை பெய்திருந்த நிலையில், ஏற்கெனவே நீர்நிலைகள் நிரம்பிக் கிடந்தன. அதனால், டிசம்பர் 1 அன்று இடைவெளி இல்லாமல் மழை பெய்தபோதுதான், சென்னை இக்கட்டை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர ஆரம்பித்தனர். ஏற்கெனவே ஒரு மாதமாகப் பெய்த மழை, புதிதாக டிசம்பர் 1-ல் பெய்த பெருமழை ஆகியவற்றுடன் எந்த முன்னறிவிப்பும் இன்றி, விளைவுகள் எதைப் பற்றியும் யோசிக்காமல் திறந்துவிடப்பட்ட செம்பரம்பாக்கம் நீர்த்தேக்க நீரும் கைகோர்த்ததால், வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளத்தையும் சேதங்களையும் சென்னை சந்தித்தது.

2015-ல் சென்னையைப் புரட்டிப்போட்ட மழைவெள்ளத்தின்போது...
2015-ல் சென்னையைப் புரட்டிப்போட்ட மழைவெள்ளத்தின்போது...

அன்று சென்னை வெள்ளத்தை ‘மனித தவறுகளால் நேர்ந்த தவறு’ என்றுதான் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இன்றைய துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் விமர்சித்தனர். டிசம்பர் 1-ல், சென்னையில் மட்டும் 49 செ.மீ மழை பெய்திருந்தது. அதைப் பற்றிச் சுட்டிக்காட்டிய பிரிட்டன் வானிலை அறிக்கையை அரசு காதில் வாங்கவில்லை. செம்பரம்பாக்கம் தண்ணீரை முன்கூட்டியே திறந்துவிட, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவைப் பொதுப்பணித் துறை அதிகாரிகளால் அணுக முடியவில்லை என்ற சர்ச்சையும் எழுந்தது. மேலும் நகரமயமாக்கலின் விளைவால், ஏரி, குளங்கள் சகட்டுமேனிக்கு ஆக்கிரமிக்கப்பட்டு கான்கிரீட் குவியல்களாக மாற்றப்பட்டிருந்தது, முறையாக நீர்நிலைகள், மழைநீர்க் கால்வாய்கள் தூர்வாரப்படாதது, பராமரிக்கப்படாதது எனப் பல தவறுகள் பட்டியலிடப்பட்டன.

சென்னை வெள்ளத்தைத் தொடர்ந்து அப்போது நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், குடியிருப்புகள் பலவும் அகற்றப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றமும் இந்த விஷயத்தில் கறார் காட்டியதால், அரசு நிர்வாகம் வேறு வழியின்றி இதைச் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இது தொடரவில்லை என்பதுதான் துரதிர்ஷ்டம். 2015-ல் தென்சென்னைதான் வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. கிண்டியைத் தாண்டிய எல்லா புறநகர்ப் பகுதிகளுமே 25 - 30 ஆண்டுகளில் உருவானவைதான். இதேபோல வடசென்னையிலும் தண்டையார்பேட்டையைத் தாண்டிய பகுதிகள் எல்லாம் குறுகிய காலத்தில் வளர்ச்சி பெற்றவைதான். ஆனால், இங்கெல்லாம் முறையாக மழைநீர்க் கால்வாய்களும் இல்லை. கழிவுநீர் வாய்க்கால்களும் கிடையாது.

2015 வெள்ளத்துக்குப் பிறகு, மழைநீர்க் கால்வாய்கள் அமைப்பதற்கான பணியில் சென்னை மாநகராட்சி இறங்கியது. சென்னை மாநகரம் முழுவதும் 696 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 95 சதவீதப் பணிகள் முடிந்துவிட்டதாகக் கடந்த செப்டம்பரிலேயே மாநகராட்சி அறிவித்தது. ஆனால், 2015 டிசம்பர் 1 அன்று பெய்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அதில் தற்போது பாதியளவு பெய்த மழைக்குச் சென்னையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அப்படியெனில் மழைநீர்க் கால்வாய்கள் என்ன ஆயின?

இதற்கு முக்கியக் காரணம், மழைநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டாலும், அவை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. பல பகுதிகளில் நீர் செல்லும் குழிகள் எல்லாம் மண்ணால் தூர்ந்துவிட்டன. ஒவ்வோர் ஆண்டும் தூர் வாரவும் பராமரிக்கவும் கோடிக்கணக்கான தொகை செலவிடப்படுகிறது. மழையோ வெள்ளமோ வராதபோது பாதிப்பு தெரிவதில்லை. ஆனால், பாதிப்பு வரும்போதுதான் அரசின் பணிகள் குறித்துக் கேள்விகள் எழுகின்றன. முந்தைய அரசு மிகப் பெரிய அளவில் சென்னையில் மழைநீர்க் கால்வாய்களை அமைத்தது. ஆனால், பராமரித்தார்களா என்பது ஒரு கேள்வி. 2-வது அந்தக் கால்வாய்கள் அருகில் உள்ள ஏரி, குளம், ஆறு ஆகியவற்றோடு இணைக்கும்படிதான் அமைக்கப்பட்டன. ஆனால், பல இடங்களில் இணைப்பில் ஏற்படும் சிக்கல் காரணமாகப் பணிகள் முழுமை பெறாமல் போனதும் உண்டு.

இதெல்லாம் சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள பிரச்சினை என்றால், சென்னையின் மத்திய பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகிவிட்டது. கூவம் நதியைச் சீரமைப்பதன் மூலமும், அந்த நதியோடு மழைநீர்க் கால்வாய்களை இணைப்பதன் மூலமும் வெள்ளத்தைத் தடுக்க முடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். கூவம் நதியின் பணிகள் பொதுப்பணித் துறையிடம்தான் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தப் பணிகளைச் சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்படைக்கலாம் அல்லது பொதுப்பணித் துறையும் சுற்றுச்சூழல் துறையும் இணைந்து செயல்படுவதன் மூலம் வெள்ளத்தைத் தடுக்கலாம் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

இதேபோல சென்னை ஏரிகள், குளங்கள் ஆகியவற்றில் வளரும் ஆகாயகங்கை தாமரைச் செடிகளும் வெள்ளத்துக்கு ஒரு காரணம். ஆகாய கங்கை தாமரைச் செடிகளை முழுமையாக அழிக்க பாக்டீரியா போன்ற நுண்ணுயிரி தொழில்நுட்பம் வந்துவிட்டது. ஆனால், அதையெல்லாம் முயன்று பார்க்காமல், வழக்கம்போல் மிதவை புல்டோசர் மூலம்தான் அகற்றும் பணிகள் செய்யப்படுகின்றன. இதுபோன்ற பணிகளைச் செய்ய டெண்டர்கள் விடப்பட்டு, பணம் வீணாவது மட்டும்தான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மேலும் சென்னையின் பழைய வரைபடத்தை வைத்து நீர்நிலைகள் செல்லும் வழியில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிந்து, தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை தொடர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலமே சென்னை மீண்டும் மீண்டும் வெள்ளத்தில் பாதிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க முடியும்.

2015 சென்னை வெள்ளம், அரசு நிர்வாகத்துக்கு மறக்க முடியாத அனுபவப் பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அரசு அதை முறையாகக் கற்றுக்கொண்டதா இல்லையா என்பதுதான் இப்போது கேள்வி. அதற்குப் பதில் தராமல் ஆட்சியாளர்கள் நழுவ முடியாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in