தற்கொலையே அல்ல கூட்டுப் படுகொலை!: கோவை மாணவி வழக்கில் எழும் கேள்விகள்

போராடும் மக்கள், மிதுன் சக்கரவர்த்தி
போராடும் மக்கள், மிதுன் சக்கரவர்த்தி

பெண் குழந்தைகளுக்கு மறைவில் நேரும் ரணங்களைக் கண்ணுறும் கண்கள், நமது வீடுகளுக்கு இல்லை. பெண் குழந்தைகள் சொல்லத் தயங்கும் வலிகளைக் கேட்கும் காதுகள், நமது பள்ளிகளுக்கு இல்லை. பெண் குழந்தைகள் அன்றாடம் சந்திக்கும் அபாயங்களை உணரவியலா தடித்த தோல் நமது சமூகத்துக்கு. இதற்கு மத்தியில் பெண் குழந்தைகள், புதிய புதிய வடிவங்களெடுக்கும் அன்றாட ஆபத்துகளுக்குத் தப்பித் தப்பித்தான் வாழும்படியாகிறது.

யார் குற்றவாளி?

வெளியில் சொல்லவியலாத துயரமும் உள்ளே தாளவியலாத வலியும் ஒரு பெண் குழந்தையை மீளவியலாத மனரீதியான தொந்தரவுக்கு ஆளாக்குகிறது. இதிலிருந்து தப்பிக்கும் ஓர் உபாயம் என்று தற்கொலையை அக்குழந்தை தேர்கிறது. உண்மையில் இது தற்கொலையா என்ன!? அறமாகவும் அரசியலாகவும் இதை நாம் படுகொலை என்றே கருத வேண்டும். ஒருவகையில் கூட்டுப் படுகொலை.

நிராதரவாய்க் கைவிடப்படும் ஒவ்வொரு குழந்தையின் மரணத்திலும், உயிரோடிருக்கும் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பங்களித்த குற்றவாளிகள் என்பதைத் தார்மிகமாய் உணர்வது அறம். எதிர்ப்படும் கரப்பானை அடிப்பதில் திருப்தி கொள்ளும் நாம், கரப்புகள் அடைந்திருக்கும் இருண்ட மறைவிடங்களை அவதானிப்பதில்லை. அந்தத் தேடுதலை நமது மனதிலிருந்தே தொடங்க வேண்டும்.

இதுபோன்ற, வலிமிகுந்த மரணங்கள் நிகழும் போதெல்லாம் நாம் வருந்துகிறோம். கண்ணீர் வடிக்கிறோம். குரல் கொடுக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களோடு ஆறுதலாக நிற்கிறோம். குற்றவாளிகள் மீதான நடவடிக்கைகளை வலியுறுத்துகிறோம். வீதியில் இறங்கிப் போராடுகிறோம். சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். உச்சபட்ச தண்டனையைக் கோருகிறோம். விரைந்து நீதி கிட்டாதா என்று ஏங்குகிறோம். நீதியின் பாதை எத்தனை நீண்டது என்பதை அறிந்திருந்தும்கூட.

கோவை மாணவியின் படுகொலைக்கு நீதி கேட்டுக் களத்தில் நின்றவர்கள், குரல் கொடுத்த ஜனநாயக சக்திகள், முன்னெடுத்த ஊடகங்கள், வலைதள அழுத்தத்தை உருவாக்கியோர் என்று நமது நன்றிக்குரியவர்களின் பட்டியல் நீளமானது. தமிழக அரசும் கூட நம்பிக்கையூட்டும் சட்ட நடவடிக்கைகளை விரைந்து எடுத்துள்ளது.

நம்பகமான இடம் எங்கே?

இந்த நேரத்தில், நாம் எழுப்ப வேண்டிய கேள்விகள் இவைதான். பொன் தாரணியை நாம் ஏன் இழந்தோம்? இதுபோல் இன்று எத்தனை பெண் குழந்தைகள் வெளியில் சொல்லமுடியாமல் தனக்குள் மருகிக் கொண்டுள்ளனர்? அவர்களைச் சீண்டும் மிருகங்கள் வீட்டில், பள்ளியில், தெருவிலென எங்கெல்லாம் பதுங்கியுள்ளனர்? ஆபத்திலிருக்கும் குழந்தைகளிடம் மனம் விட்டுப் பேசுவதற்கான பாதுகாப்பான நம்பகமான ஒரு வெளியை, நாம் உருவாக்கியிருக்கிறோமா? பாலியல் அத்துமீறல்கள் எங்கே எந்த வடிவில் நிகழ்ந்தாலும் அதை அச்சமில்லாமல் சொல்வதற்கான பக்குவத்தை, பயிற்சியை அவசர அவசியமாக மாணவிகளுக்கு அளிக்க வேண்டும்.

”இருபாலர் பள்ளிகளே கூடாது” என்ற அபாயகரமான குரல்!

இதுபோன்ற துயரங்கள் நிகழும் போதெல்லாம் அக்கறையின் பெயரால் உருவாகும் வாக்கியங்கள், சகிக்க முடியாதவையாக உள்ளன. வரலாற்றைப் பின்னோக்கி உந்தும் ஆபத்து கொண்டவை அந்த வாக்கியங்கள். உணர்வுக் கொந்தளிப்பில் இருக்கும் கணத்தில், மனதுக்கு நெருக்கமாகப் பேசும் தொனி கொண்டவை அவை.

ஆனால், கொஞ்சம் நிதானித்துக் கேட்போர், துரிதத் தீர்வை முன்வைக்கும் அந்தக் குரல்வளைகளில் அச்சு அசலாகத் தாலிபான்களின் குரலைத் தரிசிக்க முடியும். ”இருபாலர் பள்ளிகளே கூடாது” என்பதில் தொடங்கி, ”ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை போலப் பள்ளிகளையும் அவ்வாறே தனித்தனியாகப் பாவிக்கலாம்”, ”பெண்கள் மற்றும் இருபாலர் பள்ளிகளில் பெண்களே ஆசிரியர்கள்”, ”பெண்களுக்கு வீட்டிலேயே கல்வி”, ”குழந்தைத் திருமணம் எத்தனை பாதுகாப்பானது பார்த்தீர்களா!” இப்படியாக எத்தனை எத்தனை அக்கறைகள்.

இத்தகு ’உயரிய’ யோசனைகளை சில எழுத்தாளர்களே முன் வைக்கிறார்கள். சக எழுத்தாளர்கள் தீவிரமாக அதன் நியாயத்தை வரலாற்றில் வைத்து நேர் செய்கிறார்கள். தொழில்நுட்பம் ஆசீர்வதித்த வாழ்வு 21-ம் நூற்றாண்டில் இருக்க கலாச்சார விழுமியங்களைக் கொண்டு போய் 16-ம் நூற்றாண்டில் வைப்பது என்னவிதமான விளையாட்டு!?

செய்ய வேண்டியவை

தனது உடல் குறித்த சரியான புரிதலை உருவாக்கும்படியான பாலியல் கல்வியை வடிவமைத்தல், பாலியல் தொந்தரவுகள் எங்கே நிகழ்ந்தாலும் மன உறுதியுடன் முறியடிக்கப் பயிற்சியளித்தல், ஆசிரியர் மாணவர் நல்லுறவை மேம்படுத்துதல், ஆசிரியர் பெற்றோர் நல்லுறவைப் பேணுதல், துறை ரீதியான கண்காணிப்பை உறுதி செய்தல், புகார்களைப் பெறுதல், புகாரளித்தவர் குறித்த ரகசியம் காத்தல், பெற்ற புகாரின் மீது நியாயமான விசாரணை மேற்கொள்ளுதல், உடனடியான நடவடிக்கையை உறுதி செய்தல் என்று நாம் இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம்.

முன்னோக்கிப் பயணிப்பதே மனிதகுல நாகரிகத்தின் இயல்பூக்கம். அதில் தடைகள் வரலாம். சரி செய்தபடி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். உடனடித் தீர்வாக முன்னோக்கிய பயணத்தை ரத்து செய்வது, பாதுகாப்பு கருதி வந்த பாதையில் திரும்புவது போன்ற அரிய வகை ஆலோசனைகளிடம், நாம் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய காலமிது.

கட்டுரையாளர்: பள்ளி ஆசிரியர், ‘உபரி வடைகளின் நகரம்’ உள்ளிட்ட அரசியல் பகடி கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in