குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் எப்போது?

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

பொங்கல் பரிசுப் பணம்தான் இல்லையென்றாகிவிட்டது. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தரப்படும் என்ற வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை திமுக தேர்தலின்போது வாக்குறுதியாக அறிவித்திருந்தது. திமுகவின் இந்த வாக்குறுதி, பெண்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னும் இந்தத் திட்டம் இன்றுவரை தொடங்கப்படவில்லை.

கரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் தொடங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்தத் திட்டம் எப்போது தொடங்கப்படும் என்று மக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இத்திட்டத்துக்கான நிதி ஆதார வழிகளை அரசு சில மாதங்களாக செய்துவருகிறது. இத்திட்டத்துக்கு எங்கிருந்து நிதி திரட்டுவது, எவ்வளவு செலவு ஆகும் உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்தே, “குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் உரிமைத் தொகையைப் பெற பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை” என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், அதன்பின்பும் இந்தத் திட்டம் குறித்த அறிவிப்பு இன்றுவரை வெளியாகாமல் உள்ளது.

பொங்கல் பரிசுப் பணம்தான் இல்லையென்றாகிவிட்டது. இந்த 1,000 ரூபாயாவது கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறும் நிலையில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆண்டுக்கு 25,800 கோடி ரூபாய் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் 2 கோடிக்கும் மேலாக குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் அனைத்துக் குடும்பத் தலைவிகளுக்கும் பணம் கொடுக்க முடியாது என்பதால், தகுதி அடிப்படையில் அளிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சொந்த வீடு வைத்திருப்போருக்கு இந்தத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலும் பொங்கல் அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கரோனா பரவல் நடவடிக்கையில் அரசு இயந்திரங்கள் மும்முரமாக இருப்பதால், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இன்னும் சில மாதங்கள் கூட ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in