தமிழக ஆளுநரின் டெல்லி பயணம் திடீர் ரத்து!- காரணம் என்ன?

தமிழக ஆளுநர் ரவி
தமிழக ஆளுநர் ரவி

நீட் விலக்கு மசோதாவை அரசுக்கே திருப்பி அனுப்பிவிட்டு இன்று டெல்லி செல்ல இருந்த தமிழக ஆளுநர் ரவியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மாணவ, மாணவிகளை காவு வாங்கி வரும் நீட் என்னும் கொடிய அரக்கனை விரட்டக் கோரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் விலக்கு சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதோடு நின்றுவிடாத முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை நேரில் சந்தித்து நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார். மேலும், அமைச்சர் துரைமுருகனும் ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார்.

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், சுமார் 142 நாட்களுக்கு பிறகு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார் ஆளுநர். இதனால், அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவ அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன. ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, நீட் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவை மீண்டும் கூட்டி, நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் நாளை நடைபெறுகிறது.

இதனிடையே, நீட் மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநர் ரவி, 3 நாட்கள் பயணமாக இன்று செல்ல இருந்தார். இந்நிலையில் ஆளுநரின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தமிழக சட்டப்பேரவையில் நாளை மீண்டும் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில், ஆளுநரின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in