வைகையில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு என்ன காரணம்?

வைகையில் 2 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு என்ன காரணம்?

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கக்கூடாது என்ற எச்சரிக்கையை மீறி லட்சக்கணக்கானோர் இறங்கியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால், போதுமான போலீஸார் பாதுகாப்பு பணியில் இல்லாததால் தான் இந்த துயரச் சம்பவம் நடந்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியான இன்று கள்ளழகர் பச்சைப்பட்டுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சேர்ந்த 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றில் இறங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் 11 பேர் மயக்கமடைந்தனர். உடனடியாக இறந்தவர்கள் மற்றும் மயக்கமானவர்களை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்தவர் ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வம் என்பது அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. இறந்த மூதாட்டி யார் என்ற விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும் காயமடைந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். இறந்த மூதாட்டி குறித்தோ, ஆற்றில் காணாமல் போனவர்கள் குறித்தோ 949804234 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் கலாச்சார நிகழ்வில் முக்கியமான சித்திரைத்திருவிழாவில் எப்படி இந்த துயரச்சம்பவம் நடந்தது என்பது குறித்து விசாரித்தோம். "வைகை ஆற்றில் தண்ணீர் அதிகளவில் வருவதால் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வின்போது பக்தர்கள் இறங்க வேண்டாம்" என ஆட்சியர் அனீஷ்சேகர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அதனையும் மீறி லட்சக்கணக்கான பக்தர்கள் ஆற்றுக்குள் இறங்கியதால் இந்த துயர சம்பவம் நடந்தாக போலீஸார் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், போதுமான போலீஸார் பாதுகாப்பு பணியில் இல்லாததே இருவர் உயிரிழப்பிற்குக் காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், " கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழா நடைபெறவில்லை. எனவே, இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் பெரிய அளவு திரளும் என்பதை உணர்ந்து போதுமான அளவு போலீஸாரைப் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவைப் பார்க்க வந்தனர். ஆனால், சுமார் 4 ஆயிரம் போலீசார் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஆற்றிற்குள் இறங்கிய பக்தர்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே உயிரிழப்பு நடந்துள்ளது" என்று கூறினர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in