அரசு கொடுத்த சிம்கார்டுகளை என்ன செய்வது?

நீதிமன்ற உத்தரவால் அரசு ஊழியர்களிடையே குழப்பம்
அரசு கொடுத்த சிம்கார்டுகளை என்ன செய்வது?
உயர்நீதிமன்ற மதுரை கிளை.

தமிழகத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 4 லட்சத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளன. தமிழக அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதுடன், மக்களுக்கும், அரசுக்குமான இணைப்பு பாலமாக அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்நிலையில், உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த ஒரு உத்தரவால், தமிழகம் முழுவதும் அரசு கொடுத்த செல்போன் சிம்களை (ஜியூசி) பயன்படுத்தலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் அரசு ஊழியர்கள் உள்ளனர். இந்த பிரச்சினை ஏற்படக்காரணம் என்ன?

திருச்சி சுகாதார மண்டல அலுவலகத்தில் பணிபுரிபவர் ராதிகா. இவர் பணி நேரத்தின் போது உடன் பணிபுரியும் ஊழியரை வீடியோ எடுத்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ராதிகா மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், "அலுவலக நேரத்தில் அரசு ஊழியர்கள் தேவையின்றி செல்போன் பயன்படுத்துவதும், வீடியோ எடுப்பதும் நல்ல நடவடிக்கை அல்ல. அரசு ஊழியர்களின் இது போன்ற செயல்பாடுகளை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ஒருவேளை ஏதேனும் அவசரமெனில் முறையான அனுமதி பெற்று செல்போனைப் பயன்படுத்த வேண்டும்" எனக்கருத்து தெரிவித்தார். அத்துடன் அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக அரசு ஊழியர் விதிப்படி நடவடிக்கை எடுக்கும்விதமாக தமிழக அரசு விதிகளை வகுத்து சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் நேற்று உத்தரவிட்டிருந்தார்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களுக்கு அரசு சார்பில் செல்போன் சிம்கார்டுகள் (ஜியூசி எண்) வழங்கப்பட்டுள்ளது. அன்றாடம் அரசின் உத்தரவுகளை அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களுக்கு இந்த செல்போன் எண்ணை தான் அரசு ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் அரசு கொடுத்த சிம்கார்டுகளைப் பயன்படுத்தலாமா? வேண்டாமா என்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

செ.சுருளிராஜ்
செ.சுருளிராஜ்

இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில பொதுச்செயலாளர் செ.சுருளிராஜ் கூறுகையில், "கரோனா காலத்தில் இருந்து கடுமையான சோதனைகளுக்கு மத்தியில் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரணமாக நிதிநிலை சரியில்லை எனக்கூறி 7-வது ஊதியக்குழுவின்படி 21 மாத நிலுவைத்தொகை இதுவரை வழங்கப்படாமல் உள்ளது. லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் இருந்தாலும், பணிச்சுமை கருதாமல் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த அரசு ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கலாமா? . அரசு ஊழியர்களுக்கு அரசே சிம்கார்டுகளை வழங்கியுள்ளது. இதன் மூலம் அரசுக்கு அன்றாடம் பல்வேறு தகவல்கள் கொண்டு செல்லப்படுகின்றன. எனவே, அரசு அலுவலகங்களில் செல்போன் பயன்பாடு தடை என்பதை நீதிமன்றம் பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.