தமிழக சிறைகளில் என்னென்ன செய்ய வேண்டும்? தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

தமிழக சிறைகளில் என்னென்ன செய்ய வேண்டும்? தமிழக அரசிடம் அறிக்கை தாக்கல்

மாதிரி சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவை சட்டம் தொடர்பாக தமிழக சிறைத்துறை சார்பில் வரைவு முன் அறிக்கை தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவை சட்டம் 1983ம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்ட சட்டத்தை பின்பற்றி அமல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவைகள் சட்டம் 2023 மேம்படுத்தப்பட்டு உருவாக்கும் பணியில் தமிழ்நாடு சிறைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்திற்கு சிறை விதிமுறைகள் கையேடுகள் உருவாக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைத்துறை அதிகாரிகளால்‌ மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான வரைவு அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிறை சட்டம் 1894 மற்றும் சிறை கைதிகள் சட்டம் 1900 ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சிறைத்துறை கையேடு மற்றும் சிறைத்துறை நிர்வாகம் செயல்பட்டு வந்தது. அதன் பின்பு 1983ம் ஆண்டு மேம்படுத்தப்பட்டு புதிதாக தமிழ்நாடு சிறைத்துறை மற்றும் சீர்திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் அடிப்படையில் நவீன காலத்திற்கு ஏற்ப சிறைத்துறை சட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் பல மாநிலங்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் தமிழக சிறைகளுக்கு ஏற்றவாறு அதிகாரிகள் இந்த புதிய சட்ட முன்வடிவ அறிக்கையை உருவாக்கி வருகின்றனர்.

குறிப்பாக சிறு சிறு மாற்றங்கள் சிறைத்துறையில் கொண்டுவரப்பட்டாலும் அவற்றை சட்டபூர்வமாக மாற்றி முழு வடிவம் கொண்டு வருவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக கைவிடப்பட வேண்டிய பல்வேறு பழைய வழிமுறைகளை மாற்றவும் புதிதாக தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு சட்டத்தை உருவாக்கவும் சிறைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிறைகளின் உயர் பாதுகாப்பை அதிகரிக்கவும் சிறை நிர்வாகத்தை மேம்படுத்தவும், குற்ற நடவடிக்கைகளில் இருந்து சமுதாயத்தை பாதுகாக்கும் வகையிலும் சிறைக் கைதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், திறன் மேம்பாட்டு செயல்களில் ஈடுபடுத்துவதற்கான வழிமுறைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த மாதிரி சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவை சட்டம் வர உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக சிறை நிர்வாகத்தில் தொழில்நுட்பம் பயன்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதற்கான, பல்வேறு தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதற்கும் இந்த சிறைத்துறை சட்டம் மேம்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறைக் கைதிகளுக்கு பயோமெட்ரிக் பதிவேடு, சிசிடிவி கட்டுப்பாடு, கைதிகளை சோதனை செய்ய ஸ்கேனிங் கருவிகள், ரேடியோ ஃப்ரீக்வன்சி கருவிகள், நீதிமன்ற விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆஜராவதும் அவர்களின் வழக்கு விசாரணையை கேட்கும் வகையிலும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கும் பல்வேறு பரிந்துரைகள் சட்ட முன்வடிவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மேலும் சிறைகளில் ஜாமர் போன்ற கருவிகளை பயன்படுத்தி கைதிகள் செல்போன்கள் பயன்படுத்தாத வகையிலும், எலக்ட்ரானிக் டிவைஸ்கள் பயன்படுத்தாத வகையிலும் மாதிரி சிறைத்துறை மற்றும் சீர்திருத்த சேவை சட்டம் 2023 கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். சிறை கைதிகளை தொழில்நுட்ப ரீதியாக கண்காணிப்பதற்கு ட்ராக்கிங் டிவைஸ்களை பயன்படுத்தி தற்காலிகமாக விடுவிக்கப்படும் போதும் சிறை விடுமுறை நாட்களில் கைதிகள் வெளியே செல்லும் போதும் எலக்ட்ரானிக் முறையில் கண்காணிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்காக இந்த சட்டத்தில் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளது.

சிறை கைதிகளின் வயது, பாலினம் சிறைத் தண்டனை பாதுகாப்பு, உடல் மற்றும் மனநலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும் மாதிரி சிறை துறை மற்றும் சீர்திருத்த சேவை சட்டம் 2023 வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது சிறைத்துறை சார்பில் தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து சட்ட முன்வடிவு கொண்டுவரப்பட உள்ளதாகவும் அதன் பின் அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டப்பேரவையில் அமல்படுத்தப்பட்டு அரசாணையில் வெளியிடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in