'நடந்த கலவரங்களுக்கு மாணவியின் தாய்தான் பொறுப்பேற்க வேண்டும்' - பள்ளி செயலாளர் சாந்தி பரபரப்பு புகார்!

சாந்தி
சாந்தி

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியை குறிவைத்து நடத்தப்பட்டிருக்கும் கலவரங்களுக்கு மாணவி ஸ்ரீமதியின் தாய்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியின் செயலாளர் சாந்தி தெரிவித்துள்ளார்

சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி ஸ்ரீமதி என்பவர் கடந்த 14ம் தேதி மாடியில் இருந்து குதித்து இறந்ததாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. ஆனால் மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் இன்று பள்ளி அமைந்திருக்கும் கனியாமூருக்கு சின்னசேலத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சென்ற ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பள்ளி வளாகத்தை சூறையாடி, பள்ளியை தீக்கிரையாக்கினர். இதில் பள்ளியின் முக்கிய ஆவணங்கள் உட்பட அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.

தற்போது பள்ளி வளாகம் முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் பள்ளியின் சேதம் குறித்தும், இந்த விவகாரத்தில் பள்ளியின் நிலை குறித்தும் அந்த பள்ளியின் செயலாளர் சாந்தி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் தெரிவித்துள்ளதாவது.., "மாணவி இறந்த அன்றிலிருந்து காவல்துறை கேட்கும் சிசிடிவி புட்டேஜ் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நாங்கள் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். நானும் பள்ளி தரப்பில் அனைவரும் காவல்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம். நாங்கள் எதையுமே மறைக்கவில்லை. இந்த நிலையில் மாணவியின் தாயார் ஒரு வீடியோவை வெளியிட்டு அதில் இல்லாத பல விஷயங்களை கூறியுள்ளார்.

அதனால் சமூக வலைதளங்கள் மூலமாக எங்கள் பள்ளியைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டு சம்பந்தமில்லாதவர்களை எல்லாம் தூண்டிவிட்டு பள்ளியில் கலவரம் செய்திருக்கிறார்கள். பள்ளியின் பேருந்துகள் என்ன செய்தது? மாணவர்களை மரம் நாற்காலிகள் மேஜையில் ஆகியவை என்ன செய்தது? அவற்றை எல்லாம் எரித்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.

1998 ல் இருந்து இந்த பள்ளியை நல்ல முறையில் நிர்வாகம் செய்து பல ஆயிரக்கணக்கான மாணவர்களை மருத்துவர்களாக, பொறியாளராக, அரசு ஊழியர்களாக உருவாக்கி இருக்கிறோம். இந்த வன்முறையில் பள்ளியில் இருந்து படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் நாசமாக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும்?

அப்படி கஷ்டப்பட்டு உருவாக்கிய நல்ல பெயரை சமூக வலைதளங்கள் மூலமாக கெடுத்து இப்படி ஒரு கலவரத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இதில் எங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க பொதுமக்கள் அனைவரும் உதவ வேண்டும். இந்த கலவரங்களுக்கு ஶ்ரீமதியின் தாய் தான் முழுமையாக பொறுப்பேற்க வேண்டும். அந்த மாணவி மற்றும் அவரது தாயார் ஆகிய இருவரின் செல்போன் பேச்சுக்களை முழுமையாக ஆராய்ந்தால் மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் தெரிய வரும்" என்று சாந்தி அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in