விக்னேஷ் மரணத்தில் நடந்தது என்ன?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

விக்னேஷ் மரணத்தில் நடந்தது என்ன?: சட்டப்பேரவையில் முதல்வர் விளக்கம்

சென்னை பட்டினம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக காலனி காவல்நிலைய போலீஸாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த நிலையில் அவர் போலீஸாரின் கஸ்டடியில் உயிரிழந்தார்.

இந்த பிரச்சினைத் தொடர்பாக சட்டப்பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அப்போது எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், காவலர் தாக்கியே இளைஞர் விக்னேஷ் உயிரிழந்ததாகவும், ஒரு லட்ச ரூபாய் கொடுத்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர காவல்துறை முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தி பேசினார்.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துப் பேசுகையில், "சென்னை மாநகர காவல்துறையில் இரவு வழக்கமாக நடைபெறும் வாகனச் சோதனையில் பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், விக்னேஷ் ஆகிய இருவர் வந்த ஆட்டோவை கெல்லிஸ் அருகே நிறுத்தியுள்ளனர். கஞ்சா போதையில் இருந்த அவர்களை காவல்துறையினர் விசாரித்தபோது சரியான பதில் சொல்லாத காரணத்தால் வாகனத்தையும், அவர்களையும் சோதனை செய்துள்ளனர். அவர்களிடம் கஞ்சா, மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களைக் காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தபோது விக்னேஷ் வரமறுத்ததோடு மறைத்து வைத்திருந்த கத்தியால் காவல்துறையினரை தாக்கவும் முயற்சித்துள்ளார்" என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், " இதன் பின் அவர்களை அழைத்துவந்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மறுநாள் இருவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. காலை உணவு சாப்பிட்ட பின் விக்னேஷூக்கு திடீரென வாந்தி, வலிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்த நிலையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு முறைப்படி அவரது உடல் உறவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு சந்தேக மரண வழக்காக பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், நான்கு காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. எனவே, விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் முறையாக எடுக்கப்பட்டு வருகிறது" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in