உக்ரைனுக்கு மீண்டும் எங்க பிள்ளைகளை அனுப்பமாட்டோம்!

தாயகம் திரும்பிய மாணவர்களின் பெற்றோர் உறுதி
பைல் படம்
பைல் படம்

`உக்ரைனுக்கு எங்கள் பிள்ளைகளை மீண்டும் மருத்துவம் படிக்க அனுப்பமாட்டோம்' என்று தமிழகம் திரும்பிய மாணவர்களின் பெற்றோர் உறுதிபட கூறியுள்ளனர்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தாயகத்தில் கல்வி பயில உதவிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுதொடர்பாக உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பிய மாணவர்களின் பெற்றோர் சிலரின் கருத்து அறிய விரும்பினோம்.

ரமேஷ்
ரமேஷ்

கோவையைச் சேர்ந்த மாணவி வெண்மதியின் தந்தை ரமேஷ் தனியார் நிறுவன ஊழியர். தன் மகள் உக்ரைனில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக தனது சொத்துகளை அடமானம் வைத்துள்ளார். உக்ரைனில் 4-ஆம் ஆண்டு படித்த அவரது மகள், தாயகத்தில் கல்வி பயில விரும்புகிறாரா? என கேள்வி எழுப்பினோம்.

'என் மகள் பத்தாம் வகுப்பில் 492, பிளஸ் 2-வில் 1165 மார்க் வாங்கினாள். நீட் தேர்வில் 2 மார்க் கூடுதலாக பெற்றிருந்தால் தமிழக அரசு மருத்துவக்கல்லூரிகளில் இடம் கிடைச்சிருக்கும். ஆனால், தனியார் கல்லூரியில் தான் இடம் கிடைச்சது. 3.85 லட்ச ரூபாய் என்ற விளம்பரத்தைப் பார்த்து கடன் வாங்கிக் கொண்டு பணம் கட்டப்போனேன். 12 லட்ச ரூபாய் பீஸ் கட்டச்சொன்னார்கள். இன்னொரு காலேஜூல் 10 லட்ச ரூபாய் கேட்டாங்க. இதனால், உக்ரைனுக்கு என் மகளைப் படிக்க அனுப்பி வைச்சேன். போரில் குண்டு விழாமல் என் மகள் இப்ப தப்பியிருக்காள். ஆனால், அன்று நான் வெளிநாடு அனுப்பணும் என்ற முடிவு எடுக்காமல் விட்டிருந்தால், தூக்குப் போட்டு செத்திருப்பாள். அவள் கனவு டாக்டராவது தான்' என்று கூறினார்.

உங்க மகளை உக்ரைனுக்கு மீண்டும் அனுப்புவீர்களா என்று கேட்டதற்கு, தமிழக தனியார் மருத்துவக்கல்லூரி கட்டணக்கொள்ளையைத் தடுத்தாலே என்னைப் போன்ற பெற்றோர், சொந்த நாட்டிலேயே பிள்ளைகளைப் படிக்க வைப்போம். எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உக்ரைன் இப்ப இருக்கிற நிலையில் மீண்டும் படிக்க அனுப்ப முடியாது. உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் தாயகத்தில் படிக்கவைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கை வரவேற்கத்தகுந்தது. ஆனால், கல்விச்சான்றிழ், சாதிச்சான்றிதழ் எல்லாம் உக்ரைனில் சிக்கியுள்ளது. அவற்றைப் பெற்று மாணவர்கள் தமிழகத்தில் கல்வி பயில்வதற்கான தொடர் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்' என்று கூறினார்.

பரமசிவம்
பரமசிவம்

கோவை கண்ணம்பாளையம் பிரிவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பரமசிவம் மகள் ஷீலா, உக்ரைனில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்தவர். உங்கள் மகளை எங்கே இனி படிக்க வைப்பீர்கள் என்று பரமசிவத்திடம் கேட்ட போது, ' மீண்டும் உக்ரைனுக்கு அனுப்ப வாய்ப்பே இல்லை. தமிழ்நாட்டிலேயே படிக்க வைக்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்தால் காலம் முழுவதும் என் குடும்பம் அவருக்கு நன்றி சொல்லும். அத்துடன் உக்ரைன்ல வாங்கிய பீஸ் போல, தமிழகத்திலும் பீஸ் வசூல் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியைச் சேர்ந்த விவசாயி ராசு மகள் கார்த்திகை செல்வி, உக்ரைனில் 2-ஆம் ஆண்டு மருத்துவம் படித்தார். போரினால், தற்போது தாயகம் வந்துள்ளார். அவரது தந்தையைத் தொடர்பு கொண்ட போது வயலில் உழுது கொண்டிருந்தார். அவரது மனைவி சரஸ்வதி பேசுகையில்,' நம்ம நாட்டில் படிக்க வசதியிருந்தால், நான் ஏம்பா, என் பிள்ளையை வெளிநாட்டிற்கு அனுப்புறேன்? நீட் தேர்வில் 450 மார்க் கிடைச்சும் தமிழ்நாட்டில் என் மகளுக்கு சீட் கிடைக்கலை. அதனால், உக்ரைனில் படிக்க வைக்க கஷ்டப்பட்டு வேலை செய்றோம். உக்ரைனில் 2 செமஸ்டருக்கும் சேர்த்தே 3 லட்ச ரூபாய் தான் பீஸ். தமிழ்நாட்டில் அந்த பீஸ் வாங்க மாட்டாங்க. எனவே, தமிழகம் திரும்பிய மாணவர்கள் படிப்பதற்கான பீஸை, தமிழக அரசே கட்டிப் படிக்க வைச்சால் புண்ணியமாகப் போகும்' என்று கூறினார்.

சந்திரன்
சந்திரன்

ஊட்டியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷின் தந்தை சந்திரன் லேப்டெக்னீசியனாக பணிபுரிகிறார். அவர் கூறுகையில்,' எனது மகன் முதலாம் ஆண்டு உக்ரைனில் படிச்சான். அடுத்த வாரம் அவனுக்கு ஆன்லைன் கிளாஸ் துவங்குது. ஆனால், மீண்டும் எக்காரணமும் கொண்டு உக்ரைனுக்கு அனுப்ப மாட்டேன். இந்தியாவோ, வேறு எந்த நாட்டிலையாவது என் மகனை 2-ஆம் ஆண்டு படிக்க முதல்வர் ஸ்டாலின் உதவிட வேண்டும்' என்று வேண்டுகோள் விடுத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in