பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி-க்கு விசாகா குழு அறிக்கை வழங்கப்பட்டது!

தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல்
 பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை: சிறப்பு டிஜிபி-க்கு   விசாகா குழு அறிக்கை வழங்கப்பட்டது!

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த புகார் தொடர்பான விசாகா குழு விசாரணை அறிக்கையை சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு அளித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி-க்கு எதிராக, பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் தடுப்பு சட்டப்படி விசாரணை நடத்த, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் அடங்கிய விசாகா குழு அமைக்கப்பட்டது.

விசாகா குழு விசாரணை நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், விசாரணைக் குழுவை மாற்றியமைக்கக் கோரி உள்துறை செயலருக்கு மனு அளித்து, அது பரிசீலிக்கப்படும் முன்பே விசாரணை துவங்கி விட்டதாகவும், சாட்சிகளின் வாக்குமூலங்களைகூட தனக்கு வழங்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார் சிறப்பு டிஐஜி. தற்போதைய விசாகா குழுவை கலைத்துவிட்டு, முறையாக விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி பார்த்திபன் முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, விசாகா குழு விசாரணை அறிக்கையையும், முடிவுகளையும் மூடி முத்திரையிட்ட உறையில் தமிழக அரசு தாக்கல் செய்தது.


இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, விசாகா கமிட்டி விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்கள் சஸ்பெண்ட் செய்யபட்ட சிறப்பு டிஜிபி-க்கு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

துறை ரீதியான நடவடிக்கை தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டிக்க கூடாது என அரசு தரப்பிலும், வழக்கு முடியும் வரை நீட்டிக்க வேண்டுமென சஸ்பெண்ட்டான சிறப்பு டிஜிபி தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கு குறித்து விசாகா குழு பதில் மனு தாக்கல் செய்யவும், துறை ரீதியான நடவடிக்கையைத் தொடரக்கூடாது என்ற இடைக்கால உத்தரவை நீட்டித்தும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை இறுதி விசாரணைக்காக ஜனவரி 27-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

Related Stories

No stories found.