40 ஆண்டுகால கனவு… நீர்நிலைகளை தூர்வாரி சாத்தியமாக்கிய கிராம மக்கள்!

40 ஆண்டுகால கனவு… நீர்நிலைகளை தூர்வாரி சாத்தியமாக்கிய கிராம மக்கள்!

விருதுநகர் அருகே தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து கிராம மக்கள் தங்கள் 40 ஆண்டுகால கனவை சாத்தியமாக்கியுள்ளனர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட பிரதான் (Pradan) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம், தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு நீர்நிலை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அப்பகுதியிலுள்ள கோவிந்தநல்லூர், அரசப்பட்டி, வெள்ளப்பொட்டல், நக்கமங்கலம், ஈஞ்சார், வேண்டுராயபுரம், வடபட்டி, காளையார் குறிச்சி, ருத்ரப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கண்மாய், குளம், கால்வாய் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தங்களுக்கு அருகிலுள்ள கிராமங்களில் பிரதான் தொண்டு நிறுவனம் செய்து வரும் கண்மாய் மேம்பாட்டுப் பணிகளைக் கேள்விப்பட்டு, அவர்களை கோவிந்தநல்லூருக்கு அழைப்பு விடுத்ததாக கூறும் கிராம மக்கள், நேரடியாக கண்மாய்க்கு வந்து ஆய்வு செய்து, தங்களை ஒருங்கிணைத்து கண்மாய்ச் சங்கம் அமைத்ததாக கூறியுள்ளனர்.

கண்மாய் சீரமைப்புச் செலவில் நான்கில் ஒரு பங்கை கிராம மக்கள் செலுத்தினர். மீதமுள்ள பணத்தை தொண்டு நிறுவனத்தினர் செலுத்தி கண்மாய் வேலையை முடித்துக் கொடுத்தனர். தற்போது குடிதண்ணீர் பிரச்சினை மட்டுமன்றி, விவசாயத்திற்கான தேவையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது என்று கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

கண்மாய்கள் அனைத்தும் பெரும்பாலும் 6 அல்லது 7 நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை. கோவிந்தநல்லூரில் உள்ள பெரியகுளம் கண்மாய், அதற்கு மேலே உள்ள ஆயர்தர்மம் என்ற கண்மாயின் வடிகாலாக உள்ளது. அதுமட்டும் இன்றி மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை நீரும் இந்தக் கண்மாய்க்கு வேறொரு வாய்க்கால் வழியாகவும் வந்தடைகிறது

இங்கு இருக்கும் இரண்டு மடைகள் தண்ணீர் அதிகரிக்கும்போது உடையும் அபாயம் முன்பு இருந்தது. தற்போது அதனை முழுவதுமாக சரிசெய்து, கண்மாயை ஆழப்படுத்தியுள்ளனர். வருங்காலங்களில் பாசனப்பரப்பு அதிகரிப்பதுடன், கண்மாயில் தண்ணீர் இருப்பும் சாத்தியமாகும் என கிராம மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in