`நம் ஒவ்வொருவரின் கடமை இது'- இலங்கைக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார் விஜயகாந்த்

`நம் ஒவ்வொருவரின் கடமை இது'- இலங்கைக்கு 5 லட்சம் நிதியுதவி அளித்தார் விஜயகாந்த்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படும் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

வரலாறு காணாத பொருளாதார சீரழிவைச் சந்தித்துள்ளது இலங்கை. இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் “தி.மு.க சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 கோடியும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒரு மாத ஊதியத்தையும் வழங்குவார்கள். அதுபோல் 40,000 டன் அரிசி, 137 கோடி மதிப்பில் உயிர் காக்கக் கூடிய அத்தியாவசிய மருந்து பொருள்கள் , 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட பொருள்களை ஒன்றிய அரசின் அனுமதியோடு வழங்க முடிவெடுத்துள்ளோம் என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் இலங்கை மக்களுக்கு நிதி உதவி அளியுங்கள் எனத் தமிழக மக்களைக் கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக பொதுச் செயலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில், இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் 5 லட்சம் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இலங்கை மக்கள், பொருளாதார நெருக்கடியைக் கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராகப் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் அகதிகளாகத் தமிழகம் வந்த வண்ணம் உள்ளனர். உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இலங்கை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு உதவிடும் வகையிலும் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in