
காஞ்சிபுரம் அருகே ரூ.5,000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் வட்டம், பினாயூர் கிராமத்தை சேர்ந்த குமார் என்பவர் தன்னுடைய 57 சென்ட் இடத்திற்கு பட்டா மாற்றவும், உட்பிரிவு செய்யவும் கடந்த ஜூலை மாதம் விண்ணப்பித்துள்ளார்
பினாயூர் கிராம நிர்வாக அலுவலர் விடுமுறையில் உள்ளதால் அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலராக செயல்பட்டு வரும் பினாயூர் பொறுப்பு விஏஓ மாரியப்பன் என்பவர் பட்டா மாற்றம் செய்ய குமாரிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத குமார், இதுகுறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் குமாரிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து அனுப்பினர். அதை அவர் எடுத்துச் சென்று அரும்புலியூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுத்தார். அவர் அதை வாங்காமல் அங்கிருந்த கிராம உதவியாளர் கவியரசனிடம் கொடுக்கச் சொன்னார். அதன்படி அவரிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
மாரியப்பன் மற்றும் கவியரசன் ஆகியோரிடம் துணை காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் கீதா ஆகியோர் விசாரணை செய்து வருகிறார்கள். இது அப்பகுதி மக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.