அழகிய தனித்தீவு, படகு சவாரி... மதுரையின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாறும் வண்டியூர் கண்மாய்!

அழகிய தனித்தீவு, படகு சவாரி... மதுரையின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாறும் வண்டியூர் கண்மாய்!

ஆண்டு முழுவதும் தண்ணீர் நிரம்பி காணப்படும் வண்டியூர் கண்மாயை மதுரை மக்களுக்கான சிறந்த பொழுதுப்போக்கு இடமாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம், ரூ.99 கோடியில் ‘டூரிட்ஸ் ஸ்பாட்’ திட்டத்தை தமிழக அரசு ஒப்புதலுக்கு அனுப்பியிருக்கிறது. இதில், படகுப்போக்குவரத்து, அழகிய தீவு, 7 கி.மீ., தொலைவிற்கு சுற்றிலும் நடைபாதை போன்றவை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

மதுரை மாநகராட்சிப் பகுதியில் உள்ள முக்கியமான நீர் ஆதாரங்களில் வண்டியூர் கண்மாய் முக்கியமானது. நகரின் மையத்தில் 650 ஏக்கரில் கடல் போல் பரந்து விரிந்து இந்த கண்மாய் காணப்படுகிறது. சாத்தையாறு அணை கால்வாயில் இருந்து இந்த கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. அந்த கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்ததால் கடந்த காலங்களில் மதுரையில் எவ்வளவு மழை பெய்தாலும் இந்த கண்மாய் எப்போதும் வறண்டு போன நிலையிலேயே காணப்பட்டது. அதனால் மதுரை மாநகரின் நிலத்தடி நீர் ஆதாரமும் பாதிக்கப்பட்டது.

தற்போது நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமிப்புகள் அகற்றி தூர்வாரப் பட்டதோடு, மழை பெய்தால் இந்த கண்மாய்க்கு தண்ணீர் நிரந்தரமாக வருவதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. அதனால், தற்போது ஆண்டு முழுவதுமே வண்டியூர் கண்மாய் நிரம்பி நிற்கிறது.

இந்த கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. மதுரை மக்களுக்கு சினிமா தியேட்டர்களை விட்டால் பெரிய பொழுதுபோக்கு வசதிகள் இல்லை.

அதனால், மாநகராட்சி நிர்வாகம் ரூ.60 கோடியில் இதனை சுற்றுலாத்தலமாக்க ஏற்பாடு செய்தனர். அதன்பின் மாநகராட்சிக்கும், பொதுப்பணித் துறைக்கும் ஒத்துவராததால் இந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டசபையில் வண்டியூர் கண்மாயை மதுரை மக்களின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாற்றப்படும் என அறிவித்திருந்தார். அதனால், தற்போது மாநகராட்சி நிர்வாகம், ரூ.90 கோடியில் வண்டியூர் கண்மாயை மதுரையின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: "வண்டியூர் கண்மாயைச் சுற்றிலும் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகள் பொதுப்பணித் துறையுடன் இணைந்து அகற்றப்பட உள்ளது. அதன்பின் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து இந்த இடத்தை ரசிக்கவும், மாலை - காலை நேரத்தில் பொழுதுப்போக்கவும் சிறந்த இடமாக மாற்றப்பட உள்ளது.

கண்மாயில் குழந்தைகளை மகிழ்விக்க 4 படகுகள் படகு சவாரிக்காக விடப்படுகிறது. கண்மாயின் மையத்தில் அழகிய குட்டி தீவு உருவாக்கப்படுகிறது. தற்போதே ஒரு மேட்டுப்பகுதியான நிலப்பரப்பு தீவு போலவே உள்ளது. அதை சீரமைத்து தனித் தீவு உருவாக்கப்படுகிறது. அந்த தீவுக்கு தொங்கும் மரப்பாலம் அல்லது இரும்பு பாலம் அமைக்கப்படும். பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் இந்த பாலம் வழியாக நடந்தே அந்த தீவு திடலுக்கு செல்வதற்கு திட்டம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கண்மாயை சுற்றிலும் 7 கி.மீ., தொலைவிற்கு பெரியவர்கள், பெண்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு நடைப்பாதை அமைக்கப்படுகிறது. அதில் ஆங்காங்கே அமர்ந்து இளைப்பாறுவதற்கு இருக்கைகள் அமைக்கப்படுகிறது. நடைப்பாதையில் சில ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள், பழக்கடைகள், டீ கடைகள் அமைக்கப்படுகிறது. கரையோரத்தை பசுமைக்காக மரக்கன்றுகள், அலங்கார செடிகளை வைத்து அழகுப்படுத்தப்படுகிறது.

கண்மாயின் மையத்தில் தமிழன்னை சிலை அமைக்கப்படுகிறது. கரைப்பகுதியில் மியூசிக்கல் பவுண்டேசனும் அமைக்கப்படுகிறது. இப்படி குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்களை கவரும் வகையில் மதுரையின் ‘டூரிஸ்ட் ஸ்பாட்’ ஆக வண்டியூர் கண்மாய் மாற்றப்படுகிறது. அரசு ஒப்புதலுக்கு திட்டம் மதிப்பீடு தயார் செய்து அனுப்பியிருக்கிறோம். அரசு ஒப்புதல் வழங்கியதும் இந்த திட்டம் உடனடியாக தொடங்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in