தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...? -ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு வைரமுத்து கேள்வி

வைரமுத்து
வைரமுத்துதி இந்து

குடியரசு தின விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின்போது எழுந்து நிற்காமல் அவமதித்த ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில், ரிசர்வ் வங்கி மண்டல அலுவலகத்திலும் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, அதிகாரிகள் யாரும் எழுந்து நிற்காமல் உட்கார்ந்து இருந்தனர். இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதுகுறித்து அங்கிருந்த செய்தியாளர்கள், அரசின் உத்தரவு உங்களுக்கு தெரியாதா என்று கேள்வி எழுப்பியதால், வங்கி அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திமுக எம்பி கனிமொழி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அதில், “ஒரு அரசாணையைக் கூட படித்துத் தெரிந்துக்கொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும்? இல்லை, இவர்கள் தமிழக அரசை விட மேம்பட்டவர்களா?” என்று வினா எழுப்பியிருந்தார். இதனிடையே, சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ், போலீஸில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், “தாய், தந்தை, ஆசானுக்கு எழுந்து நிற்பீர்களா? மாட்டீர்களா? அது சட்டமன்று; அறம். தமிழ்த்தாய் வாழ்த்தும் அப்படியே. சட்டப்படியும் எழுந்து நிற்கலாம்; அறத்தின்படியும் எழுந்து நிற்கலாம். இரண்டையும் மறுத்தால் எப்படி? தமிழ்த்தாய் மன்னிப்பாள்; சட்டம்...?” என்று வினா எழுப்பியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in