`மாத ஊதியம் 3,978 ரூபாய்தான்; பணி நிரந்தரம் செய்யுங்கள்'- முதல்வரை கேட்டுக்கொள்ளும் கே.பாலகிருஷ்ணன்

`மாத ஊதியம் 3,978 ரூபாய்தான்; பணி நிரந்தரம் செய்யுங்கள்'- முதல்வரை கேட்டுக்கொள்ளும் கே.பாலகிருஷ்ணன்
அண்ணாமலை பல்கலை கழகம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய ஊழியர்களுக்கும், என்.எம்.ஆர் ஊழியர்களுக்கும் பணி நிரந்தர ஆணை வழங்கிட வேண்டும் என்று கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், ``அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் மற்றும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களை நிரந்தரப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டவர்கள் 34 பேர் உள்பட 205 பேர் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு வழங்கப்படும் மாத ஊதியத்தில் பிடித்தம் போக ரூ.3,978 மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த ஆண்டு பணி நீட்டிப்பும் வழங்கப்படாத நிலையில் மிகவும் வேதனையில் இருந்தனர்.

கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை அமைச்சர் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்களுக்கு பணிநீட்டிப்பு வழங்கப்படும் என்றும், காலியிடங்கள் ஏற்படுகிறபோது அந்த இடங்களில் இவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆறுதலாக உள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தபடி தொகுப்பூதியத்தில் பல்வேறு நிலைகளில் பணியில் உள்ள 205 தொகுப்பூதிய ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 18 ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக (என்.எம்.ஆர்.) 140 பேர் பணியாற்றி வருகின்றனர். தாங்கள் நிச்சயமாக நிரந்தரப்படுத்தப்படுவோம் என்ற நம்பிக்கையில் பல்வேறு பொருளாதார சிரமங்களுக்கிடையில் பணியாற்றி வருகின்றனர். மேற்கண்ட 140 தற்காலிக ஊழியர்கள் அனைவரையும் நிரந்தர ஊழியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும்.

எனவே, முதல்வர் மேற்கண்ட பிரச்சினையில் கவனம் செலுத்தி தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 205 பேர் மற்றும் தற்காலிக ஊழியர்களாக (என்.எம்.ஆர்.) பணியாற்றும் 140 பேரையும் சேர்த்து 345 பேர்களை நிரந்தர ஊழியர்களாக பணியமர்த்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in