நிதிச்சுமையில் தவிக்கும் சென்னை பல்கலைக்கழகம்

கூடுதல் சம்பளத்தை வசூலிக்கும் துணைவேந்தர்
நிதிச்சுமையில் தவிக்கும் சென்னை பல்கலைக்கழகம்

சென்னை பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் விதிகளை மீறி பலருக்கும் அதிக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் சம்பளம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்ப வசூல் செய்யும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது. நிதிச்சுமை காரணமாக தமிழக அரசிடம் தற்காலிக நிதியாக 88 கோடி ரூபாய் கோரியுள்ளோம்" என்று பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற கல்லூரிகளில் பணியாற்றும் தமிழ் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று சென்னை பல்கலைக்கழகத்தில் தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவர் ராமசாமி, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மாநில உயர்க்கல்வி மன்றத்தின் துணை தலைவர் ராமசாமி, "சென்னை பல்கலைக்கழகத்தின் தரம் குறைந்துவிட்டதாக உயர் நீதிமன்றம் அண்மையில் கருத்து தெரிவித்திருந்ததன் அடிப்படையில், ஆசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி இன்று தொடங்கியுள்ளது. விருப்பமில்லாத மாணவர்களும் விரும்பும் வகையில் பாடம் நடத்த வேண்டும். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தான் பணியாற்றிய காலகட்டத்தில், திரைத்துறையில் நடிகை சில்க் ஏற்படுத்திய தாக்கம் என்ற தலைப்பில் ஒருவர் ஆராய்ச்சி கட்டுரையை சமர்ப்பித்தார். அதற்கு நான் ஒப்புதல் அளிக்கவில்லை. அங்கிருந்து நான் மாற்றலான அடுத்த பத்து நாட்களில் அந்த ஆய்வுக்கட்டுரை ஏற்றுக்கொண்டு, முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இப்படி எல்லாம் இருந்தால் எப்படி கல்வித்தரம் உயரும்" என்றார்.

இவரை தொடர்ந்து பேசிய சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் கௌரி, "சென்னை பல்கலைக்கழகத்திற்கு நிதிச்சுமை அதிகரித்துள்ளதாக தணிக்கைத் துறை ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த நிர்வாகத்தில் விதிமுறைகளை பின்பற்றாமல், சட்டத்தை மீறி, பலருக்கும் அதிகளவில் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கூடுதல் தொகையை திரும்ப வசூலிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதிச்சுமை காரணமாக தமிழக அரசிடம் தற்காலிக நிதியாக 88 கோடி ரூபாய் கோரியுள்ளோம்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி
சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி

நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு, செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் சார்ந்த புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்துவதன் மூலம் அதிகமான மாணவர்கள் சேருவார்கள். இதனால் பல்கலைக்கழக தரம் உயரும், வருவாய் அதிகரிக்கும். ஆன்லைன் கல்வி மூலமாக புதிய பாடத்திட்டங்களை கொண்டு வரத்திட்டமிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற பல கல்லூரிகளுக்கு கடந்த பல ஆண்டுகளாக இணைப்பு கட்டணம் வசூலிக்காமல் உள்ளதால் அவற்றை வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் தரத்தை மேம்படுத்த ஒவ்வொரு துறை வாரியாக பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. முதல்கட்டமாக இன்றைய தினம் தமிழ் பேராசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளது" என்றார்.

Related Stories

No stories found.